Sunday, February 08, 2004

Negative Energy to P o s i t i v e - E n e r g y


பிறமொழிகளில் வலைப்பதிவுகள் ஒரு இயக்கமாக இயங்குவதுபோல தமிழிலும் வலைப்பதிவுகள் கூட்டாக இணைந்து இயங்கவேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. தமிழ்வலைப்பதிவுகள் குறித்து வெங்கட் தமிழ்வலைப்பதிவுகள் குழுமத்தில் எழுதியது போல.

இப்பொழுது ஏறக்குறைய 80 வலைப்பதிவுகள் இருக்கின்றன. இன்னமும் பல உருவாகலாம். வலைப்பதிவுகள் எத்தனை சுலபமானது என்பது தெரியாததாலேயே, பலர் இதில் இறங்கவில்லை என்பதே நான் அனுபவரீதியாக அறிந்தது. அதற்காகத்தான் தமிழ் வலைப்பதிவுகளுக்காக ஒரு faq (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்) பதிவு உருவாக்க சிலர் முயன்றோம். இதுவரை சிலரே இதில் ஈடுபட்டுள்ளார்கள். இது முழுமையானால், புதிதாக வந்து சந்தேகம் கேட்பவர்களை இங்கே அனுப்பலாம். தமிழில் வலைப்பதிவுகள் உருவாக்குவது ஒன்றும் பெரிய வித்தையில்லை என்பதையும் காட்டலாம்.

நான் என்னால் முடிந்த அளவு, bloggerஇல் எப்படி வலைபதியலாம் என்பதை Tamilblogs-tips&tricksஇல் காட்டியிருக்கிறேன்.

கடந்த ஆறுமாதங்களில் தமிழில் வலைப்பதிவுகள் பெரிதும் முன்னேறி இருக்கின்றன. இன்னமும் நிறைய தொழில்நுட்ப ரீதியாக செய்யவேண்டியது இருக்கிறது. இதற்குத்தேவையான உதவி கிடைப்பதில்லை. தலைவர்களும் ஸ்பான்ஸர்களும் வரும் அளவுக்கு தன்னலமற்ற தொண்டர்களும் ஆர்வலர்களும் கிடைப்பதில்லை.

தமிழ் வலைப்பதிவுகள் இப்போது இலவச சேவைகளைப்பயன்படுத்துகிறார்கள். சிலர், தத்தம் சொந்த இடங்களில் வலைபதிகிறார்கள். பெரும்பாலான தமிழர்கள், இலவச சேவைகளையே தொடர்ந்து பயன்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன். இதில் வெங்கட் சொன்னமாதிரி, தமிழ் வலைப்பதிவர்கள் ஒருங்கிணைந்து வலைப்பதிவு சேவை ஒன்றை உருவாக்கலாம். இது வலைபதிவர்கள் தத்தம் சுதந்திரத்தையும் காத்துக்கொண்டமாதிரியும் இருக்கும். பிற வலைபதிவர்களோடு கைகோர்த்து ஒரு இயக்கமாகவும் இயங்கலாம்.

blogspotஇல் வலைபதிபவர்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சினை கருத்துப்பெட்டி. தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் ASP Blogcommentsஐ எப்படி நிறுவுவது என்றும், தமிழை அதில் எப்படிப்பயன்படுத்துவது என்றும் கண்டறிந்தால் பெரிய உதவியாக இருக்கும்.

இன்னொரு விஷயம். தமிழ் வலைபதிவர்களுக்கு வலைப்பதிவின் அருமையும் பெருமையும் ஏற்கனவே தெரிந்தவிடயம். கொல்லன் பட்டறையில் ஊசி விற்காமல், தமிழ் வலைப்பதிவு பற்றித் தெரியாதவர்களிடம் நாம் பேசவேண்டும். இதையே நான் மரத்தடி நண்பர்களிடமும், பிற குழு நண்பர்களிடமும் செய்தேன். செய்கிறேன். இங்கே, நான் உதவிய பல வலைபதிவாளர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பதிவுகளில் என் பெயரோ, சுட்டியோ இல்லை. அதை நான் விரும்பியதும் இல்லை. சுவாரசியமான விஷயங்கள் இருக்கிறது என்று நான் நினைப்பவர்களை அணுகி, வலைப்பதிவுகள் பற்றிச் சொல்லி, இங்கு அழைத்து வந்திருக்கிறேன்.

இன்னும் நிறையப்பேர் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு மீனா. காரைக்குடிக்காரரான இவர், அவருடைய சமூகத்தின் பழக்கவழக்கங்கள், செட்டியார்களுடைய வரலாறு, உணவுப்பழக்கங்கள் (செட்டிநாட்டு உணவை உருசிக்காதவர் இங்கிருக்க மாட்டீர்கள்), அவருடைய குடும்பத்துப்பெரியவர்கள் உறவினர்கள் பற்றி, பழங்காலத்தில் செட்டிநாட்டுக்காரர்கள் பயணம் செய்த நாடுகள், அனுபவங்கள் பற்றி, சிங்கையில் செட்டியார்களின் வரலாறு, இப்போது எப்படி இருக்கிறது என்று எத்தனையோ சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். அவரிடம் பேசி, அவரிடமும் பகிர்ந்துகொள்ளக்கூடிய சுவாரசியமான விஷயங்கள் இருக்கின்றன என்பதை உணர்த்தி, blogspotஇலோ, blogdriveஇலோ ஒரு வலைப்பதிவை ஏற்படுத்திக்கொடுக்கலாம். ஒன்றரை வருடங்களுக்கு முன்புதான் எழுத, அதுவும் இங்கே இணையத்தில் எழுதத்தொடங்கிய எனக்குத் தெரியும் அந்த முதலாவது அடிதான் தேவையென்று. அதற்குப்பிறகு தமிழுக்கு ஒரு அருமையான வலைப்பதிவு கிடைக்கலாம். தனியாக வலைப்பதிவு அமைக்கத் தயங்குபவர்களை http://yarl.net/ போன்ற கூட்டு வலைப்பதிவிற்கு அனுப்பி வைக்கலாம். இங்கே அவர்கள் தொழில்நுட்ப ரீதியாக ஒன்றும் செய்யத் தேவையில்லை.


சபாநாயகம் ஐயாவுடையதைப் போல. அவரை மரத்தடியில் கண்டபோது, வலைப்பதிவுகள் பற்றிச் சொல்லி, அவருடைய சின்ன வயது அனுபவங்களையும், அப்போதைய வாழ்க்கை முறைபற்றியும் இளைய தலைமுறையுடன் பகிர்ந்துகொள்ளச் சொல்லிக்கேட்டபோது, அவர்தான் 'கணையாழி' இதழைத் தொகுத்த சபாநாயகம் என்று நான் அறிந்திருக்கவில்லை. வரலாற்றின்மீது எனக்கு இருக்கும் ஆர்வத்தால், அவரிடம் கேட்டேன். நான் எதிர்ப்பார்த்திருந்தது - நாற்பது ஐம்பதாண்டு காலத்திற்கு முன்பு தஞ்சை, சிதம்பரம் பகுதியில் தமிழர் வாழ்க்கை முறை எப்படி இருந்திருக்கும் என்பது. கிடைத்தது எதிர்பார்க்காத தமிழ் இலக்கிய வரலாறு.

ஒவ்வொரு முறை அவர் எழுதும்போதும், இன்னம் கொஞ்சம் விரிவாக எழுதுங்கள் ஐயா என்ற கோரிக்கையை தனியாகவும், மரத்தடியிலும், அவருடைய வலைப்பதிவிலும் சந்தித்து வருகிறார் அவர். கூடிய விரைவில் அதை நிறைவு செய்வார் என்று நம்புவோம்.

அதைப்போல வலைப்பதிவுகள் உலகிற்கு செம்மை சேர்க்கக்கூடியவர்கள் என்று நான் கருதும் பலர் யாகூ குழுக்களில் இருக்கிறார்கள். நாக. கணேசன் (தமிழ் வலைப்பதிவுகள் பற்றி எழுதி வரும் இவர் வீட்டு நூலகம் பற்றி நான்கூடக்கேள்விப்பட்டு இருக்கிறேன்.), சுஜாதா (பல சுவாரசியமான விஷயங்களை இவருடைய மடல்களில் படிக்கிறேன்). சிங்கை எழுத்தாளர் கமலா அரவிந்த். இவரிடம் பல மாதங்களுக்கு முன்பு வலைப்பதிவுகள் பற்றிப்பேசி, ஒன்றை உருவாக்கியும் இருக்கிறேன். அவருடைய நேரமின்மையாலும், என்னுடைய சோம்பல்தனத்தாலும் பிறகு தொடரவில்லை. ஆயினும் அவர் இதுவரை எழுதியவற்றை, அவர் விரும்பிய வண்ணம் ஒரு வலைப்பதிவில் தொகுத்து வைத்திருக்கிறேன்.

Comments on "Negative Energy to P o s i t i v e - E n e r g y"

 

post a comment