Tuesday, June 17, 2003

பாரதியார்



என்னில் தாக்கத்தை ஏற்படுத்திய முதல் கவிஞர்/இலக்கியவாதி/மனிதர் பாரதியார்தான். பாரதியார் பற்றி நான் முதலில் தெரிந்து கொண்டது ஒரு கவிஞராக. என்னுடைய அப்பா சொல்லித்தந்த 'ஓடி விளையாடு பாப்பா' தான் நான் கற்றுக்கொண்ட முதல் பாரதி பாடல். அதில் வந்த காக்கை, குருவிகளும் பசுவும் என்னை மிகவும் கவர்ந்தன. இன்னமும் அந்தப்பாடலை வாசிக்கும்போது சிறுவயதில் இதைப்பாடிக்கொண்டு திரிந்ததுதான் ஞாபகம் வருகிறது. அப்பா சொல்லித்தந்த இன்னுமொரு பாட்டு 'வெற்றி யெட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே' என்று தொடங்கும் பாடலின் முதல் வரிகள்.

இலங்கையில் பள்ளிக்கூடத்தில் சொல்லித்தந்த பாடல் - 'உலகத்து நாயகியே -எங்கள் முத்துமாரியம்மா, எங்கள்
முத்துமாரி'

அங்கு கற்றுக்கொண்ட இன்னுமொரு பாடல் -

'வெள்ளைத்தாமரைப்பூவிலிருப்பாள் வீணை செய்யும் ஒலியிலிருப்பாள்'

என்று சரஸ்வதியை நினைத்துப்பாடும் பாடல். முக்கியமாக நவராத்திரி நேரத்தில் பாடுவோம். வீட்டில் இருந்தால் வெள்ளிக்கிழமைகளில் இந்தப்பாடலை கட்டாயம் பாடவைப்பார்கள்.

ஒரு முறை மார்கழி மாத அதிகாலையில் திருவெம்பாவை பாடுபவர்களோடு போனபோது கேட்ட பாடல் - 'ஓம் சக்தி ஓம்சக்திஓம் - பராசக்தி'. (அது மிகவும் பிடித்துப்போய் என்னுடைய சித்தியை சொல்லித்தரசொல்லி அரித்தெடுத்து கற்றுக்கொண்டது வேறு விஷயம்.)

சிறு வயதில் 'காக்கைச்சிறகினிலே நந்த லாலா - நின்றன் கரிய நிறந்தோன்றுதையே நந்த லாலா' பாடலை k.j.ஜேசுதாஸ் பாடக்கேட்டு மெய்மறந்த நாட்களும் உண்டு. இன்று உன்னிக்கிருஷ்ணனில் இருந்து மகாராஜபுரம் சந்தானம் வரையிலும் பாடிக்கேட்டிருந்தாலும் ஜேசுதாஸ் பாடியதுதான் மனதை நெகிழ வைக்கிறது.

மிகவும் பிடித்த இன்னுமொரு பாடல் - 'அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!'

சென்னையில் பள்ளியில் தமிழ்வகுப்பில் கற்றுக்கொண்ட இந்தப்பாடலை நானும் தம்பியும் தங்கையும் வீட்டில் உரத்த குரலில் பாடிக்கொண்டு இருப்போம். அதே போல் 'ஜெய பேரிகை கொட்டடா! - கொட்டடா' என்ற பாடலை எங்கேயோ கேட்டேன். அந்தப்பாடலில் உள்ள கம்பீரம் பிடித்துப்போனது.

இதோ இன்னொரு பாரதி பாடல்.

'நல்லதோர் வீணை செய்தே - அதை

நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ'

அதே போல் தாக்கத்தை ஏற்படுத்திய இன்னொரு பாடல்

' நெஞ்சில் உரமும் இன்றி

நேர்மைத்திறனும் இன்றி

வஞ்சனை செய்வாரடி - கிளியே

வாய்ச்சொல்லில் வீரடி'

'நெஞ்சு பொறுக்குதி லையே - இந்த

நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்' கவிதையைப்படித்த போது ஏற்பட்ட தாக்கம் எப்போது இதை வாசித்தாலும் ஏற்படுகிறது.

பாலச்சந்தர் தன்னுடைய ஒரு படத்துக்கு 'மனதில் உறுதி வேண்டும்' என்று பெயர் வைத்ததினாலேயே அந்தப்படத்தை பார்ப்பதற்கு முன்னமே பிடித்துப்போயிற்று.

'மாதர் தம்மை இழிவு செய்யு

மடமையைக்கொ ளுத்துவோம்' என்று பாடிய பாரதி என்னில் விசுவரூபமெடுத்து நின்றான்.

என்னுள் அதிர்வை ஏற்படுத்தியவை பாரதியின் 'அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்' வரிகள். முதன்முறை அதை வாசித்தபோது திரும்பத்திரும்ப வாசித்தேன்.

பாரதியாரின் பாடல்களிலே எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் சில கண்ணன் பாடல்களாகும்.

'தீர்த்தக்கரையினிலே-தெற்கு மூலையில்

செண்பகத்தோட்டத்திலே'

'பாயுமொழி நீயெனக்கு பார்க்கும் விழி நானுனக்கு'

'நின்னைச்சரண் அடைந்தேன் கண்ணம்மா'

'சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா - சூரிய சந்திரரோ'

Comments on "பாரதியார்"

 

post a comment