Tuesday, June 03, 2003

வினோதரசமஞ்சரி கொணர்ந்த நினைவலைகள்!எனக்கு எப்போது புத்தகங்கள் மேல் காதல் வந்தது என்று தெரியாது. நான்கைந்து வயதிருக்கும் என்று அம்மாவும் ஐந்தாறு வயதிருக்கும் என்று அப்பாவும் சொல்கிறார்கள். அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்னபாலா கைக்கு கிடைத்ததை விட மற்ற புத்தகங்கள்தான் கிடைத்தன. ஊருக்குப் போனபிறகு என்ன படித்தேன் என்பதை விட எங்கே உட்கார்ந்து படித்தேன் என்பதுதான் இப்பொழுது நினைத்தாலும் புன்சிரிப்பை கொண்டுவரும்.

எங்கள் வீட்டை சுற்றி பெரிய வளவு இருந்தது. நாங்கள் ஊருக்குப் போனபிறகு படலையை எடுத்து விட்டு கேற் போட்டார்கள். படலை என்றால் நீள்சதுர வடிவத்தில் இருக்கும். பனையோலையாலோ தென்னோலையாலோ கட்டப்பட்டிருக்கும். அவற்றைத் தாங்கிப்பிடிப்பதும் பனையிலிருந்தோ, தென்னையிலிருந்தோ எடுக்கப்பட்ட நீளமான உறுதியான பொருள் (பெயர் தெரியவில்லை. அப்போ அதையெல்லாம் யார் கவனித்தார்கள். :) ). பகலில் சும்மா சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் படலையை, இரவில் லாம்பையும் கையில் கொண்டு போய், அம்மம்மாவுடன் கயிற்றால் கட்டி விட்டு வருவோம். தெருவிலிருந்து ஐநூறு மீட்டராவது நடக்க வேண்டும் வீட்டை அடைவதற்கு. போகும் வழியில் ஒரு குண்டு மல்லிகை பந்தல் இருக்கிறது. நாங்கள் ஊருக்குப் போன புதிதில் வசந்த காலத்தில் பூக்கும் பூக்களை ஒன்று விடாமல் பொறுக்கி எவ்வளவு பூக்கள் இருக்கின்றன என்று பார்த்து விட்டு. சித்தி மாலை கட்டித் தந்தது போக மீதியை வீட்டில் இருக்கும் கடவுள் படங்களுக்கு கொஞ்சமும், வீட்டிற்கு ஓரளவு அருகில் இருக்கின்ற இரண்டு கோவில்களுக்கு மீதிப்பூவையும் மாலைகளையும் கொடுப்போம். இரவில் மல்லிகை பூக்கும் வாசனையை முகர்ந்திப்பவர்கள் என்னைப் பொறுத்தவரையில் அதிர்ஷ்டசாலிகள். பறித்த பிறகு வரும் வாசனைக்கும் கொடியில் இருக்கும்போதே பூக்கும் வாசனைக்கு நிறைய வித்தியாசம் இருக்கிறது. இரவில் பூப்பறிக்கப்போனால் வேண்டாம் என்று தடுத்துவிடுவார்கள். பாம்பு மல்லிகை மணத்திற்கு வருமாம் என்று சொல்லுவார்கள். அது உண்மையா என்று இதுவரை தெரியாது. யாரையும் கேட்கவும் இல்லை. ஆனால் ஆங்காங்கே பார்த்திருந்த சாரைப் பாம்புகளும் சுருட்டைப் பாம்புகளும் பயமுறுத்த, இரவில் பக்கத்தில் போவதே இல்லை. வெளிச்சம் குறைந்து கொண்டே போகும் பின்மாலை நேரத்தில் கொஞ்சம் பறித்து வந்து விடுவேன். :)

அந்த மல்லிகைப் பந்தலுக்கு அருகே சில செம்பருத்தி செடிகளும், காயே காய்க்காத எலுமிச்சை செடியும் இருந்தது. இப்போது தெரிகிறது. அந்த எலுமிச்சை இலையை எப்படி பயன்படுத்தலாம் என்று. அப்போதெல்லாம், அம்மம்மாவை அரித்தெடுத்து விடுவோம். எப்போது எலுமிச்சை காய்க்கும் என்று கேட்டு. இத்தோடு சில செவ்விழனி மரங்களும் வாழை மரங்களும் ஒரு மாமரமும் (எங்கள் ஊரில் கறுத்தக்கொழும்பான் என்று சொல்லும் வகை.) இருந்தன. இவற்றிற்கெல்லாம் நிழல் கொடுத்து பரந்து விரிந்திருந்தது வேப்பமரம். அதன் நிழல் வீட்டு வாசல்வரை நீண்டது. அதன் நிழலில் சில சமயம் உறவினர்கள், முக்கியமாக அம்மாவின் அண்ணா வந்தால் இளைப்பாறுவது வழக்கம். எங்கள் ஊரில் வீடுகளில் திண்ணை கிடையாது. ஆனால், இரண்டு மூன்று படிகள் ஏறித்தான் வீட்டிற்கு போக வேண்டும். அந்தப்படிகளின் இரண்டு பக்கமும் நீண்ட பக்கசுவர் எழுப்பி இருப்பார்கள். எல்லா வீட்டிலும் இல்லை. சில வீடுகளில் இருந்தன. ஏறக்குறைய திண்ணை போலவே பயன்பட்டு வந்தது. காற்று வாங்கியபடி அரட்டை அடிக்கலாம். இரவில் கூட்டாஞ்சோறு தின்னலாம். பேய்க்கதை சொல்லச்சொல்லி கேட்கலாம். இப்படி பல உபயோகங்கள்.

வீட்டிற்கு அருகே வலது கோடியில் வேலிக்கு அருகேயும் ஒரு வேப்பம் மரம். அதற்கு பக்கத்தில் கொஞ்ச வாழை மரங்கள், மாதுளை மரங்கள், முருங்கை மரங்கள், தென்னை மரங்கள் இருந்தன. சில சமயம் அந்தப்பக்கம் காய்கறித் தோட்டமும் போடுவார்கள். இரண்டு முறை போட்டதைப் பார்த்திருக்கிறேன். அதற்கு எல்லாம் அருகில் மாட்டுமால் இருந்தது. முன்பு போல நிறைய மாடுகள் இல்லையென்று அம்மம்மா குறைப்படுவார். இரண்டு மாட்டை வைக்கிறது ஒரு மாட்டுமால் தேவையா என்றும் சொல்லிக்கொள்வார். அங்கேதான் அரிசிமா இடித்தல் எல்லாம் நடக்கும். உரல்களும் அங்கேதான் இருக்கும். வீட்டிற்கு இடதுபக்கத்தில் இருக்கும் நிலம் கொஞ்ச இருநூறு முன்னூறு மீட்டர் இடைவெளி விட்டு வேலி கட்டி இருந்தார்கள். அதற்கு அந்தப்பக்கம், நிறைய தென்னைமரங்களும் பனை மரங்களும் இருந்தன. இரண்டு கருவேப்பிலை மரங்களும் நின்றன. கூடவே சில கனகாம்பர செடிகளும் இருந்தன. என் தோழியிடம் வாங்கிக்கொண்டு வந்து போட்ட ஆமணக்கும் வளர்ந்து சிறு மரமாக இருந்தது. இங்கேதான் பனந்தோப்பிலிருந்து கொண்டு வந்த பனம்பழக் கொட்டைகளை புதைப்பார்கள். இந்தப் பக்கத்திலும் வேலியோரமாக ஒரு பனைமரம் இருந்தது.

வீட்டிற்கு பின்பக்கத்திலும் வேலியை ஒட்டி ஒரு வேப்பமரம். அருகே சில தென்னை மரங்கள் இருந்தன. இவற்றிற்கு அருகே ஒரு மாமரம் இருந்தது. வீட்டுக் கூரைக்கு மேல் அதன் கிளைகள் வளர்ந்து இருந்தன. சில சமயம் இரவில் விழித்து இரவு வெளிச்சத்தில் அதன் கிளைகள் ஆடுவது கண்டு வெருண்டதும் உண்டு. இந்த மாமரம் முன்பக்கம் இருந்த மாமரத்தின் வகை என்றாலும், எங்களுக்கெல்லாம் இது விசேஷமானது. ஏன் தெரியுமா? இந்த மாமரத்தில் எங்கள் தோள் உயரத்தில் ஒரு கிளை இருந்தது. மாமரத்தின் கீழ் ஒரு மரத்தாலான பெட்டி போட்டிருந்தோம். அதில் ஏறி அந்தக்கிளையில் ஏறிவிடுவது சுலபம். அங்கிருந்து அருகிலிருக்கும் இன்னொரு கொப்பிற்கு தாவினால், அங்கேதான் என்னுடைய சிம்மாசனம் இருந்தது. மூன்று கிளைகள் ஓரிடத்தில் இருந்து வெளியே கிளம்பியது. ஆகவே அங்கே நடுவில் ஒருவர் உட்கார்ந்து... சரி ஒரு சிறுவன்/மி உட்கார்ந்து கொள்ள இடம் இருந்தது. ஒரு கிளை முதுகு சாய்த்துக் கொள்ள வசதியாக இருந்தது. இன்னொரு கிளை எனக்காகவே கொஞ்சம் சரிவாக வளைந்து இருந்தது. அங்கே என்னுடைய தின்பண்டங்களையோ (வேறு என்ன? அப்பப்பா அம்மம்மாவை தாஜா பண்ணி வாங்குகிற மாங்காயும் மிளகாய்த்தூளும், பனங்காய் பணியாரம், பினாட்டு போன்றவை.), புத்தகங்களையோ வைத்துக்கொள்ளலாம். அதற்கு பிறகு என்ன ஜமாய்தான். பின்னேரம் சூரிய வெளிச்சம் குறையும் வரை அங்கேதான் என்னுடைய ராஜாங்கம். வீட்டுக்காரர் வந்து கூப்பிடும்வரை நகரமாட்டேன்.

அதுவும் நான் அங்கே ஆடாமல் அசையாமல் இருப்பதால், என்னைப்பார்த்து பயப்படாமல் துள்ளி விளையாடும் அணில்கள், மாம்பழத்தை கடிக்க வரும் கிளிகள். அணில் கோதிய மாம்பழம் சாப்பிட்டு இருக்கிறீர்களா? அணில் ரொம்ப கொஞ்சமாக கோதி இருந்தால் அதை நன்றாக வெட்டி விட்டு தருவார்கள்.

விநோதரசமஞ்சரி பற்றி பேச ஆரம்பித்ததும் முதலில் என் முன்னே வந்துபோன நினைவுகள் அந்த மாமரம்தான்.

Comments on "வினோதரசமஞ்சரி கொணர்ந்த நினைவலைகள்!"

 

post a comment