வேம்படி மகளிர் கல்லூரி விடுதி - 3
பகுதி ஓன்று, இரண்டு. ஒவ்வொரு மாணவிக்கும் இரும்புக்கட்டிலும், சிறிய மர அலுமாரியும் தரப்படும். விடுமுறை முடிந்து கொண்டு வரும் சூட்கேஸ்களை வீட்டிற்குத் திருப்பி அனுப்பி விடுவோம். பிறகு விடுமுறைக்கு முன்பு வரும்போது திரும்பிக் கொண்டு வருவார்கள். மெத்தை, தலையணை, போர்வை எல்லாம் வீட்டில் இருந்துதான் வரும். மெத்தையை மட்டும், விடுமுறைக்குப் போகும்போது நன்றாகக் கட்டி ஸ்டோர் ரூமில் போட்டுவிட்டுப் போகலாம். அதுவும் பெயர், வகுப்பு, விலாசம், சாதகக்குறிப்பு ஆகியவற்றோடு ஏதாவது அடையாளமும் வைத்துவிட்டுப்போகவேண்டும். விடுமுறை முடிந்துவந்தது, உடனே வந்து மெத்தையைக் கண்டுபிடித்து எடுத்துவிடவேண்டும். இல்லையென்றால் கோவிந்தாதான். விடுதி வாழ்க்கையை ரொம்பவும் ரசிக்கவில்லையென்றாலும் சில விஷயங்கள் மனதில் தங்கியிருக்கின்றன. அப்படியே சிலரும் மனதில் தங்கியிருக்கின்றனர். முடிந்தவரை எழுதுகிறேன். விடுதியில் ஆறாம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் பைப்பில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. மற்றவர்கள் எல்லாரும் கிணற்றில் கிள்ளித்தான் குளிக்கவேண்டும். பெரும்பாலானவர்கள் விடியற்காலையிலேயே குளித்துவிடுவார்கள். பிற்பகலில்/இரவில் குளிப்பவர்கள் பள்ளிக்குப் பக்கத்தில் இருந்து வங்கியில் அனைவரும் வீடு செல்லக்காத்திருப்பர். முதலில் ஏனென்று விளங்காவிட்டாலும், பிறகு பெரியவர்களால் எச்சரிக்கப்பட்டோம். காலையில் எழுந்து குளிக்கப்போவது ரொம்பவும் அருமையான சம்பவம். பள்ளியே நிசப்தமாக இருக்கும். காலில் செருப்பு அணிந்திருந்தாலும், பாம்பு இருக்ல்லாம் என்று யாராவது பயமுறுத்துவார்கள். கிணற்றில் தண்ணி அள்ளவேண்டுமென்பதால், எங்களுடன் சிலர் சேர்ந்துகொள்வார்கள். வார்டனின் கண்ணிலும், அவர் பாலூட்டி வளர்க்கும் பாம்பான watchman ( :) ) கண்ணிலும் படாமல் பகுங்கிச் செல்வோம். ஒரு செட் பைப்புகள் ஆறாம், ஏழாம் வகுப்பினருக்கான பௌதீகவியல் பரிசோதனைக் கூடத்திற்குப் பின் இருந்தது. அதிகாலையில் அந்தப்பக்கம் செல்லும்போதெல்லாம், முதன்முதலில் அயோடின் பார்த்தது, புரோதப் பரிசோதனைக்காக தலைமுடியை எரித்து மணந்தது எல்லாம் ஞாபகம் வரும். விடுதியில் ஒரு அக்கா இருந்தார். பெயர் மறந்துவிட்டது. புங்குடுதீவுதான். எனக்கெல்லாம் சவுக்காரம் - அதாங்க சோப்பு - இரண்டு கிழமை வருவது ரொம்ப அபூர்வம். அவரோ மூன்று மாதம் தொடர்ந்து பயன்படுத்துவார். மூன்று மாதம் என்பது குறைவாகவும் இருக்கலாம். முகம் கழுவுவதென்றால் சவுக்காரத்தை இரண்டு முறை தடவுவார், அப்படியே முகத்தில் தேய்த்துக்கொள்வார். பலரும் அவரைப் பகிடிபண்ணுவார்கள். நானெல்லாம் எலிக்குஞ்சு என்பதால், மௌனமாகப் பார்த்துக்கொண்டு இருப்போம். |
Comments on "வேம்படி மகளிர் கல்லூரி விடுதி - 3"