Wednesday, November 05, 2003

நேரமோ நேரம் - 4

சூள்



இலங்கையே ஒரு தீவு. அதுக்குள்ள எங்கட ஊர் இன்னொரு குட்டித்தீவெண்டு உங்களுக்குத்தெரியும்தானே. வடக்குப்பக்கத்தில அந்த நாளைல, எங்கட அப்பா சின்னப்பிள்ளையா இருந்தபோது சிலர் எப்படி மீன்பிடிக்கிறவை எண்டு சொன்னேர். கூட ஒரு சின்னத்துணுக்கும். இண்டைக்கு அதை உங்களோட பகிர்ந்துகொள்ளுறன்.

Jaffna (W) Punguduthivu"

கடல் சூழ்ந்து இருக்கிறபடியா எங்கட சாப்பாட்டில செவ்வாய், வெள்ளி தவிர்த்து மற்ற நாளெல்லாம் மீன் முக்கிய உணவு. மீன்பிடிக்கிறதில நிறைய விதம் இருக்கு. இண்டைக்கு நான் சொல்லப்போறது அந்தக்காலத்தில ஆக்கள் மீன்பிடிச்ச ஒருவிதம் பற்றி. எங்கட ஊர்ல தென்னை மரங்களும் பனைமரங்களும் நிறையத்தானே. நல்லாக்காஞ்ச தென்னோலைகளை எடுத்து ஒண்டுக்குள்ள இன்னொண்டை வச்சு நல்லாக்கட்டுவினமாம். அடிக்கொரு தரம் நல்லாக்கட்டுவினமாம். இப்படி இறுக்கிக்கட்டின தென்னோலை சரியான பாரமெண்டுதான் நினைக்கிறேன். எத்தனை தென்னோலை சேர்த்துக்கட்டுவினம் எண்டு அப்பாவுக்கு சரியாத்தெரியேல்லை.

இப்படி இறுக்கிக்கட்டின தென்னோலையை ஒரு ஆள் பிடிச்சண்டு இடுப்பில பறியோட நல்லா இருட்டு வந்தபிறகு ஏறக்குறைய எட்டுமணியப்பிடித்தான் கடலுக்குள்ள இறங்குவினமாம். இன்னொரு கையில கரப்பு எண்டு சொல்லுற சாமான். அப்பா சொல்லுறதைப்பார்க்கேக்கை. அது, நாம் கோழிகளைப்போட்டு பிடிச்சு அடைச்சுவப்பமே, அதுபோல இருக்கும் எண்டு நினைக்கிறன். ஆனா, கடலில மீன்களை பிடிச்சு வைக்கிறதுக்கு. இதோட, இடுப்பில கத்தியும்.

'ஒன் மேன் ஆர்மி'போல இத்தனை சாமான்களையும் ஒரு ஆள்தான் தூக்கியண்டு கடலில இறங்கோணும். அந்த நல்லாக்கட்டின தென்னோலை இருக்கல்லா, அதின்ற நுனியில நெருப்பு பத்தவச்சிருவினமாம். நெருப்பு மெலிசாத்தானாம் எரியுமாம். முழங்காலழவு தண்ணில போய் நிண்டுவிருவினமாம். இரவில இந்த நெருப்பு வெளிச்சத்துக்கு மீன்கள் எல்லாம் வருமாம். வர்ர மீன்களைப்பிடிக்கத்தான், கரப்பு. இல்லாட்டி கைல இருக்கிற கத்தியால அடிப்பினமாம். பிடிச்சமீன்களைப்போடத்தான் இடுப்பில் பின்புறம் கட்டின பறி.

மீன்

மிகவும் மெதுவாக எரியிற சூள், கட்டுப்போட்டிருக்கிற இடத்துக்கு வந்தோட நூந்துபோகுமாம். அந்தக்கட்டை கத்தியால வெட்டிவிட்டபிறகு திருப்பி எரியவிடவேணுமாம். மொத்தமாக அந்த சூள் எரிஞ்சுமுடிக்க ஒரு ஒண்டரை மணித்தியாலம் எடுக்குமாம்.

இப்படித்தான் ஒரு நாள் ஒரு மீனவன் சூள் பிடிச்சண்டு இருக்கேக்க (ஓ, இங்க வந்து சூள் எண்டு சொல்லுறனெல்லே. இப்பிடித்தான் அப்பாவும் சொன்னவர்.) கரையில ஒரு ஆள் ஓடுறதைப்பார்த்தவனாம். அந்தக்காலத்தில (நூறுவருசம் இருக்குமெண்டு அப்பா சொன்னேர்) சனம், மின்சாரம் இல்லாத நேரத்தில இரவில புழங்கிறது இல்லைத்தானே. ஆனபடியா, மீன்பிடிகாரனும் இப்படி ஒரு ஆள் ஓடுறதைப்பார்த்தவனாம். அவனுக்கு அடுத்தநாள்தான் தெரிஞ்சது, ஊரில ஒரு கொலை நடந்திற்றுது எண்டு. கொலைகாரனும் பிடிபட்டுட்டான். இந்த மீன்பிடிகாரன், தான் ஒரு ஆளைக்கண்டதா சொன்னபடியா, நீதவான் இவனையும் கூப்பிட்டனுப்பினேர்.

நீதவான், இந்த மீன்பிடிகாரன், ஓடின ஆளைப்பார்க்கேக்க எத்தனை மணி இருக்குமெண்டு கேட்டேராம். என்னைய்யா ஒரு, ஒரு சூள் ஒண்டரைச்சூள் இருக்குமய்யா எண்டானாம் அந்த மீன்பிடிகாரன். இப்படித்தான் மீன்பிடிகாரர் தங்களுக்குள்ள நேரத்தைப்பற்றிக்கதைச்சிருப்பினம் எண்டு சொன்னேர் அப்பா.

Comments on "நேரமோ நேரம் - 4"

 

post a comment