Thursday, June 10, 2004

சு.வில்வரத்தினம் குரல்பதிவு







ஓ! வண்டிக்காரா!


ஓ...ஓ...வண்டிக்காரா
ஓட்டு வண்டியை ஓட்டு
போவோம் புதிய நகரம் நோக்கி
பொழுது போம் முன்னோட்டு

ஓ...ஓ...வண்டிக்காரா

காவில் பூவில் கழனிகளெங்கும்
காதல் தோயும் பாட்டு
நாமும் நமது பயணம் தொலைய
நடந்து செல்வோம் கூட்டு.

ஓ...ஓ...வண்டிக்காரா

பனியின் விழிநீர்த் துயரத் திரையில்
பாதை மறையும் முன்னே
பிணியில் தோயும் நிலவின் நிழல் நம்
பின்னால் தொடரும் முன்னே...

ஓ...ஓ...வண்டிக்காரா

(நீலாவணன்)





மார்கழிக்குமரி

மார்கழிக் குமரி கார்முகச் செல்வி
ஊர்களி கொள்ள உலாவரு கின்றாய்
புனிநனை தென்றல் முனைபடத் தளிரின்
கனவுகள் அதிரும், காதலின் இறுக்கத்
தேவைகள் மலர்ந்து ஆசையில் நடுங்கத்
தாதினைத் தள்ளும் போதுகள் நடுவே
மார்கழிக் குமரி கார்முகச் செல்வி
ஊர்களி கொள்ள உலாவரு கின்றாய்!

ஆழியின் அலைகள் கீழிழுத் தடங்க
தோளினில் சுமந்த பாயொடு கலங்கள்
ஊர்மனை நடுவே உறங்கிய வாவி
நீர்விடு மூச்சாய் நெளிதரு தரங்கம்
நாரைகள் கரையில் நாட்டிய தவமும்
சீரெனக் கொண்டு மார்கழிக் கோதாய்
ஊர்களி கொள்ள உலாவரு கின்றாய்!

ஏரொடு முன்னர் இயற்றிய புணர்வு
சூல்தர வயலில் வேல்முனைக் கதிர்கள்
அறுவடை புரியும் பறவைகள் திகில
வெருளிகள் புரியும் அபரித நடனம்
நுளம்புகள் மலிந்து வலம்புரி ஊத
புலன்சிறு உயிரும் வலம்வர மகிழ்ந்து
மார்கழிக் குமரி கார்முகச் செல்வி
ஊர்களி கொள்ள உலாவரு கின்றாய்!

விளக்கிய முற்ற ஒளித்தரை மீதில்
பளிச்செனக் கோல வெளிச்சங்கள் தூய,
பாவையர் பாடும் "பாவையின" கீதம்
ஆலயமணியின் ஓசையில் தோய
வையகம் எங்கும் ஐயனின் பாதம்
கொய்மலர் என்றோ குனிந்தது சூட
மையிருள் அகற்றும் தைவழி நோக்கி
மார்கழிக் குமரி கார்முகச் செல்வி
ஊர்களி கொள்ள உலாவரு கின்றாய்!

- மு.பொன்னம்பலம்
(காலி லீலை, பங்குனி 1997)






தைப்பாவைப்பாடல்

தைதைதை தகதிமி தைதைதை
தைதைதை தகதிமி தைதைதை

தைப்பாவாய் தைப்பாவாய்
வாசலில் வந்தாள் தமிழ்ப்பாவாய்
தீபங்கள் ஏந்திய கைப்பாவாய்
தென்றலென வந்தாள் தேன்பாவாய்

தைதைதை தகதிமி தைதைதை
தைதைதை தகதிமி தைதைதை

மார்கழிப் பெண்ணுக்கு இளம்பாவாய்
மாதங்கட்கெல்லாம் தலைப்பாவாய்
தேரினில் ஏறிய தென்பாவாய்
ஊர்வலம் வாராய் ஒளிப்பாவாய்

தைதைதை தகதிமி தைதைதை
தைதைதை தகதிமி தைதைதை

சூரியதேவன் சுடர்ப்பாவாய்
சுந்தரவதனச் செம்பாவாய்
ஏருழவர் கை உழைப்பாவாய்
ஏழை எளியவர்க்கு இன் பாவாய்

தைதைதை தகதிமி தைதைதை
தைதைதை தகதிமி தைதைதை

அன்பென்று கொட்டு முரசாவாய்
அனைவர்க்கும் வாழ்வு என்றறைவாய்
இன்புறப் புல்லாங் குழலிசைப்பாய்
இனிய தமிழ்க்காதல் யாழிசைப்பாய்


தைதைதை தகதிமி தைதைதை
தைதைதை தகதிமி தைதைதை

பொன்யுக வாசல் திறந்ததென்று
கொம்பெடுத்தூதடி எம்பாவாய்
சங்கு முழங்கடி எம்பாவாய்
சங்கடம் தீர்ந்திட கைகோர்ப்பாய்

தைதைதை தகதிமி தைதைதை
தைதைதை தகதிமி தைதைதை


கூத்துப் போடடி பெண்பாவாய்
பறைகொட்டி முழங்கடி எம்பாவாய்
தக்கத் திமிதிமி தக்கத் திமியென
நர்த்தனம் ஆடடி பொற்பாவாய்


தைதைதை தகதிமி தைதைதை
தைதைதை தகதிமி தைதைதை

போற்றி பாடடி பொன்பாவாய்
புதுயுகத்தின் பொங்கல் ப10ம்பாவாய்
ஆற்றுகலைகள் அத்தனையும் பொங்க
ஆனந்தக் கும்மி அடி பாவாய்

தைதைதை தகதிமி தைதைதை
தைதைதை தகதிமி தைதைதை

சு.வில்வரத்தினம்
தைப்பொங்கல் -2004


Comments on "சு.வில்வரத்தினம் குரல்பதிவு"

 

post a comment