Wednesday, June 11, 2003

பொங்கல் அனுபவங்கள்



எங்கள் ஊரில் பொங்கல்தான் பெரிய திருவிழா. வந்தாரை வாழவைக்கும் சென்னைமாநகரம் வந்துதான் தீபாவளிக்கு இத்தனை கொண்டாட்டமா என்று வியந்து போனோம், நானும் என்னுடைய குடும்பத்தாரும். முதல் வருஷம் தீபாவளி முதல் நாள் இரவு வெடிச்சத்தம் கேட்டு shell அடிக்கும் சத்தம் என்று பயந்துபோனது வேறு விஷயம்.

எங்கள் ஊரிலும் பொங்கல் வெகு விமர்சையாக 3 நாள் கொண்டாடப்படும். அம்மம்மாதான் குடும்பத்தில் பெரியவங்க என்பதால் அவர்கள் தலைமையில் முற்றம் மற்றும் வளவு (எங்கள் ஊரில் பெரும்பாலான வீடுகள் நிறைய மரங்கள் கொண்ட காணியின் நடுவே இருக்கும்.) எல்லாம் கூட்டுத்தடியால் (அதாங்க விளக்குமாறு) கூட்டி சுத்தமாக்கப்படும். எனக்கு தெரிந்தவரையில் எரிக்கமாட்டார்கள். பலகாரம் எல்லாம் முதல்நாளே சுட்டுடுவாங்க. பொங்கல் அன்று வெள்ளன (காலங்காத்தால) எழுந்து அந்த குளிரில் நடுங்கியபடியே தயாராகி அம்மம்மாவுடன் வெள்ளை அரிசிமா எடுத்து கோலம் போட்டு(எங்க ஊரில் ஐயர் வீட்டில்தான் தினமும் வீட்டிலும் கோயிலிலும் அழகாக கோலம் போடுவார்கள். அம்மம்மாவின் கோலம் நவீன ஓவியத்துக்கும் traditional artக்கும் நடுவில் இருக்கும். பிறகு யாழ்ப்பாணத்தில் இருந்து ஸ்பெஷலாக வாங்கி வந்த மண்பானையில் பொங்கல் பொங்கப்படும். வெண்பொங்கல் எல்லாம் இந்தியா வந்துதான் சமைக்க கத்துகிட்டேன். சர்க்கரைப்பொங்கல்தான். நான் எங்கள் சொந்த ஊரான புங்குடுதீவில் இருந்த சொற்ப வருடங்களில் ஒரு வருஷம் அம்மா நெல் விதைத்தார்கள். எங்களுக்கெல்லாம் இன்னும் மனதில் நிற்கும் அருமையான அனுபவம்.

பொங்கல் பொங்கி வரும்போது சவுண்ட் எ�பெக்ட் குடுக்க சொல்வார்கள்.(வேறென்ன, பொங்கலோ பொங்கல் கோஷம்தான்.) பிறகு சூரியனுக்கும் சாணில பிடித்து பூசணிப்பூ சொருகி அலங்காரம் செய்த திருவாளர் பிள்ளையாருக்கும்(இஷ்ட தெய்வம் என்கிற படியால் நிறைய பட்டப்பெயர் அவருக்கு. உதா: பில்ஸ்.) படைப்பார்கள். இனித்தான் எங்களுக்கெல்லாம் பிடித்த விஷயம். வெடி வெடிக்கறது. சின்ன பசங்க என்று சொல்லி எங்களை கிட்ட விட மாட்டார்கள். அம்மம்மாவும், அம்மாவும், சித்தியும்தான் வெடிப்பார்கள். மூணு பேருக்கும் வெடி வெடிக்கிறது என்றால் கிலி. ஒரு சிரட்டையில் (விளக்கம் - தேங்காய் ஓடு) வெடியை வைத்து விட்டு ஒரு நீட்டுக்கம்பில் அம்மம்மா ஊதுபத்தி கட்டி, ஒரு பத்து அடி தள்ளி நின்று வெடியின் மீது வைக்க try பண்ணுவாங்க. வெடி என்றவுடன் அட்டம் பாம்ப், ஹைட்ரஜன் பாம்ப் என்றெல்லாம் நினைக்காதீங்க. தமிழ்நாட்டில இந்த கைல வச்சு வெடிப்பாங்களே அதுதான். :-)
வெடியை ஒருக்கா தொட்டுட்டு ஒரு ஓட்டம் எடுப்பாங்க பாருங்க, அதுதான் எங்களுக்கு எண்டர்மெயின்ட் எப்படியோ ஒரு வழியா அவங்க வெடிச்சதும் எங்க அம்மாவின் முறை. அம்மா, பொண்ணுங்கல்லாம் இந்த விஷயத்துல ஒரே மாதிரி. எங்க அம்மாவும் இப்படி ஓட்டமும் நடையுமா வெடிச்சதும் சித்தியும் அவங்க பங்குக்கு ஓடி ஓடி வெடிப்பாங்க. சின்னவங்க என்பதால் எங்களுக்காக
இன்னும் கூட வெடிப்பாங்க. மிச்ச வெடியெல்லாம் பின்னேரம் (அதுதான் சாயங்காலம்) அம்மாவின் கசின்ஸ் - சித்தப்பாக்கள் வந்து வெடிப்பார்கள்.

பிறகு என்ன, எல்லார் வீட்டுக்கும் கொன்டுபோய்க்குடுக்கும் படலம். அதுக்கப்புறம்தான் எங்களுக்கு உணவு. ஆனா இந்த உற்சாகத்துல பசி என்பதே தெரியாது.

அடுத்த நாள் எங்கள் ஊரிலும் தமிழ்நாடு மாதிரியே மாட்டுப்பொங்கல். என்ன ஒரு வித்தியாசம் எங்கள் வீட்டில் எல்லா
பண்டிகையிலும் எல்லாரும் சைவம்தான். சிலர் வீடுகளில் தீபாவளிக்கு அசைவம் உண்டு. ஆனால் எங்கள் வீட்டில்? மூச்ச்ச்... அம்மம்மா கொன்னுடுவாங்க கொன்னு!

Comments on "பொங்கல் அனுபவங்கள்"

 

post a comment