Thursday, August 12, 2004

என்னுடைய கருத்து

கடந்த சில தினங்கள் கொஞ்சம் வித்தியாசமாகவே செலவழிந்தன.

வலைப்பதிவுகளில் வழமையாக நடக்கும் சொல்லாடல்களோடு சொல்ல வாய் கூசும்/யோசிக்கவே மனதும் உள்ளமும் எரியும் அசிங்கமும் நடந்தேறியிருக்கிறது.

எல்லாம் சாதாரணமாகத்தான் தொடங்கியது. சந்திரவதனா, ஈழத்தில் இந்திய அமைதிப்படையினர் செய்த கொடுமைகளை அனுபவித்தவர்களும் அவர்களுக்கு நெருக்கமானவர்களும் அதைப்பற்றி நேரடி அனுபவமாகவோ, படைப்பாகவோ எழுதி, அவற்றையெல்லாம் சேகரித்து புத்தகமாகப் போட விரும்பும் ஓர் அமைப்பிடம் கொடுக்கலாம் என்று சொன்னார். அவ்வமைப்பினர் அவருக்கு அனுப்பியிருந்த விவரங்களையும் தமது இணையத்தளத்தில் பகிர்ந்துகொண்டார். 'தோழியர்' குழு வலைப்பதிவிலும் அவருடைய மடல் வந்திருந்தது.

கடந்த ஞாயிறு ஆகஸ்ட் 8, வலைப்பூவில் சந்திரவதனா இட்டிருந்த சுட்டியினைத் தொடர்ந்து சென்று விவரங்களை அறிந்த சுந்தரவடிவேல் தாம் மாணவராக இருந்தபோது இந்திய அமைதிப்படையில் பணிபுரிந்த ஒருவர் தமது பள்ளியில் சொன்னதைப் பகிர்ந்துகொண்டார். அத்தோடு, அந்நேரத்தில அதை அமைதியாகக் கேட்டுக்கொண்டதற்கு வெட்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். ஏனைய வலைப்பதிவுகளில் இந்திய அமைதிப்படையினர் செய்த அட்டூழியங்களைப் பற்றி வந்திருந்ததையும் குறிப்பிட்டு சுட்டியும் கொடுத்திருந்தார். அவருடைய வலைப்பதிவில் அவ்வளவுதான் இருந்தது. இந்திய அமைதிப்படையினரில் ஒருவர் சொன்ன செய்தியும், பெண்கள், குழந்தைகள் என்று அமைதிப்படையினரால் பலிகொடுக்கப்பட்டவர்கள் பற்றிய சோகமும். இலங்கை இனப்போராட்டம் என்று சொன்னதுமே இராஜீவ் படுகொலையைப் பற்றிச் சொல்லி இந்திய அமைதிப்படையினர் செய்த அசிங்கங்களை மூடி மறைப்பது கூடாது என்று சொல்லியிருந்தார்.

அவருடைய பதிவில் இப்போது மணிப்பூரில் நடந்ததைப் பற்றி ஒரு கருத்து வந்திருந்தது.


-o0o-

நாமெல்லோரும் ஒரேமாதிரி எப்போதும் சிந்தித்துக்கொண்டு ஒரே விருப்பு வெறுப்புகள் கொண்டிருந்தால் பத்து நிமிடம்கூட நம்மால் தாக்குப்பிடிக்க முடியாது. சீக்கிரம் முடியைப் பிய்த்துக்கொள்ளும் நிலைக்கு வந்துவிடுவோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துகள் இருக்கும். சிற்சில கருத்துகளில் ஒத்த நிலை எடுக்கும் சிலர், வேறு சிலவற்றில் முற்றிலும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பார்கள். காலப்போக்கில், விஷயம் அறிந்து தெளிவாகி கருத்துகளை மாற்றிக்கொள்ளப்போவதில்லை. அப்படிப்பட்ட சந்தர்ப்பமோ சூழ்நிலையோ சீக்கிரம் வரவும் போவதில்லை என்று தெரிந்துகொண்டு 'உன் கருத்து உனக்கு; என் கருத்து எனக்கு' என்று போகிறார்கள். ஒருமித்து இயங்கக்கூடிய விஷயங்களில் சேர்ந்து இயங்குகிறார்கள்.

இதுதான் என்னுடைய புரிதல். இதுதான் எனக்குப் பிடித்த விஷயமும். என்னுடைய நண்பர்கள், சகோதர சகோதரிகள், உறவினர் எல்லோருடனும் மேற்கூறிய அணுகுமுறையையே பாவித்து வருகிறேன்.

-o0o-

சுந்தர் வடிவேலுவின் கருத்துக்கு மாற்றுக்கருத்துக்கொண்ட 'மூக்கு' சுந்தர் அவருடைய வலைப்பதிவில் ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியிருந்தார். ஒவ்வொருவரும் தத்தம் வண்ணங்களையும் புரிதல்களையும் கொண்டு அவரவருக்கேற்ற வண்ணக் கண்ணாடிகள் வழியாகப் பார்ப்பதுண்டல்லவா? அதுபோல சுந்தர் அவருடைய புரிதலின் படி கடிதமும் எழுதி இருந்தார். என்னுடைய பார்வையில் சுந்தர்வடிவேலு 'எந்தவொரு குற்றமும் அறியாத நீராயுதபாணிகளான பெண்கள், ஆண்கள் சிறுவர்களை இந்திய அமைதிப்படையினர் பல்வேறு சித்திரவதைகள் செய்து கொன்றொழித்தது' என்று எழுதியிருந்த பதிவு; 'மூக்கு' சுந்தருக்கு புலிவரிப் பார்வையாகத் தெரிந்து அரசியலை இழுத்து, வழக்கம்போல இராஜிவ் படுகொலையை இழுத்து (அது ஒன்றே போதும் எல்லோரையும் சிப்பிலியாட்ட) தனியொரு மனிதன் செய்த காமக்கொடூரங்களை எப்படி இந்திய இராணுவத்தின்மீதே சுமத்தலாம் என்ற கொதித்து பிறகு எப்போதையும்போல 'புலிகளை சனநாயகப் பாதைக்குத் திரும்பச் சொல்லுங்களேன். ஆயுதங்களைத் தூக்கியெறியச் சொல்லுங்களேன்' என்ற பல்லவியோடு முடிந்திருந்தது.

'மூக்கு' சுந்தருடைய கருத்து அவருடையது. சுந்தரவடிவேலுவின் கருத்தும் கவலையும் வெட்கமும் அவருடையது. இரண்டும் அவரவருக்கான கருத்து சுதந்திரம்.

-o0o-

செப்டம்பர் பதினொன்றுக்குப் பிறகும் முன்பும் அமெரிக்கா நடந்துகொள்ளும் விதத்தைக் கண்டித்தவர்கள் இங்கே அநேகர்(நான் உட்பட). ஈராக்கில் தாக்குதல் செய்யத் தொடங்கிய அமெரிக்க இராணுவம், அங்கேயிருக்கும் சிறைச்சாலையில் ஈராக்கியர் சிலரைப் பிடித்து வைத்திருந்தது. அதில் சிலரை பலவிதமான முறைகளில் கொடுமைப்படுத்தியது. அவற்றையெல்லாம் மூடி மறைக்காமல் உலகத்திற்குச் சிலர் வெளிக்கொணர்ந்தனர். வெளிக்கொணர்ந்தவர்கள் வேறு யாருமில்லை. அமெரிக்க இராணுவத்தில் சிலரே! இப்போது அதற்கான விசாரணைகள் நடந்துகொண்டு இருக்கின்றன.

என்னுடைய கேள்வியெல்லாம்(முதலில் இருந்தே) பொதுமக்களைக் காப்பதற்கு என்று சென்ற இந்திய அமைதிப்படை அவ்வாறு செய்ததா? Indian Peace Keeping Force என்றழைக்கப்பட்ட இந்திய இராணுவம், இலங்கையில் பரவலாக எல்லோராலும் 'இந்திய பிள்ளை கொடுக்கும் ·போர்ஸ்' என்று அழைக்கப்பட்டதே. ஏன்? நெருப்பில்லாமல் புகைவதில்லை. அதற்கான விசாரணைகள் ஏதாவது நடந்தனவா?

பொதுவாக இன்னொரு நாட்டிற்குப் போர் தொடுக்கவே இராணுவம் அனுப்பப்படும். அப்படிச் செல்லும் இராணுவத்திற்குக் கூட எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று தெளிவான விதிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும். எந்த ஊர் இராணுவத்திலாவது போகும் இடத்தில் பெண்களை நாசமாக்குங்கள், சிறுமிகளைப் பலாத்காரமாக்குங்கள் என்று சொல்லி அனுப்புகிறார்களா? அவ்வாறு செய்பவர்களையும் விசாரணைக்கல்லவா உட்படுத்துகிறார்கள்! சிங்களக் காடையினருக்குக் எந்த விதத்திலும் தாம் சளைத்தவரல்ல என்றல்லவா இந்த அமைதிப்படையினர் (இப்படி அவர்களைக் கூப்பிடவே இயலாது!) நடந்துகொண்டிருக்கிறார்கள்.

இப்படிச் சில விஷயங்கள் நடப்பதுதான். அதை நான் பொருட்படுத்தாமல் செல்ல வேண்டும் என்று சிலர் சொல்லக்கூடும். சொல்லியிருக்கிறார்கள். அப்படிப் பொருட்படுத்தாமல் செல்வதென்றால் ஒன்று நேரடியாகப் போருக்கு என்று வந்திருக்கவேண்டும். பாதுகாக்க வருகிறோம் என்று வந்து திட்டமிட்டு அசிங்கப்படுத்தக்கூடாது. (It's a natural urge என்று யாரேனும் சொல்வீர்களாயின், மத்திய கிழக்கு நாடுகளில் அம்மாதிரிக் குற்றங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கிறார்கள் என்று நினைவுபடுத்திக்கொள்ளுங்கள் என்று சொல்வேன்.)

-o0o-

'மூக்கு' சுந்தரின் வலைப்பதிவில் அந்தப் பகிரங்கக் கடிதத்தைப் பார்த்ததுமே எனக்குத் தெரியும். எப்படியும் ஒரு சுற்று சொல்லாடல் நடக்கப்போகிறது என்று. அப்பாவிப் பொதுமக்களுக்காகப் பேசினாலும் அதற்குப் புலிவரி பூசி புலிவால் கட்டுவார்கள் என்றும் தெரியும். சாதாரண மடல்களுக்கே 'நீ புலி ஆதரவாளர்' என்று மடல் அனுப்பும் சமூகமல்லவா நமது தமிழிணையம். அப்படியே நடந்தது. இது ஒன்றும் புதிது அல்ல.

யார் யார் வருவார்கள் என்று நினைத்தேனோ அவர்களெல்லாம் வந்தார்கள். தாம் கையோடு கொண்டு வந்திருந்த வண்ணக் கண்ணாடிகளை அணிந்துகொண்டு பேசிச் சென்றார்கள்.

-o0o-

இந்திய அமைதிப்படையினர் ஈழத்தில் செய்த அட்டூழியங்களைப் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடைய உற்றார் உறவினரிடம் இருந்து நேரடியாகவே கேட்டிருக்கிறேன். அதையெல்லாம் இங்கே சொல்லிக் 'கிளுகிளுப்புக் குள்ளாக்குவது என்னுடைய நோக்கமல்ல'.

பாதிப்புக்குள்ளானவர்களிடம் இருந்து விஷயங்களைக் கேள்விப்பட்டதுபோலவே, மற்றத் தரப்பிலிருந்தும் விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடைய நண்பனொருவனின் மாமா, மருத்துவர். இந்திய இராணுவத்தில் பணியாற்றியவர். இந்திய அமைதிப்படையோடு ஈழத்துக்கு அனுப்பப்பட்டவர். தெலுங்கு பேசும் சென்னைவாசியான அவரிடம் இருந்து எத்தனையோ விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறேன். சென்னை திரும்பியதும் எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரமாக இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார் அவர். காரணம் நான் சொல்லத் தேவையில்லை.

-o0o-

நம்மூரில் 'ஈவ்டீசிங்' என்றால் எப்படி அலறுவோம் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதுவும் நம்முடைய பேருந்துகளில் பயணிப்பதுபோன்ற நரகம் வேறு ஒன்றுமில்லை. ஒவ்வொரு பெண்ணும் நிஜமாகப் பயப்படும் பயணங்கள் அவை. இதைத் தவிர்ப்பதற்காகவே சொந்த வாகனங்கள், ஆட்டோ, மினி பஸ் என்று நம் வீட்டுப் பெண்களைப் பாதுகாப்பாக அனுப்புகிறோம் நாம். அப்படிப் பேருந்தில் சென்றுதானாக வேண்டுமென்றால், எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்கிறோம்.

ஈவ்டீசிங்'கில் ஒரு சரிகா ஷா இறந்துபோனால், எல்லோரும் நிலைகுலைந்து போகிறோம்.

இதைத்தான் நான் 'மூக்கு' சுந்தரின் வலைப்பதிவப் பின்னூட்டப்பெட்டியில் நினைத்துப் பார்க்கச் சொல்லி சொன்னேன்.

உடனே, ஈழத்துத் தமிழ் பெண்களை நினைத்து அனுதாபமோ, ஆதரவுக் கரமோ நீட்டுங்கள் என்று கேட்கிறேன் என்று நினைக்காதீர்கள். அவரவர் வீட்டுப் பெண்களை எத்தனை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புகிறோமோ, அதுபோலத்தானே அடுத்தவன் வீட்டுப் பெண்களும்?

சொந்த அரிப்பு எடுத்தோ, தூண்டுதல் காரணமாகவோ, பொதுமக்களைக் காக்கவென்று வந்த இராணுவத்தில் ஒரு பகுதியினர் வன்முறைகளில் ஈடுபட்டால் மற்றவர்கள் எல்லாம் எங்கே போயிருந்தார்கள்? என்ன செய்துகொண்டிருந்தார்கள்? ஈராக்கில் நடந்ததை வெளியில் கொண்டுவந்த அமெரிக்க இராணுவத்தினரைப் போல ஓரிருவர் கூடவா இந்திய இராணுவத்தில் இருக்கவில்லை?

நான் இங்கே இலங்கையில் இருந்து திரும்பி வந்தபோது காவிக்கொண்டு வந்த நகைகளைப் பற்றியெல்லாம் பேசவில்லை. செல்வம் ஒரு நாள் வரும்போகும். ஆனால், தத்தம் வீட்டுப் பெண்டிரைக் கண்ணின் இமைபோலப் பாதுகாக்கும் ஆண் சிங்கங்கள், அடுத்தவன் வீட்டுப் பெண்டிரை துவம்சம் செய்வதைப் பற்றிப் பேசுகிறேன். ஒட்டு மொத்த இராணுவமும் செய்யவில்லை என்றால், செய்த அந்த புல்லுருவிகளைப் பற்றி மற்றவர்கள் எங்கேனும் புகார் செய்தார்களா? விஷயம் தெரிந்த அதிகாரிகள் என்ன செய்தார்கள்?

இதையெல்லாம் கேட்கப்போனால், புலி ஆதரவாளர் என்ற பட்டம் கொடுக்கத் தயாராக அநேகர் இருக்கிறார்கள்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டாலும் 'ஹிரோஷிமா நாகசாகி'யில் பாதிப்படைந்தவர்களின் குடும்பத்தினர் அவர்களின் துயரங்களை மறந்துவிட்டார்களா? மன்னித்து விட்டார்களா? மன்னிக்கவும் மறக்கவும் முயற்சிக்கிறோம். மன்னித்தாலும் மறக்க முடியவில்லை என்று அந்த ஜப்பானியர் புலம்புகிறார்களே!

உலகெங்கும் ஐம்பது ஆண்டுகளில் மனிதர்களின் அணுகுமுறையும், சிந்தனையும் கொஞ்சம் கொஞ்சம் மாறிக்கொண்டே வருகிறது. ஆப்ரிக்காவில், தாம் ஆட்சி செய்த நாடுகளுக்கு உதவி செய்ய முயலும் ஐரோப்பிய நாடுகள் தாம் முன்பு செய்த அட்டூழியங்களை மறைப்பதில்லை. இங்கிலாந்து போன்ற நாடுகள் பேசாமலிருந்தாலும் நெதர்லாந்து போன்ற நாடுகள், முன்பு நடந்ததை ஒத்துக்கொள்கிறார்கள்.

-o0o-

காலப்போக்கில் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர மற்றவர்களுக்கு காலம் மருந்து கொடுத்து விடுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் காயங்கள்தான் ஆறுவதில்லை. ஒரே சமூகத்தில் கூட, பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களால் வேதனைக்குட்படுத்தப் படுகிறார்கள். போக்கிடம் இல்லாத அந்த அபலைகளால் மன்னிக்கவோ மறக்கவோ முடியும் என்று நினைக்கிறீர்களா? எப்படியாவது அக்காயங்களை ஆற்றும் முயற்சியாகத்தான் சந்திரவதனா சொன்ன விஷயத்தைப் பார்க்கிறேன்.

காயம் ஆறவேண்டும். அடுத்த சந்ததியும் பாதிக்கப்படக்கூடாது என்றால் காயம் ஆறவேண்டும்.

அதற்கான முயற்சிகள் எதுவும் நடக்காததால் நாமெல்லோரும் பேரிழப்புகளைத் தாங்க வேண்டி வந்தது.

அப்படி எதுவும் நடக்காமல், அடுத்த சந்ததி நிம்மதியுடன் இருப்பதற்கும் பாதிப்படைந்தவர்கள் தம் துன்பங்களுக்கு வடிகால் தேடிக்கொள்வதற்குமான ஒரு முயற்சியே http://www.selvakumaran.de/padam/OlK-Notice.pdf

-o0o-

'எல்லாம் நன்மைக்கே' என்று ஒரு மந்திரி சொல்லிக்கொண்டிருந்த கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அவரைப் போல, நானும் சமீபத்தைய சொல்லாடல்களை எடுத்துக் கொள்கிறேன். இல்லையென்றால் துஷ்டனைக் கண்டால் தூரவிலகு என்றபடி விலகி நடக்கவேண்டும் என்று தெரிந்திருக்காது எனக்கு. என்னதான் படித்திருந்தாலும், கண்ணியவானாக வேஷம் போட்டாலும் இக்கட்டான சூழ்நிலைகளில்தான் நாம் ஒரு மனிதனை எப்படிப்பட்டவன் என்று அறிந்துகொள்ள முடியும். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம்போல, ஒரு ex-service man. சேறு என்மீது விழாமல் விலகி நடக்கவேண்டியதுதான்!


-o0o-

Comments on "என்னுடைய கருத்து"

 

post a comment