Thursday, December 04, 2003

Inuit (இனுயிட்)


'He can sell ice to Eskimos' என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒருவர் எந்தளவு பேச்சுவல்லமை மிக்கவர் என்று காட்டுவதற்கு இதைச்சொல்லுவார்கள். நமக்கு புவியியல் பாடத்தில் சொல்லிக்கொடுத்தபடி எஸ்கிமோக்கள் ஆர்டிக் பிரதேசத்தில் வாழும் மனிதர்கள். அவர்களின் வீட்டிற்குப்பெயர் Igloo.

Inuit Kid

ஆனால், அவர்களை 'எஸ்கிமோ' என்று இப்போதெல்லாம் யாரும் கூப்பிடுவதில்லை. எஸ்கிமோ என்ற பெயர் அவர்களுக்கு மற்றவர்களால் அதுவும் சமீபத்தில் சில நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் வைக்கப்பட்டது. ஆர்டிக் பிரதேசத்தில் வசிப்பவர்களில் கனடாவைச்சார்ந்தவர்கள் இனுயிட் என்று அழைக்கப்படுகிறார்கள். 'இனுயிட்' என்றால் மனிதர்கள் என்று அர்த்தம். இனுக் (Inuk) என்பதன் பன்மையே இனுயிட். அலாஸ்காவை சேர்ந்தவர்கள் Inupiaq என்று அழைக்கபடும்வேளையில் சைபீரியாவைச் சேர்ந்தவர்கள் Yupik என்றழைக்கப்படுகிறார்கள். ஆனால் இனுயிட் ஆங்கிலத்தில் பிரபலமானதைப்போல மற்ற இரண்டு வார்த்தைகளும் பிரபலமாகவில்லை.

Inuit area in Red

'எஸ்கிமோ' என்ற வார்த்தை ஏன் விலக்கப்பட்டது என்று உங்களுக்குத்தெரியுமா? என்னுடன் பகிர்ந்துகொள்ளப்பட்ட இரண்டு விஷயங்களை உங்களுக்குச் சொல்கிறேன். ஒன்று: செவ்விந்தியர்களில் பல பிரிவுகள் இருப்பது உங்களுக்குத்தெரிந்திருக்கலாம். அபெனாக்கி (Abenaki) இந்தியர்கள் இவர்களை 'பச்சைமாமிசம் சாப்பிடுபவர்கள்' என்ற அர்த்தத்தில் 'எஸ்கிமோ' என்றழைத்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் நவீன மொழியியலாளர்கள் பனிச்சப்பாத்தை லேஸ் கொண்டு கட்டுவதையே 'எஸ்கிமோ' என்ற வார்த்தை சொல்கிறது என்கிறார்கள். ஆனால் இதற்கிடையில் ஆங்கிலம் பேசுபவர்கள் பலர் 'எஸ்கிமோ' அவர்களைக்குறைத்துச் சொல்லும் சொல் என்று நினைத்து 'இனுயிட்' என்று சொல்கிறார்களாம்.

இரண்டாவது: கனடாவிற்கு ஐயாயிரம், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெரிங் கடல் வழியே அலாஸ்காவிற்கு வந்த இனுயிட், பிறகு ஏறக்குறைய பத்தாம் நூற்றாண்டில் வந்த வைகிங் காரர்களுக்குப் பிறகு வந்து சேர்ந்தவர்கள் பிரெஞ்சுக்காரர்கள். அவர்களோடோ, பிறகோ வந்து சேர்ந்த மதபோதகர்கள்தான்(Missionaries) செவ்விந்தியர்களுடன் முதன்முதலில் பழகியவர்கள். அதில் Algonquin ("Algonkian") மொழி பேசும் இந்தியர்களிடம் இருந்து இனுயிட் மக்களைச் சுட்டும் சொல்லை கற்றுக்கொண்டார்கள். Eskimantsik - பச்சை மாமிசம் உண்பவர்கள் என்ற அர்த்தம் பொதிந்த சொல் அது. பிரெஞ்சு மதபோதகர்கள், அதை பிரெஞ்சாக்கிக்கொண்டனர். எப்படி? 'Esquimaux' - தமிழில் பிரெஞ்சுக்காரர்கள் பெரும்பானமையாக கடைசியில் வரும் சத்தத்தை விழுங்குவதுபோலச் சொன்னால் எஸ்கிமோ. நாளடைவில் ஆங்கிலம் பேசுபவர்களும் எஸ்கிமோ என்பதை Eskimo என்று பயன்படுத்தத்தொடங்கினார்கள்.

சரி... 'பச்சை மாமிசம் சாப்பிடுபவர்கள்' என்று அடிக்கடி சொல்கிறார்களே. அது என்னவென்று நாளைக்குப்பார்க்கலாமா.

Comments on "Inuit (இனுயிட்)"

 

post a comment