Saturday, January 15, 2005

வலைப்பதிவாளர்களுக்கு வணக்கம்!

பொங்கல் வாழ்த்துகள்! (மாட்டுப்பொங்கல் கொண்டாடுபவர்களுக்கு மாட்டுப்பொங்கல் வாழ்த்துகளும்! ;) )

எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு என்னுடைய வலைப்பதிவிற்கு வந்திருக்கிறேன். தூசி தட்டித் துப்பரவாக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. கூடவே JDஇடம் Wordpressகு மாறுவதற்கும் கேட்டிருக்கிறேன். எப்போது மாறுவேன் என்று தெரியாது. அதுவரைக்கும் கொஞ்சம் இங்கேயே கதைக்கலாம் என்றிருக்கிறேன்.

கடைசியாக இந்தப் பக்கம் வந்தது 2004 ஜூலையில். ஏறக்குறைய ஒன்றரை வருடங்களாக வலைபதிந்த அனுபவத்தில் நீண்ட நாட்களாக வலைப்பதிவில் எழுதாமல் இருந்தது இப்போதுதான். எத்தனையோ காரணங்கள். மரத்தடியில் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள், அதற்கான ஆயத்தங்கள், ஆண்டுவிழாப் போட்டியும் ஆயத்தங்களும் அது தொடர்பான வேலைகளும் என்று குழும வேலைகள் ஒரு புறமிருக்க, ஒப்புக்கொண்ட வேறு சில வேலைகளும், தோழியர்/வலைப்பூ வலைப்பதிவுகள் சம்பந்தப் பட்ட வேலைகள் என்று அவை ஒரு புறமிருந்தன. இடையில் ஆபத்பாந்தவராக வந்த காசி 'தமிழ்மணம்' தொடங்கினாரோ இல்லையோ நான் பிழைத்தேன். தமிழ் இணையத்தில் ஒரு மைல்கல் 'கலக்கல்' காசியின் 'தமிழ்மணம்'. ஏறக்குறைய ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சந்தித்தபோது அவரோ நானோ ஏன் யாருமே நினைத்திருக்க மாட்டோம் - இப்படி இங்கே வந்து நிற்போம் என்று. என்னதொரு இனிமையான பயணம்?! ம்ம்ம்?

காசியைப்போலவே வலைப்பதிவுகளை இன்றியமையாததொரு விஷயம் ஆக்கியதில் பலரது பங்கு இருக்கிறது. பட்டியலிடத் தொடங்கினால் தீராத விஷயம் அது. சுரதா, மாலன், பத்ரி, ரமணிதரன், பரி, வெங்கட் என்று தொடங்கி நேற்றைக்கு வலைப்பதிவு தொடங்கிய நண்பர் வரைக்கும் பட்டியலிட வேண்டும். அட முதன்முதலில் தமிழ் வலைப்பதிவைத் தொடங்கிய நவனை மறந்துவிட்டேன் பாருங்கள். இதற்குத்தான் இந்தப் பட்டியலிடும் வேலை வேண்டாமென்று சொன்னேன். பிறகு 9 கட்டளைகள்போல ஆகிவிடும். ;)

போன மாதம் ஒப்புக்கொண்ட சில வேலைகளை முடிக்காவிட்டாலும், மறுபடியும் எழுத வேண்டும் என்ற முனைப்பு வந்ததற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. தோழியர் வலைப்பதிவையும் கவனிக்க வேண்டும். சீரமைக்கத் தொடங்கிய நான், அரைகுறையில் விட்டுச் சென்றிருக்கிறேன். தோழியர்களே மன்னியுங்கள்! கோழிக்கிறுக்கலாகவேனும் ஏதேனும் எழுத வேண்டும் என்ற முனைப்பு வந்ததற்கு அமுக்கிக் கொண்டிருந்த சில விஷயங்களில் இருந்து வெளியேறியதும் ஒன்று. முக்கியமாக மரத்தடி இணையக் குழுமம்.

கடந்த ஐந்தாறு மாதங்களில் பல நண்பர்கள் வலைப்பதிவுகளுக்கு வந்திருப்பது மிகவும் சந்தோஷமான விஷயம். ஸ்வஸ்திக் ஆட்ஸ் சுரேஷ், ஆசி·ப் மீரான், ஆசாத் அண்ணாச்சி, எல்லே ராம், துளசி, நிர்மலா, நம்பி, 'லலிதா'ராம், ஜெயந்தி(தனிவளை சூப்பர் ஜெயந்தி. தொடர்ந்து கலக்குங்க!). இவர்களைத் தொடர்ந்து இன்னும் சிலர் வலைப்பதிவு தொடங்கினால் நன்றாக இருக்கும் என்று ஒரு பட்டியல் மனதில் இருக்கிறது. சட்டென்று ஞாபகம் வருபவர்கள் ஸ்ரீரங்கத்து தேவதை' ஜெயஸ்ரீயும் 'வியாபாரிமூலை' விஜயாலயனும். இருவரையும் தொடர்ந்து அரிக்கலாம் என்றிருக்கிறேன். கல்லும் கரையும் இல்லையா? ;)

இந்த இடைவெளியில் படித்த புத்தங்கள், பார்த்த படங்கள், சந்தித்த மனிதர்கள், போன இடங்கள் என்று கொஞ்ச விஷயம் சேகரித்திருக்கிறேன்.

முன்போல இல்லாமல், நேரத்தைக் கொஞ்சம் பயனுள்ள வகையில் செலவழிக்கவேண்டும் என்று நினைத்திருப்பதால், இங்கே அடிக்கடி எழுதமாட்டேன் என்று நினைக்கிறேன். கிடைக்கும் நேரத்தையும், எழும் சிந்தனைகளையும் பொறுத்து பதிவுகள் அமையலாம். நேரம் கிடைத்தால் அதைக் கொஞ்சம் உருப்படியாக சுனாமியால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் செலவழிக்கலாம் என்று இருக்கிறேன். உங்களுக்குத் தெரியுமோ தெரியாது, கனேடிய அரசாங்கம் சுனாமியால் பாதிக்கப் பட்ட நெருங்கிய உறவினர்களை கனடாவிற்கு கூப்பிட ஆவன செய்துள்ளது. 1985இல் இங்கிலாந்து செய்ததுபோல ஓப்பன் விசா என்றில்லாமல் ஒவ்வொரு விண்ணப்பமாகப் பார்த்து முடிவெடுக்கப் போகிறார்களாம். அதற்கான விண்ணப் படிவங்கள் பூர்த்தி செய்வது, கடிதங்கள் எழுதுவது, தேவையெனில் தொலைபேசியில் பேசவேண்டியவர்களோடு பேசுவது என்பதுபோன்ற வேலைகளைச் செய்யலாம் என்று இருக்கிறேன்.


இங்கு வந்த அனைத்து நண்பர்களுக்கும் அன்பையும் வணக்கத்தையும் தெரிவித்தபடி விடைபெறுவது

-சந்திரமதி கந்தசாமி

Comments on "வலைப்பதிவாளர்களுக்கு வணக்கம்!"

 

post a comment