Friday, November 14, 2003

தையலின் தையல்வேலை



சுபாஷ் பஜாரில் ஏகப்பட்ட விளக்குகள். முருகன் ஜவுளி வாசலில் வழியோடு போகிறவர்களை வருந்தி வருந்தி அழைத்துக் கொண்டு நின்றார்கள். ஒருவன் ரிக்ஷாவுக்குள் நோட்டீசைத் திணித்தான். மலிவான விலையில் டெர்லின், கிரேப் மெட்டீரியல்.

எல்லோரிடமும் டெர்லின் சட்டை இருக்கிறது. பெரும்பாலும் சந்தன நிறத்தில். இந்த வருடமும் என் டெர்லின் கோரிக்கை வீட்டுப் பெரியவர்களால் உறுதியாக நிராகரிக்கப்பட்டது.

டெர்லின், போன பிறவியில் புண்ணியம் செய்தவர்களுக்கு. எனக்கு வேண்டிய துணிகளை சப்ளை செய்யவே மூக்கையாச் செட்டியார் அவதாரம் எடுத்திருக்கிறார். முழங்காலுக்கு மேலே வழிகிற டிராயரும், முழங்கைக்குக் கீழே இறங்கின சட்டையும் தைத்துக் கொடுக்க குருசாமி டெய்லர் இருக்கிறார்.

போன வாரமே, கொளகொளவென்று தைத்து அம்மா ரவிக்கைகளோடு பிரிமணை மாதிரிச் சுற்றிக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

"ஏதாவது மாத்தணும்னா, இப்ப எடுத்துட்டு வந்துடாதீங்க. ஏகப்பட்ட துணி விளுந்து கெடக்குது. தீபாவளிக்கு அப்புறம் தாங்க".

இது அம்மாவுக்கு. என் துணிகள் குருசாமியிடம் திரும்பப் போவதே இல்லை.

- எழுத்தாளர் இரா.முருகனின் "ஒரு கோடீஸ்வரன்-ஒரு தீபாவளி" கதையில் இருந்து.

oru buildup photoமூளையைக்கசக்கி யோசித்தால், ஆரம்பத்திலிருந்து ஒன்பதாவது படிக்கும்வரைக்கும் என்னுடைய உடைகளை தைத்துத்தந்தது அம்மாதான். எப்பவாவது வெளியில் டெய்லரிடம் கொடுக்கப்படும். புங்குடுதீவில், பக்கத்தில் இருக்கும் ஒரு அக்காவிடம் கொடுத்து தைக்கப்பட்ட ஏராளமான லேஸ் வைத்த சட்டைகளை ரொம்பவும் பிரியத்துடன் போட்டுக்கொண்டு மயில் தோகையை வைத்துக்கொண்டு அலட்டியதுபோல அலட்டி இருக்கிறேன். அவ்வப்போது வெளியில் இருந்து யாராவது வந்தால் கொண்டு வரும் ·பிராக்குகளும், அப்பாவோடு போயிருந்தபோது வாங்கிய மிச்ச உடைகளும் தனி.

அதுவும் சென்னை வந்து, 'தனித்தன்மை' என்ற சமாச்சாரம் தலைதூக்கியபோது கடைக்கு சென்று சுடிதாருக்கு துணி எடுக்கும்போது விக்கிக்கும் எனக்கும் ஒரே மாதிரி வாங்கவேண்டாம் என்று மல்லுக்கு நின்றது. என்னுடையதுமாதிரியே ஆனால் வேறு நிறத்தில் அவளுக்கு வாங்க, அதையெல்லாம் நான் போடும் நாட்களில் போடவேண்டாம் என்று சொல்லியும் போட்டுக்கொண்டு வருபவளோடு குடுமிப்பிடி சண்டையில் இறங்கியது என்று எத்தனையோ கதைகள் உண்டு. (மல்லுக்கு நின்று அலுத்துப்போய், எல்லாரும் உடுத்தபிறகு வெளிக்கிட்ட நாட்களும் உண்டு. - எல்லாருக்கும் மலரும் நினைவுகள் வரும் என்று நினைக்கிறேன்... உனக்குந்தான் விக்கி... சரி சரி முறைக்காதே!)

அம்மாவிடம் துணி தைக்கக்குடுத்தால் நிறைய பிரச்சினைகள். தைத்துமுடிக்கும்வரை, அவவுக்கு எடுபடி வேலை செய்யோணும். 'தையல் பழகச்சொன்னா கேட்டாத்தானே, இப்ப, இப்படி நிக்கத்தேவையில்ல' என்ற போதனைகள். (அதெல்லாம் காதுல ஏறும்னு நினைக்கிறீங்க. ம்ஹ¥ம்...) தைக்கத்தொடங்கிற்றா எண்டா - அதெப்படி சனி, ஞாயிறுல மட்டும்தான் தைக்கிறதுக்கு நேரம் கிடைக்குமெண்டு தெரியேல்ல. அண்டையான் சமையல் செய்யோணும். அதுவும் எனக்கு சமைக்கவெளிக்கிட்டனெண்டால் ஒரு எடுபிடி தேவை - அதாங்க Sous Chef. 'விக்கி, வெங்காயம் உடை', 'உள்ளி உரி', 'தேங்காய் திருவு', 'இந்தச்சட்டியைக்கழுவு' இத்யாதி! இத்யாதி!!

இப்படிக் கரணமாடி, கடைசில சுடிதார் கைக்கு வரேக்க, நான் சொன்ன பாட்டேர்ன் இருக்காது. அல்லது ஒருக்கா விக்கின்ற பிறந்தநாள் சுடிதார் மாதிர் கழுத்து 'ஙே' எண்டு முழிக்கும். 'ஒப்பரேஷன் சக்ஸஸ், பேஷண்ட் டையிட்' மாதிரி சுடிதார் நல்லாத்தான் இருக்கும் - கழுத்தை விட. 'கழுத்து நல்லாயில்லை', 'கழுத்தை ஒழுங்கா வெட்டித்தைக்கத்தெரியேல்ல - தைக்க வெளிக்கிட்டுட்டா', 'தைக்கத்தெரியும் எண்டு வெளியிலை சொல்லாதேங்கோ', 'எல்லாம் அன்னமுத்து (என்ற அம்மம்மா) கொடுத்த செல்லம்' என்ற பொருமல்கள் சகஜம்.

naanum ivaiya maathiri kaiyaalathaan thaichanaan :Dஇந்தப்பிரச்சினையே வேண்டாம் எண்டு சூளுரைச்சிற்று, தேடுதெண்டு தேடி ஒரு நல்ல டெய்லரைக்கண்டு பிடிச்சதில இருந்துதான் நிம்மதி. அதுவும் ·பௌண்டன் பிளாசாவுக்கு முன்னுக்கு விக்கிற பிளாட்·போர்ம் துணி - முதன்முதல்ல வாங்கப்போகேக்க மீட்டர் 15 ரூபாய். நானும் வித்யாவும் கையில ஒரு சுடிதார் வாங்குறதுக்கு வச்சிருந்த காசில மூண்டு சுடிதாருக்கு துணி வாங்கினனாங்க. பிறகு கொஞ்சங்கொஞ்சமா அதை டெயிலரிட்ட குடுத்து தைப்பிச்சது தனிக்கதை.

சரி ஏன் இண்டைக்கு இந்தப்புராணம் எண்டு கேக்குறீங்களா? மான்ரியலில் உடுப்புத்தைக்கும் தொழிற்சாலைகள் அதிகமாம். அதோட தயார்செய்யும் இடங்களும் இங்கே இருக்கு எண்டு சொல்லி ஒரு பிரண்டோட போனகிழமை போயிற்றுவந்தன். வுல் கோட்டு, Mexx நிறுவனத்தின் இடம் என்று ஒரு சுற்றுலா. அந்த இடத்தில் ஒரு கடையில துணிகளும் வித்தண்டு இருந்திச்சினம். நிறைய இத்தாலியன் பொம்பிளைகள் துணி வாங்கியண்டு நிண்டிச்சினம். அதில ஒரு துணி - சட்டை தைக்கும் அளவு வாங்கியண்டு வந்து ஒரு பரிசோதனை நடந்தது. ஒரு கிழமையா நடந்த பரிசோதனை முயற்சி நேற்றுத்தான் முடிவுக்கு வந்தது.

போட்டுப்பார்த்தன். நல்ல மரூன் நிறம். எல்லாம் சூப்பர் - ஒண்டத்தவிர. கழுத்து 'ஙே...' எண்டு என்னைப்பார்த்து முழிச்சுது!

Comments on "தையலின் தையல்வேலை"

 

post a comment