Sunday, January 23, 2005

ஜனவரி மாத உயிர்மை

இம்மாத உயிர்மை இதழில் பல சுவாரசியமான கட்டுரைகள் வெளிவந்திருந்தன.

'எம்.டி. ராமநாதன் என்ற பெருங்கலைஞன்' என்னும் தலைப்பில் சுகுமாரன் எழுதிய கட்டுரையே அருமையான தொடக்கமாக அமைந்தது. கட்டுரையாளருக்கு எம்.டி. ராமநாதன் மேலிருந்த நேசமும் நட்பும் நன்கு புலப்பட்டது. கூடவே இன்னுமொரு சுவாரசியமான விஷயம் கிடைத்தது.

'எம்.டி. ராமநாதன் என்ற பெருங்கலைஞர்' கட்டுரையிலிருந்து:

"மோகமுள் நாவலில் ஒரு காட்சி ராமநாதனின் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டது. இசைக்கலைஞரான ரங்கண்ணா, சீடரான பாபுவின் மடியில் கிடந்து உயிர் துறக்கும் காட்சி எம்.டி.ஆரின் நிஜ வாழ்க்கைச் சம்பவம். குருவான டைகர் வரதாச்சாரியின் உயிரைக் கடைசியாகத் தாங்கியது சீடரான ராமநாதனின் மடிதான். எண்பதுகளின் தொடக்கத்தில் ஒரு நாள் திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையிலிருந்த கணையாழி இதழ் அலுவலகத்தில் தி.ஜானகிராமனைச் சந்தித்தபோது என்னுடைய அவதானிப்பைச் சொன்னேன். அது ராமநாதன்னு உங்களுக்குத் தோணினால் பாபுவோட பாக்கியம்" என்று சிரித்தார். அது மெய்யா? மழுப்பலா?"

எம்.டி. ராமநாதன் பற்றிய கட்டுரையைப் படித்ததோ என்னமோ தெரியவில்லை சி. அண்ணாமலை, 'மகுடங்களுக்குப் பின்னால்' என்று எழுதிய எம்.எஸ். சுப்புலட்சுமியின் அஞ்சலிக் கட்டுரை தட்டையாக இருந்தது. அதே நேரம் ஜமுனா ராஜேந்திரன் எழுதிய 'சூறைக் காற்றடித்து ஓய்ந்த துறைமுகம்' என்று ரெஜீ சிறிவர்த்தனவின் மறைவையொட்டி எழுதிய அஞ்சலிக் கட்டுரை பல விஷயங்களைத் தெரியப் படுத்தியது. ரெஜீ சிறிவர்த்தனவின் 'birthday apology and apologia: 80 iambre pentameters for my 80 years என்னும் கவிதையை ஆங்கிலத்திலேயே படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தமிழில் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

அடுத்து பக்கங்களைப் புரட்டிக்கொண்டு போகும்போது தன்னுள்ளே இழுத்துக்கொண்ட கட்டுரை இணையத்தில் எழுதும் ரவி ஸ்ரீனிவாஸ¤டைய 'சே குவாரா: புகைப்படம், பதிப்புரிமை, உலகமயமாதல்'. சோஷலிச நாடுகளில் படைப்புரிமை, கியூபாவின் படைப்புரிமைக் கொள்கைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், மற்றும் படைப்பாளிகளின் படைப்புரிமை என்று பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அட்டைப் படக் கட்டுரையாக வந்திருக்கும் இக்கட்டுரைக்கு அதற்கான தகுதி முழுக்க இருக்கிறது என்று கட்டுரையைப் படித்ததும் தோன்றியது.

இம்மாதம் படித்த கட்டுரைகளிலேயே மிகவும் பிடித்த கட்டுரை எது என்று கேட்டால் எம்.டி. ராமநாதன் பற்றி சுகுமாரன் எழுதியது என்று உடனே சொல்லலாம்தான். ஆனால், கொஞ்சம் தயங்கி யோசித்ததற்குக் காரணம் ஆறுமுகப்பெருமாள் நாடார்(1909-1983) பற்றி அ.க. பெருமாள் எழுதிய கட்டுரை. பழைய விஷயங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் சாதாரண மக்கள் சம்பந்தப் பட்ட விஷயங்கள் என்றால் இன்னும் சுவாரசியமாக இருக்கும். காரணம் அரசர்களைப் பற்றிப் பலருடம் உள்ளதையும் பொல்லாததையும் எழுதி வைத்திருக்கிறார்கள். நம் புலவர் பெருமக்கள் உயர்வு நவிற்சியை உலகிற்கே கற்றுக் கொடுத்தவர்கள் என்று நினைக்கிறேன். அந்த நிலையில் பொதுமக்கள் குறித்து யாரேனும் எழுதியிருப்பதாகத் தெரிந்தால் படித்து முடிக்கும் வரைத் தூக்கம் வராது. இப்போது அப்படித்தான் பாருங்கள் ஆறுமுகப்பெருமாள் நாடார் பதிப்பித்திருக்கும் நூல்களில் ஒன்றிரண்டாவது படிக்கக் கிடைத்தால் எப்படியிருக்கும் என்று ஒரு எண்ணம். கூடவே Stuart H Blackburn எழுதியிருக்கும் 'Singing of birth and dirth' என்ற நூலையும் படிக்க வேண்டும் போலிருக்கிறது. குறித்து வைத்திருக்கிறேன். என்றாவதொரு நாள் கையில் கிடைக்கும் என்ற நப்பாசைதான்.

யார் இந்த ஆறுமுகப்பெருமாள் நாடார் என்று கேட்கிறீர்களா?

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஏடுகளைத் தேடித் தொகுத்த தமிழர். ஆரம்பத்தில் வைத்திய ஏடுகளைத் தொகுத்த ஆறுமுகப்பெருமாள் நாடார் 1940-45களில் வில்லிசை ஏடுகளைச் சேகரித்திருக்கிறார். நாஞ்சில்நாட்டு நாடார்கள் குறித்த செய்திகளைச் சேகரித்து வைத்திருந்தாராம். பதனீரின் குணங்களைப் பற்றிய ஏடுகள் சிலவற்றையும் கண்டெடுத்திருக்கிறார்.

கட்டுரையில் இருந்து இது சம்பந்தமான பகுதிகள் உங்கள் வாசிப்பிற்காக


"ஒருமுறை நான் ஆறுமுகப்பெருமாள் நாடாரைப் பார்க்கப்போனபோது சென்னை ரத்தினநாயகர்சன்ஸ் வெளியிட்ட பதார்த்த குணசிந்தாமணியைப் படித்துக் கொண்டிருந்தார். நான் அதைப் பற்றிப் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தபோது, திடுதிடுப்பென்று வீட்டிற்குள் போனார். உதிரியான ஏடுகள் சிலவற்றைக் கொண்டு வந்தார். எல்லாம் ஒழுங்கில்லாத ஏடுகள்; அழுக்கடைந்தவை. அவை பதனீரின் குணங்களப் பற்றிய நூல் என்றார். அது முழுதும் கிடைக்கவில்லை. கிடைத்தவற்றை மட்டும் தொகுத்திருக்கிறார். அவரே அதற்குப் பதனீர் குண சிந்தாமணி எனப் பெயரிட்டிருக்கிறார். உன்னங்குளம் வைத்தியரின் வீட்டில் அது கிடைத்ததாகச் சொன்னார்.

அந்த நூல் வெங்கலராசன் கதையின் ஒரு நிகழ்ச்சியிலிருந்து ஆரம்பிக்கிறது. பத்திரகாளியின் புத்திரர்களான வலைங்கையர், ஒரு காட்டினுள் சென்றபோது தண்ணீர் குடிக்க ஒரு சிறிய குளத்திற்குச் சென்றனர். வலங்கையர் நீர் அருந்த வருகிறார்கள் என்பதைப் பார்த்த ஒரு பிராமணனும், பிராமணத்தியும் அந்தக் குளத்து நீரைக் கலக்கிவிட்டனர். இதனால் நீர் குடிக்க முடியாமல் போன வலங்கையர் இந்த நிகழ்ச்சியைப் பத்திரகாளியிடம் வருத்தத்துடன் முறையிட்டனர். காளி அந்தப் பிராமணனையும் பிராமணத்தியையும் பிடித்து தலைகீழாக நட்டுவிடுங்கள் என்றாள். வலங்கையரும் அப்படியே செய்தனர். உடனே அவர்கள் இருவரும் ஆண்பனையும், பெண்பனையுமாக மாறினர். இந்த நிகழ்ச்சியிலிருந்த் பதனீர் குண சிந்தாமணி ஆரம்பிக்கிறது.

நாஞ்சில் நாட்டில், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பலருக்குப் பதனீர் முக்கிய உணவாக இருந்ததை அந்த ஏடு விலாவாரியாகக் கூறியது. பதனீரைப் பதப்படுத்தி எப்படிப் பாதுகாக்கலாம், பதனீரில் சிறுபயறு சேர்த்து பதப்படுத்துவது எப்படி என்ற பல செய்திகள் அதில் இருப்பதாகக் கூறினார். (இந்த ஏட்டின் உதிரி ஓலைகளைத் தஞ்சாவூரிலிருந்து ஒரு பேராசிரியர் 1989இல் விலைக்கு வாங்கிச் சென்றதாகப் பிறகு அறிந்தேன்.)"


ஆறுமுகப் பெருமாள் நாடார் பதிப்பித்திருக்கும் புத்தகங்களின் பட்டியலையும் அ.க. பெருமாள் தந்திருக்கிறார்.

ஜனவரி மாத உயிர்மையில் என்னுடைய கவனத்தைக் கவர்ந்த இன்னுமொரு கட்டுரை லூயி கரோலின் 'ஆலிஸ் இன் வொண்டர்லாண்ட்' குறித்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரை. லூயி கரோல் எழுதிய 'ஆலிஸ் இன் வொண்டர்லாண்ட்' போலவே கொஞ்சம் நின்று நிதானித்து வாசித்தால் மனதில் அப்படியே நின்றுபோகும் கட்டுரை.

இதுபோகச் சில கவிதைகளும் கதைகளும் இருந்தன. இன்னும் சில கட்டுரைகளும். கதைகளில் எட்வர்ட் ஜோன்ஸ் எழுதிய கதையொன்றைத் தமிழில் 'முதல் நாள்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருப்பவர் ஆ.முத்துலிங்கம். சுவாரசியமாகச் சென்றாலும் ஆங்காங்கே தொய்வாக இருக்கிறது. ஆங்கிலத்தில் என்ன தலைப்பு என்பதுபோன்ற விவரங்களெல்லாம் இல்லை. எட்வர்ட் ஜோன்ஸ் பற்றிய சில செய்திகளைத் தந்திருக்கிறார்.


மொத்தத்தில் 2005 ஆம் ஆண்டை நல்லபடியாகச் சுவாரசியமாகத் தொடங்கியிருக்கிறது உயிர்மை. அடுத்த மாதம் என்ன படிக்கக் கிடைக்கும் என்று ஆவலோடு நான்...

Comments on "ஜனவரி மாத உயிர்மை"

 

post a comment