வேம்படி மகளிர் கல்லூரி/விடுதி - 7
கொஞ்ச வேலைகள் இருந்ததினால இந்தப்பக்கம் வரமுடியலை. என்கூட வேம்படி விடுதிக்கு வந்த உங்களை, எங்கட பள்ளிக்கூடத்துக்கு கூட்டியண்டு போகப்பாக்கிறன். ஏன் சந்தேகமா சொல்லுறன் எண்டு பாக்கிறீங்களா? எத்தனையோ வருசங்கள் ஓடிப்போயிற்றுதெண்டபடியா நிறைய மறந்து போயிற்றன். எத்தனை வருசம் எண்டு கருத்துப்பெட்டில குரல் கொடுக்கக்கூடாது சொல்லிற்றன். யாழ்ப்பாணத்தில பெரியாஸ்பத்திரிக்குப் பக்கத்தில இருக்குதெண்டு முந்தி சொல்லியிருக்கிறந்தானே. ஆஸ்பத்திரி இருக்கிற தெருக்குப் பெயர் ஹிஹி...ஹிஹி Hospital Road/Main Street, தமிழில் பறங்கித் தெரு என்று சொல்லுவினமாம். (செய்தி நன்றி: திரு.கந்தசாமி - எங்கப்பாரு) எங்கட பள்ளிக்கூடம் முதலாம் குறுக்குத் தெருவில இருக்கு. (ஆர்வலர்கள்னா' யாருன்னு கேக்குற தமிழர்கள் என்னுடைய வலைப்பதிவுக்கு வருவதில்லையென்றபடியால் தைரியமா இப்படியெல்லாம் எழுதுகிறேன். :) ) பெரிய அகலமான வீதியெல்லாம் இல்லை முதலாம் குறுக்குத் தெரு. அதற்குள் பள்ளிக்கூடம் இருக்கா என்பதே புதியவர்களுக்கு சந்தேகமாக இருக்கும். எனக்கும் இருந்தது. உயரமான மதிற்சுவர்களோடு பெரிய கேற்றும், கேற்றுக்கு மேல் வளைந்த கம்பிகளிடையே இருக்கும் 'வேம்படி மகளிர் கல்லூரி' என்ற பெயரும் வரவேற்கும். உள்ளே நுழைந்தால், கொஞ்சத் தூரத்தில் சில பெரிய மரங்கள் நிற்கின்றன. வலது பக்கம் ஏற்கனவே சொன்னமாதிரி விடுதிக்கட்டடம் இருக்கிறது. இடதுபக்கம், மாடிக்கட்டடம் ஒன்று; சரஸ்வதி பூஜை சமயத்தில் மட்டும் மாடிப்பக்கம்போக சின்ன வகுப்புக்காரருக்கு அனுமதி கிடைக்கும். சில நேரங்களில் யாரும் பார்க்காத நாட்களில் கீழ்தளத்தில் இருக்கும் வகுப்புகளையும் சில வகுப்புகளில் எங்களைப்பார்த்து இளிக்கும் எலும்புக்கூடுகளையும் கண்டு வருவோம். பதினோராம் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்கான கட்டம் அது. மாடியில் பொதுவாக என்ன செய்வார்கள் என்று ஞாபகம் இல்லை. தொடர்ந்து நேராகப்போனால் வலதுபக்கமும் இடதுபக்கமும் செம்மண்தரை விரியும் (செம்மண் என்றுதான் ஞாபகம். இங்க இருக்கிற பெரியவங்க, வேம்படிக்குள்ள நுழைஞ்சவங்க சொல்லுங்களேன்.) இடதுபக்கம் மூன்று வகுப்புகள் கொண்ட, தூண்களால் தூக்கிநிறுத்தப்பட்ட ஆஸ்பெஸ்டாஸ் கட்டடம் இருக்கும். தாளப்பதிந்த சுவர்களே இந்தக்கட்டத்தில் இருந்ததினால், பெரிதாகக் குழப்படி எல்லாம் செய்யமுடியாது. எட்டாம் வகுப்பு மாணவிகளுக்கான இடம் என்று ஞாபகம். என்னுடைய உறவுக்காரர்கள் சிலரும் படித்ததில், அவர்கள் இந்தக்கட்டத்தில் கொட்டமடிக்கையில் நாங்களும் போய் வருவதுண்டு. |
Comments on "வேம்படி மகளிர் கல்லூரி/விடுதி - 7"