வேம்படி மகளிர் கல்லூரி விடுதி - 6
வீட்டுக்குச் செல்லாத சோகமான வார இறுதிகளும் பரவாயில்லாதவைதான். வீட்டில் இருந்தால் வாசிக்கமுடியும். ஹாஸ்டலில் அது முடியாது என்பதுதான் பெரிய விஷயம். வீட்டிலிருந்து ஹாஸ்டலுக்குப் புத்தகங்கள் எடுத்துப் போக அனுமதியிருக்கவில்லை. அதனால், வார இறுதிநாட்கள் ஊர்ந்துகொண்டே போகும். அந்த சனிக்கிழமைகளில் எழும்பி பல்தேய்த்து தேத்தண்ணி குடித்துவிட்டு, அலுமாரியில் கொறிக்க என்ன இருக்கிறது என்று கிளறிக்கொண்டிருப்போம். என்னைப் போல வீட்டிற்குப் போகாத பாபாத்மாக்கள் தோழிகள் அறைக்கு விசிட் செய்வார்கள். அப்படி யாராவது வந்தால், உண்ணக் கொடுத்தெல்லாம் உபசரிப்போமாக்கும்! :) சில பொழுதுபோகாத நேரங்களில் கீழே விடுதியின் நடுவில் இருக்கும் *தோட்டப்பகுதியில்* இருந்து காரசாரமான குரல்கள் கேட்கும். வார்டனின் காதுகளுக்குக் கேட்காத ஒலியளவிலேதான் விவாதங்கள் நடைபெறும். விவாதம் விவாதம் என்று சொல்கிறாளே ஒழிய என்ன விவாதம் என்று சொல்லமாட்டேன் என்கிறாளே என்று நீங்கள் அலுத்துக்கொள்ளலாம். பின்ன, இந்த விவாதம் பற்றி எழுதவந்துதானே, தொடராக்கி உங்களை அறுத்துக் கொண்டிருக்கிறேன். :) பெரும்பாலும் இந்தளவு காரசாரமாக விவாதிக்கும் அளவுக்கு என்ன விஷயங்களோ என்று யோசித்துள்ளேன். ஆனால், அந்த விவாதத்தின் அவசியமும், அவை தமிழ் சமுதாயத்தில் பின்னிப் பிணைந்திருக்கும் அளவும் இப்போதுதான் லேசாகப் புரிகிறது. வேறொன்றுமில்லை. கமலா? ரஜனியா? விவாதம்தான் அது! ஐந்தாறு பேர் குசுகுசுவென்று ஆரம்பித்து, விடுதியெங்கும் கூட்டணி சேர்க்கும் இந்த விவாதத்தில் படிப்படியாக அனைவரும் உள்ளிழுக்கப்படுவார்கள். மேலே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நாங்களும் உள்ளிழுக்கப்படுவோம். விவாதக் கூட்டணியில் பேசுபவர், என்னைக் கேட்பவர் யார் என்பதைப் பொறுத்து பதில் சொல்லியிருக்கிறேன். யார் இந்த கமல், ரஜனி என்று கேட்டு, ஏதோ சந்திரமண்டலத்துப் பிரஜையென்று என்னைச் சிலர் பார்த்ததும் உண்டு. எனக்கு சிவாஜியத்தெரியும், நாகேஷைத் தெரியும், பாலையாவைத் தெரியும். மற்றவர்களையெல்லாம் எப்படித்தெரிந்துகொள்வது. விடுதியில் மானம் காத்துக்கொள்வது எப்படி? யாரோ ஒரு புண்ணியவதியின் உபயத்தில் ஒரு சினிமா எக்ஸ்பிரெஸ் கிடைத்தது. ஒரு வாரம் வைத்துப் புரட்டியும் எல்லோரும் ஒரே மாதிரித் தெரிந்தார்கள். கவனிக்க! இப்போது நாந்தான் திரைப் பார்வை எழுதுகிறேன். அழுக்குப் பையனில் இருந்து, தனுஷ் பையன் வரைக்கும் தெரிந்துகொண்டிருக்கிறேன். எல்லாம் காலம் செய்த மாயம். :) சண்டியர் விருமாண்டி பாடல்கள் கேட்டபோது மனதில் எழும்பிய நினைவுகள் விடுதியில் ரஜனி பெரிதா? கமல் பெரிதா என்று கிளம்பும் விவாதம்தான். ஆ..... சொல்ல மறந்துவிட்டேனே! பெரும்பாலும் கமல் அணியினரே வெல்வர். I think we, the Vembadi girls really had good taste. (any comments from the Sri Lankans here? ) |
Comments on "வேம்படி மகளிர் கல்லூரி விடுதி - 6"