Sunday, March 07, 2004

வலைப்பதிவில் இயங்குஎழுத்துரு

ஒரு யூனிகோடு வலைப்பதிவில் இயங்குஎழுத்துரு தேவையா இல்லையா? என்று சில மாதங்களுக்கு முன்பு கூட லேசாகப் பேச்சு வந்தது. இப்போ முத்து, வெங்கட் ஆகியோர் இதுபற்றிப் பேசி இருக்கிறார்கள். நான் என்னுடைய வலைப்பதிவுகள் அனைத்திலும் யூனிகோடு எழுத்துருவையே பாவிக்கிறேன். நான் உதவி செய்யும் நண்பர்களிடமும் அதையே சொல்கிறேன். எனக்குத் தெரிந்து மயிலை, பாமினி, திஸ்கி எழுத்துருக்களில் எழுதுபவர்களை யூனிகோடிற்கு மாற்றி வலைபதியச் சொல்லிக்கொடுத்திருக்கிறேன்.

ஆனால் எனக்கே இதில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. Win 98 கணினியில் யூனிகோடு எழுத்துரு சரியாகத் தெரிவதில்லை. ஆரம்பத்தில் என்னுடைய வலைப்பதிவில் எனக்கே எழுத்துகள் தனித்தனியாகத் தெரிந்தன. என் வலைப்பதிவைப் படிப்பவர்களிடமிருந்தும் படிக்கமுடியவில்லை என்று மடல்கள் வந்தன. இயங்கு எழுத்துருவை நிர்மாணித்தபிறகே பிரச்சினை நீங்கியது.

குமுதம், விகடன் என்று வெவ்வேறு எழுத்துருக்களைப் பயன்படுத்தி இயங்கு எழுத்துரு பயன்படுத்துவதற்கும் யூனிகோடில் இயங்கு எழுத்துருப் பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்றே சொல்வேன். பலருக்கு அலுவலகத்தில் எழுத்துருக்களை நிர்மாணிக்க இயலாத சூழ்நிலை, என் நண்பர்களில் சிலர் இணையத்தை உலாவுவது கணினி மையங்களிலேயே. அவர்கள் ஒவ்வொரு முறையும் எழுத்துருக்களை இறக்கிக் கொள்ள முடியாது.

சமீபத்தில் தொடங்கிய பெண்கள் கூட்டு வலைப்பதிவிலும் பலருக்கு யூனிகோடு எழுத்துருவில் எழுதுமாறு சொல்லி, எப்படி அவர்கள் பயன்படுத்தும் பல்வேறு எழுத்துருக்களில் இருந்து சுரதாவின் பொங்குதமிழ் செயலியைப் பயன்படுத்துவது என்று சொல்லிக் கொடுத்திருக்கிறேன். என்னைப்போன்றே பல நண்பர்களும் புதிதாக வலைபதிபவர்களை யூனிகோடிலேயே வலைபதியுமாறு ஊக்குவிக்கிறார்கள். சிலர் பஞ்சிப்பட்டாலும், யூனிகோடிலேயே வலைபதிகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் நான்/நாங்கள் சொல்லும் எல்லோராலும் படிக்க முடியும் என்ற காரணமும், தேடியந்திரங்களில் தேடலாம் என்பதுவுந்தான். இந்த இரண்டு காரணங்களும் இச்சிறு துளிகளைப் பெரு வெள்ளமாக்கும் என்று நம்புகிறேன்.

தளையறு செயல்திறன் இல்லையென்றாலும், தமிழில் வலைப்பதிவுகள் அதிகமாவதற்கு இந்த இயங்கு எழுத்துருவும் முக்கிய காரணமாக இருக்கிறது.

Comments on "வலைப்பதிவில் இயங்குஎழுத்துரு"

 

post a comment