Wednesday, October 01, 2003

பிறந்த நாள்... இன்று பிறந்தநாள்


இந்தியாதான் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான அளவு திரைப்படங்கள் தயாரிக்கின்றன என்று படித்திருக்கிறேன். அதனால்தானோ என்னமோ இலங்கையில் அவ்வளவு அதிகமாக தமிழ்திரைப்படங்கள் தயாரிக்கப்படவில்லை. அத்துடன் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களும் அவ்வளவு வெற்றி பெறவில்லை என்று நினைக்கிறேன். திறமைசாலிகள் இருந்தாலும் அவர்களால் இலங்கையில் அவ்வளவு சோபிக்கமுடியாமல் இந்தியா வந்துவிட்டார்களோ என்றும் எண்ணத்தோன்றுகிறது, பாலுமகேந்திரா, ராதிகா மாதிரி.


ஆனால் எங்கள் ஊரில் திரைப்படங்கள் பார்க்கமாட்டோம் என்று தவறாக நினைத்து விடாதீர்கள். தமிழ்நாட்டில் மக்கள் வாழ்வில் சினிமா எவ்வளவு முக்கியத்துவம் பெற்றதோ அதே மாதிரி எங்கள் ஊரிலும். ஒரே ஒரு வித்தியாசம், பொதுவாக எல்லோருடைய ஆஸ்தான கதாநாயகன் சிவாஜிதான். சிவாஜியை விட வேறு யாரும் இல்லை. என்னுடைய அம்மம்மாவே, 1982-85 எங்கள் வீட்டில் தொலைக்காட்சி வந்தபிறகு, ஒவ்வொரு புதனன்றும் போடப்படும் பழைய சிவாஜி படங்களைப்பார்ப்பத்தற்கு சரியாக இரவு 9.30 மணிக்கு " 'சிவாசி' வரப்போறேர்....... கெதியா சாப்பிடுங்க" என்று எல்லோரையும் விரட்டுவார். அன்று எங்கள் கூடம் ஜே.... ஜே... என்று இருக்கும். எங்காயாவது ஒரு சிலருக்குத்தான் எம்.ஜி.ஆர் போன்ற மற்ற நடிகர்களைப்பிடித்து இருந்தது. அவர்களை ஒரு கைவிரலில் எண்ணிவிடலாம் போன்ற எண்ணிக்கைதான். எனக்கும் கூட சென்னை வந்த பிறகுதான் கமல், ரஜனி என்றெல்லாம் நடிகர்கள் இருக்கிறார்கள் என்று தெளிவாகவும், புதிய படங்கள் பார்ப்பதற்கான ஆர்வமும் வந்தது. அதுவரை எல்லாருக்கும் நடிகன் என்றால் அது சிவாஜி கணேசன் தான். சிறு வயது பையன்களில் இருந்து விடலைப்பசங்க வரை சிவாஜி பட வசனம் பேசிக்கொண்டு திரிவதைப்பார்த்து இருக்கிறேன்.எங்களுக்குத்தான் சிவாஜி பிடிக்கும் என்று நினைத்து கொண்டிருந்த எனக்கு, சில வருடங்கள் சென்ற பிறகுதான் என்னுடைய தந்தையும் பெரிய ரசிகர் என்று அவர் மூச்சு விடாமல் பராசக்தி மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் பட வசனங்கள் சொன்னபோதுதான் தெரியும். அவரும் என்னைப்போலவே 6ம் வகுப்புக்கு யாழ்ப்பாணம் போய் விடுதியில் தங்கிப்படித்து வந்தார். இரண்டு வருடங்கள் கழித்து என்னுடைய சித்தப்பாவும் அவரைத்தொடர்ந்து இருக்கிறார். முன்பெல்லாம் தோணியில் போய்தான் தீவுகளுக்கு இடையில் செல்லவேண்டும் என்று சொன்னார். அத்தோடு, இப்போது இருப்பது போல சூட்கேஸ் எல்லாம் இல்லை, ட்ரங்கு பெட்டிதான் என்று சொன்னார். தாத்தா 4-5 சதம் தந்து விடுவாராம் வழிச்செலவுக்கு. இவர்கள் பள்ளி தொடங்குவதற்கு முதல் நாளே சென்று விடுவார்கள், அதுவும் வேளையுடன் புறப்பட்டு விடுவார்களாம். யாழ்ப்பாணத்தை அடைந்ததும் இவர்களுக்கு தெரிந்த, உறவினரின் கடையில் பெட்டிகளை வைத்து விட்டு, கூட சேர்ந்திருக்கும் நண்பர் குழாமுடன் மாட்னி ஷோ பார்க்கப்போவார்களாம். ஒரு படம் முடிந்ததும் சித்தப்பா மற்றும் அவரின் வயதொத்த நண்பர்களை கடைக்குப்போய் பெட்டிகளை எடுத்துக்கொண்டு விடுதிக்கு போகுமாறு சொல்லி அனுப்பி விடுவார்களாம், அப்பாவும் அவரின் நண்பர்களும். பிறகு இன்னுமொரு படம் பார்த்து விட்டு இரவில் பள்ளிக்கூடத்திற்கு போய் சுவர் ஏறிக்குதித்து உள்ளே போவார்களாம். அடுத்த சில நாட்கள் தாங்கள் பார்த்த படங்களை அலசி ஆராய்ந்து வசனங்களை ஒப்பித்துக்கொண்டு இருப்பார்களாம்.

அப்பா, சித்தப்பா அவர்களின் நண்பர்கள் பார்ப்பது எல்லாம் சிவாஜி படம்தான்.சென்னையில் ஒரு முறை பராசக்தி படம் திரையிட்ட போது என்னுடைய தங்கை சிவாஜியின் வசனங்களை அற்புதமான ஏற்ற இறக்கத்துடன் சொல்லிக்கொண்டிருந்தாள். அவளுக்குத்தெரியாமல் அப்பா அவளைக்கவனித்து கொண்டிருந்ததை நான் பார்த்து விட்டேன். தன்னுடைய பெண்ணும் தன்னைப்போலவே நல்ல ரசனையுடன் இருக்கிறாள் என்ற பெருமிதத்தை என்னால் பார்க்க முடிந்தது!


என்னடா இவளுக்கு திடீரென்று என்ன ஆயிற்று என்று கேட்கிறீர்களா? இரண்டு நாட்களுக்கு முதல் நமது பிரசன்னாவுடன் பேசிக்கொண்டு இருந்தபோது சிவாஜி பற்றிய கதை வந்தது. அப்போது அவர் சொன்னார், தான் ஒரு வாரமும் ஒன்று அல்லது இரண்டு சிவாஜி படங்கள் பார்ப்பதாக, அத்தோடு அதிசயிக்கத்தக்க இன்னொரு விஷயமும் சொன்னார். பிரசன்னாவின் தாயார் சிவாஜி நடித்த மொத்த 283 படங்களில் 271 படங்களைப்பார்த்து விட்டதாக சொன்னார். இவரும் சளைத்தவர் இல்லை சுமார் 193 படங்கள் பார்த்திருப்பதாக சொன்னார்.(Written on: 11/11/2002)


Extra Reading 1
Extra Reading 2
Extra Reading 3
Extra Reading 4
Extra Reading 5
Extra Reading 6

Comments on "பிறந்த நாள்... இன்று பிறந்தநாள் "

 

post a comment