Friday, December 19, 2003

வேம்படி மகளிர் கல்லூரி விடுதி - 2

எங்கள் பள்ளிவிடுதியில் நடுவே முற்றம் இருக்கும். சில செடிகொடிகளும் மரங்களும் வளர்ந்திருந்தது. அதைச்சுற்றி இருக்கும் நடைபாதைவழியே சுற்றிப்போவதற்கு சோம்பல்பட்டு வார்டன் பார்க்காத சமயம் தாவித்துள்ளிக்குதித்து ஓடியிருக்கிறோம். சின்ன விஷயந்தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், எங்களுடைய வார்டன் கத்த ஆரம்பித்தால் நிறுத்தமாட்டார். (இந்தக்கட்டுரையை அப்ப எழுதி இருந்தால், இவ்வளவு மரியாதையெல்லாம் வார்டனுக்கு கிடைத்திருக்காது. )

டைனிங் ஹாலை அடுத்து விடுதியில் தங்கியிருக்கும் ஆசிரியைகளும், வார்டனும் உணவருந்தும் அறை இருக்கிறது. அந்த அறைக்கு முன்னால் சின்ன கையலம்பும் இடம். மற்றப்பக்கத்தில் விடுதியின் சமையலறை இருக்கிறது. பெரிய பெரிய அண்டாக்களும் கரிச்சட்டிகளும் நிறைந்திருக்கும் பெரிய அறை. சில வேளைகளில் இரவில் மாணவிகள் தாங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்திருக்கும் கோழி முட்டைகளை, அடையாளமிட்டு அவிப்பதற்குக் கொடுப்பார்கள். அதற்கப்பாலிருக்கும் பூட்டியிருக்கும் அறைகளின் என்ன இருந்திருக்கும் என்றெல்லாம் அப்போது நான் யோசித்ததில்லை. அந்த நடைபாதையில் நடந்தால் நேரே பள்ளிக்குப்போகும் வாசல் இருக்கிறது. அடுத்த பக்கத்தில் sickroom. யாருக்காவது காய்ச்சல், வேறு உபாதைகள் வந்தால், இங்குதான் வந்து படுக்கவேண்டும். ஒரு முறை அனல் பறக்கும் காய்ச்சலோடு இங்கு படுத்துக்கொண்டு halucinate பண்ணியது லேசாக நினைவில் இருக்கிறது. அடுத்து இருக்கும் பெரிய அறையில் சில மாணவிகள் தங்கியிருப்பர். ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு பெயரும் எண்ணும் இருந்ததாக ஞாபகம். (வேம்படியில் விடுதியில் தங்கிப்படித்த யாரையாவது சந்தித்தால் கேட்கவேண்டும்.)

நான்கு பக்கத்தையும் சுற்றிப்பார்த்தாயிற்று. சாப்பாட்டு அறைக்கு எதிரே கைகழுவ இருந்ததைப்போலவே, அதே அமைப்புடன் எதிர்ப்புறத்திலும் கட்டப்பட்டு இருந்தது. இந்த இடம், மாணவிகள் காலையில் எழுந்ததும் பல்தேய்த்து முகம் கழுவுவதற்குப் பயன்பட்டது. இந்த இரண்டு washroomகளுக்கு அருகே இருந்த மாடிப்படியில் ஏறி மேற்பக்கம் போகலாம். சில அறைகள் பூட்டி வைக்கப்பட்டன. சாலையை ஒட்டிய பக்கத்தில் முறையே பத்துப் பேர் தங்கக்கூடிய பெரிய அறை ஒன்று, மூன்று பேர் தங்கும் அறைகள் இரண்டு. விடுதியில் தங்கும் ஆசிரியையின் அறை. அடுத்து எங்களின் சிம்ம சொப்பன வார்டனின் அறை. அடுத்து இன்னுமொரு பெரிய அறை. அந்த அறைக்கு முன்னே ஆளுயர நிலைக்கண்ணாடி. பக்கவாட்டில் இருந்த பக்கத்தில் ஒரேயரு அறை மீண்டும் பத்துப்பேர் தங்கக்கூடிய அறை இருந்தது. அந்தப்பக்கத்தில் இருந்த மற்ற அறைகள் எல்லாம் பூட்டப்பட்டு இருந்தது. கூடவே கீழே விருந்தினர் கூடத்திற்கு செல்லக்கூடிய பெரிய வளைந்த அமைப்புடைய மாடிப்படி எல்லாம் இருந்தது. ஆனால், மாணவிகளுக்கு அந்தப்பக்கம் நடமாடுவதற்கு அனுமதி இல்லை.

எங்களைப்போன்ற வானரங்களுக்கு சொல்லவா வேண்டும். :) பூனைபோல நடந்துபோய் கீழே விருந்தினர் அறையில் தோழிகள் அவர்களின் குடும்பத்தாருடன் பேசிக்கொண்டிருப்பதை வேடிக்கை பார்ப்பது. அதுவும் யாராவது மாணவியின் சகோதரனோ, உறவு முறை ஆணோ வந்துவிட்டால், ஹாஸ்டல் திமிலோகப்படும். அந்த நேரத்தில்தான் வார்டனுக்கு தலைக்குப்பின்னுக்கும் கண் இருக்கிறதா என்று யோசிக்கத்தோன்றும். ஹாஸ்டலில் இருந்த இரண்டு வருடங்களும் நான் இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் கற்று அறிவாளியாகாததால் *இந்தப் பிரச்சினையில்* வார்டனிடம் திட்டு வாங்கியதில்லை. வார்டன் திட்டுவதோடு நின்று விடமாட்டார், குடும்பத்தார் அடுத்த முறை வரும்போது மறக்காமல் குற்றப்பத்திரிகை வாசித்துவிடும். (விடாது என்று எழுத கை துடித்தாலும், எனது முதிர்ச்சியை காட்டவேண்டிய கட்டாயம். :) ) எங்க அம்மா, என்னமோ நான் பஞ்சமா பாதகத்தில் ஒன்றை செய்ததுபோல புலம்பி, தண்டனையும் வழங்குவார். நாய் வால் நிமிர்ந்திருக்கும் என்று எதிர்பார்த்தால், நீங்கள் ஏமாந்துபோவீர்கள். ஏதோ நான் குறும்பிலே பிறந்து குறும்பிலே வளர்ந்தது என்று எண்ணிக்கொள்ளாதீர்கள். ஏதோ, என்னாலான நல்ல காரியங்களை அவ்வப்போது தோழிகள் சகிதம் நடத்திக் கொண்டிருந்தேன்.

மேலே, சாலையோரம் இருக்கும் பக்கத்திலும், அதற்கு நேரெதிரான பக்கத்திலுந்தான் மாணவிகளின் அறைகள் இருந்தன. சமையலறைக்கு மேலே இருந்த அறைகள் எல்லாம் பூட்டப்பபட்டு இருந்தன. விருந்தினர் கூடத்திற்கு மேலே இருந்த பூட்டப்பட்ட அறைகளில் சில சன்னல் இடுக்குகள் வழியே எட்டிப்பார்த்து அழகாக அலங்கரிக்கப்பட்ட அந்த அறைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப்போயிருக்கிறோம்.

(தொடரும்..)

Comments on "வேம்படி மகளிர் கல்லூரி விடுதி - 2"

 

post a comment