Sunday, November 16, 2003

நேரமோ நேரம் - 6



வெண்மணற்பரப்பை நோக்கி ஓடிவரும் நீல அலைகள், கூட்டை நோக்கிப்பறக்கும் பறவைகள், இதமாக வருடும் காற்று, முகில்கள் இல்லாத அந்திவானில் மெதுவாக விடைபெறும் சூரியன். சூரியன் மறையும் அந்த நேரத்தில் லேசாக ஒளிவிடத்தொடங்கும் விளக்குகள். அலுவலக நேரம் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும் மனிதர்கள் - பறவைகளைப்போலவே.

அதே நேரத்தில் உலகின் மறுமுனையில் இதமான காலைக்காற்று வீச, அந்தக்காற்றில் தென்னை, மா, வேப்பமரங்கள் ஆட, கீச் கீச்சென்று ஒலி எழுப்பியவாறே தங்கள் பொழுதைத்தொடங்கும் பறவைகள், பறவைகளின் ஒலியினூடே காற்றில் தவழ்ந்து வரும் சுப்ரபாதம், இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டே எழும்பி வரும் சூரியன், அந்த சூரிய ஒளியில் தகதகவென மினுங்கும் கோவில் கோபுரம். சோம்பல் முறித்தபடியே எழுந்திருக்கும் மக்கள், சூரியனுக்கு முன்பெழுந்து படிக்கும் மாணவர்கள், அவர்களின் தாயார்கள். குளித்து சுத்தமாக கோயிலுக்குப்போகும் பக்தர்கள். வயலுக்கு செல்லும் விவசாயிகள்.

மனிதர் பூமியில் நடமாடத்தொடங்கியதுமுதல், பகல்வேளையே நேரத்தினை அவனுக்கு காட்டும் காரணி. அதிகாலையில் உதித்து, அந்திமாலையில் விடைபெறும் சூரியனைப்போல மனிதனை கட்டுப்படுத்தும் நேர அளவு/காரணி (indicator - வழக்கம்போல யாராவது தமிழ்பதம் சொல்லுங்கப்பா) வேறெதுவும் இல்லை என்பேன்

அதிகாலையில் மாட்டில் பால்கறந்து, வயல் உழுது, சந்தையில் சாமான்களை விற்று, தொழிற்சாலையிலோ, பணியகத்திலோ வாடி, கணினியில் லொட்டுடொட்டென்று தட்டிக்கொண்டிருக்கிறான். சூரியன் மேலெழ மேலெழ, மனிதனின் உற்பத்தித்திறனும் அதிகரிக்கிறது. அப்படியே சூரியன் வானத்தில் கீழிறங்கும்போது, என்ன நடக்கிறது? உற்பத்தித்திறன் குறைகிறது. சிலர், காப்பித்தண்ணிபோன்ற (சரி சரி. லத்தே, மோக்கா, எஸ்பிரஸ்ஸோ. ஓகேவா?) செயற்கைகாரணிகளால் தங்களைத்தாங்களே உற்சாகமூட்டிக்கொள்கிறார்கள்.

சூரியன் மறையும் நேரத்தில், ஆடு மாடுகள் ஓய்வெடுத்துக்கொள்கின்றன. சந்தைகள், கடைகள் மூடப்படுகிறது. அதேநேரத்தில் உணவுவிடுதிகளும், காப்பிஷாப்புகள், பப் போன்றவற்றில் விற்பனை அதிகரிக்கின்றது. குடும்பஸ்தர்கள் கூடுநோக்கிப்பறக்கிறார்கள். சில மணிநேரத்தில் இருள்நன்குபரவியபிறகு, அந்தப்பிராந்திய மக்கள் உறங்கப்போகிறார்கள். அடுத்த நாளைக்காக தங்களைத்தயார் செய்துகொள்கிறார்கள். விழித்துக்கொண்டிருப்பது, என்னைப்போன்ற சில ஆந்தைகளும், செயற்கை விளக்குகளுமே.

அதேநேரத்தில், உலகின் அடுத்த பக்கத்தில், அடுத்த நாள் உதயமாகிறது. இன்னொரு சுழல் தொடங்குகிறது.

Comments on "நேரமோ நேரம் - 6"

 

post a comment