Friday, May 30, 2003

கிடுகு



எங்க ஊரில கீற்றை கிடுகு என்பார்கள். பெயர்தான் வித்தியாசம் மற்றதெல்லாம் ஒரே மாதிரித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். சின்ன வயசில் அம்மம்மா, அம்மா, சித்தி ஆகியோருக்கு உதவியாக வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற சிறிய குளத்துக்கு தென்னோலைகளை இழுத்துக்கொண்டு போவதில் இருந்து, ஒரு ஐந்தாறு நாள்கள் கழித்து இழுத்துக்கொண்டு வருவது, பிறகு எங்க வீட்டில் இருக்கும் பெரியவர்களும் அவங்க சினேகிதமும் சேர்ந்து தென்னோலையை இரண்டாக வெட்டுவார்கள். அப்புறம் எல்லோரும் ஒன்று சேர்ந்து அரட்டை ஒரு பக்கம், ரேடியோ சிலோன் இன்னொரு பக்கமாக கிடுகு பின்னும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடக்கும். அதுல வேற நாங்க கொழும்பில் இருந்து புங்குடுதீவு வந்து (இந்த நேரத்துல இன்னொண்ணு ஞாபகத்துக்கு வருகுது. இது மரத்தடி என்பதால் diversions ஓகே எண்டு நம்புறன்! நான் மூணாம் வகுப்பிலும் என் தம்பி முதலாம் வகுப்பிலும் சேர்ந்தோம், எங்கள் மூதாதையர் படித்த பள்ளிக்கூடத்தில். பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி அது. ஏறக்குறைய எல்லா ஆசிரியர்களும் எங்கள் ஊர் + சொந்தக்காரர்கள், பிரின்சிபால் உள்பட. ஆங்கில ஆசிரியை மட்டும் யாழ்ப்பாணத்தில் இருந்து வருவார்கள்.

எங்கள் பள்ளியில் மூன்றாம் வகுப்பில்தான் a,b,c,d சொல்லிக்கொடுப்பார்கள். கொழும்பில் அப்படி அல்ல. அதுல வேற அப்பா என்னை சேர்த்து விட்டது கான்வெண்டில். அங்கே தமிழ் பேசவிடமாட்டார்கள். ஒரு நாள் எனது மூன்றாம் வகுப்பிற்கு பன்னிரண்டாம் வகுப்பிலிருந்து ஆள் வந்தது, சந்திரமதியை அழைத்து வரும்படி. அங்கு சென்றால் ஆங்கில ஆசிரியை எல்லோரையும் வறுத்துக்கொண்டிருந்தார். என்ன விஷயம் என்றால் வண்ணாத்திப்பூச்சி(பட்டாம்பூச்சி)க்கு ஆங்கிலத்தில் என்ன பெயரென யாருக்கும் தெரியவில்லை. ஆசிரியை வகுப்பு முன்னாடி நிக்க வைச்சு என்னிடம் கேட்டுவிட்டு அவர்களின் வறுக்கும் படலத்தை தொடந்தார்கள். இம்முறை என்னைக்காட்டி. எப்படியோ அது ஒரு பிரச்சனையும் இல்லாமல் முடிந்து விட்டது. இது நடந்து சில நாட்கள் கழித்து நானும் தம்பியும் குளத்தில் ஊறவிட்ட தென்னோலையைப்பார்க்க சென்றோம். பார்த்துவிட்டு சிவனே என்று வீட்டுக்கு வரும்போது ஒரு சைக்கிளில் இரண்டு வில்லன்கள் சர்ரென்று வந்து எங்களை வழி மறித்தனர். யாரு, அந்த பன்னிரண்டாம் வகுப்புல இருந்த இரண்டு பெடியங்கள்தான்(பசங்க). பிறகு, அதில் ஒருவன் என்னுடைய அம்மம்மாவின் உறவினரின் வளர்ப்பு மகன் என்று பிறகு தெரியவந்தது வேறவிஷயம். அந்த பெடியன் எங்களை நோக்கி வந்து "என்ன பள்ளிக்கூடத்துக்கு போனா, போயிற்று ஒழுங்கா வீட்டுக்கு வரத்தெரியாதா? மற்ற வகுப்புக்கெல்லாம் போய் இங்கிலிஷ் சொல்லிக்குடுக்கிற வேலை எல்லாம் வேணாம்" என்று சொல்லிக்கொண்டு வர என்னுடைய நெத்தலிப்பயில்வான் தம்பி அரவிந்தன் (அவரின் பட்டப்பெயர்களில் ஒன்று) என்னை தனக்குப்பின்னால் விட்டு விட்டு(என்னுடைய தோளுக்கும் கீழேதான் அவரின் தலை வரும்) "என்றை மதியக்காவை ஒண்டும் சொல்லாதைங்க." என்று விட்டு அவங்களைப்பார்த்து முறைத்தான். அவர்களும் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, ஒன்று சின்னப்பெடியளிட்ட வீரம் காட்டுறமே என்ற எண்ணமாக இருக்கலாம் அல்லது அந்த ஒழுங்கையில் (அதாங்க சின்ன ரோடு) யாராவது வந்துவிடுவார்கள் என்ற பயமாக இருக்கலாம். தம்பியுடன் சின்ன வயதில் சண்டை (சிலநேரத்தில் இப்பவும்..... என்ன வாய்ச்சண்டை?!) போட்டு கோபத்தில் இருக்கும்போது இந்த நிகழ்ச்சி மனதில் வந்து போகும்.)

back to கிடுகு.

ஆக, நானும் தம்பியும் கொழும்பிலிருந்து வந்து இப்படி கிடுகு கட்ட உதவி செய்வது(கொஞ்ச நாளைக்குப் பிறகு பழகியும் விட்டோம்) குறித்து சுத்து வட்டாரத்தில் உள்ள எங்கள் வயதுக்குட்பட்ட மக்கள் எல்லாம் அவங்க அவங்க வீட்டில் வாங்கிக்கட்டினார்கள். ஆனால் எங்கள் facination எல்லாம் ஒரு ஒரு வருஷம்தான் நீடித்தது. அப்புறம் சாம், பேத, தண்டமெல்லாம் செய்து பார்த்தும் அது எங்களிடம் எடுபடவில்லை. இந்த சமயத்துல தான் அம்மா துரத்தி துரத்தி வர எங்க வீட்டை சுற்றி சுற்றி ஓடிப்பழகிக்கொண்டேன். (ஒரு 500மீ ஓட்டம் ஓடியதற்க்கு சமம் என்று நினைக்கிறேன்.ஒரு குத்துமதிப்புத்தான்) என் அம்மா தொடர்ந்து இருந்தாங்கன்னா P.T உஷா கணக்கில் இலங்கையிலும் ஒரு ஓட்டப்பந்தய வீராங்கனை உருவாகி இருக்கலாம்! :-)

அப்பா....... இந்த கிடுகு பத்திக்கதைக்க வந்திட்டு நான் என்னல்லாம் கதைச்சிற்றன்!!

இந்த கிடுகு கட்டுவதில் எங்களுக்கு பிடித்த விஷயம், சாதாரணமா இவங்க ஊர்வம்பு பேசினா எங்கள துரத்தி விட்டுடுவாங்க. ஆனா இந்த நேரத்தில் கண்டுக்கமாட்டாங்க. மத்தது, என்னமோ திருவிழாக்கு வந்ததுமாதிரி எல்லாரும் ஏதாவது தின்பண்டம் கொண்டு வருவாங்க. சாதாரணமான நேரத்தில அம்மா தரமறுக்கிற மாங்காய்+உப்பு+மிளகாய்த்தூள் (உங்களில் நிறையப்பேருக்கு இந்த அனுபவம் கட்டாயம் இருந்து இருக்கும்.)

அப்புறம் கிடுகை, எங்கள் ஊரில் வேலி அடைக்க, மாட்டுமால் (மாட்டுத்தொழுவம்) கூரை கட்ட, ஓட்டு வீடு இல்லை என்றால் வீட்டுக்கூரைக்கு, மற்றும் மண்ணால் கட்டி சாணியால் மொழுகிய வீடென்றால் வீட்டுக்குப்பக்கத்தில் வேலி கட்ட, கிணத்துக்கு பக்கத்தில் மறைவு கட்ட என்று பல உபயோகங்கள். எங்கள் ஊரிலும் தென்னை எல்லா விதத்திலும் (சமையலுக்கு தேங்காய்யெண்ணைதான்) பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கதாநாயகன் என்னமோ பனைமரம்தான். நேத்திக்கு அப்பவிடம் பேசிக்கொண்டு இருந்தபோது சொன்னார், களப்பாய் என்று ஒரு பாயும் உண்டு. நம்ம ஊரில் ரோட்டில் வாகனங்கள் பயன்படுத்தி சூடு அடிப்பார்களே. அதுமாதிரி வாகனங்களெல்லாம் பயன்படுத்தாம சும்மா மாட்டைப் பயன்படுத்தி போர் அடிக்கறதுக்கு அந்த 20அடி x 10அடி நீள அகலமுள்ள பாய் பயன்படுத்துவார்களாம். கூடவே அப்பா காமெண்ட் வேறு, இதெல்லாம் உங்களுக்கு எங்கே தெரியப்போகிறது என்று!

Wednesday, May 28, 2003

வணக்கம் பலமுறை சொன்னேன்!



வணக்கம் நண்பர்களே!

எழுத்து எனக்கு தொழில் அல்ல. கடந்த பத்துமாதங்களாக யாகூ இணையக்குழுமங்களிலே சேர்ந்த பிறகே, நண்பர்களின் தூண்டுதலால் எழுத விழைந்தேன். அப்படி எழுதியவற்றை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். குறை நிறை கூறினீர்களென்றால் மகிழ்வேன்.