Monday, September 29, 2003

புறநானூறு என்னும் புதிர் - சுஜாதா


கட்டணம் கட்டி மட்டுமே படிக்கமுடிகிற அம்பலம் இதழில் இந்த வாரம் சுஜாதா அவர்கள் எழுதிய கட்டுரையை பகிர்ந்துகொள்ள வேண்டும். இதனால் காப்பி ரைட் பிரச்சினைகள் வரலாம் என்று உள்ளுணர்வு சொன்னாலும், பகிர்ந்து கொள்ளாமல் இருக்கமுடியவில்லை.

அன்புடன்,
மதி

அம்பலம் - ஓரிரு எண்ணங்களில் எழுத்தாளர் சுஜாதா எழுதியது


புறநானூறு முதல் இருநூறு பாடல்களை எளிமைப்படுத்தி முன்னுரையுடன் கொடுத்திருந்ததும், உயிர்மை பதிப்பகம் பிரசுரித்ததும் உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்போது பிற்பாதியான இருநூறு பாடல்களின் முடிவுவரை வந்துவிட்டேன். இப்பாதியில் குறிப்பிடத்தக்க பாடல்கள் இருந்தாலும், தனிப்பாட்டு 310ம் பாடலைக் கொஞ்சம் தனிப்படுத்திச் சொல்ல விரும்புகிறேன். இதைப் பற்றி ஏ.கே.ராமானுஜன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். 1983ல் யாழ்ப்பாணத்தில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் பேசியபோது, இந்தப் பாடலை இயல்பாக மேற்கோள் காட்டியபோது பாதியில் கூட்டமே மௌனமாக சற்று உறைந்து போனதாம். காரணம்? பாடலைப் பாருங்கள்.

பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்,
செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சி,
உயவொடு வருந்தும் மன்னே! இனியே
புகர் நிறங் கொண்ட களிறட்டு ஆனான்,
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே!
5

உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு
மான்உளை அன்ன குடுமித்
தோல் மிசைக் கிடந்த புல்அண லோனே!

* * *



பால் உண்ணப் பிடிவாதம் பிடித்தபோது
இவன் தாய் கோபித்தவளைப்போல கோலை உயர்த்த
பயந்து சாப்பிட்டான்.
போரில் இப்போது யானைகளைக் கொன்¢றவன்
மார்பில் அம்பு தைத்திருப்பதைக் காட்ட
கவனிக்கவில்லை புண் என்று நினைத்தேன் என்றான்
குதிரையின் பிடரி போன்ற குடுமியும்
இளம்தாடியும் கொண்டவன்

புறநானூற்று இளைஞனுக்கும் - ஈழப்போராளிக்கும் இருக்கும் இத்தனை ஒற்றுமைதான் ராமானுஜனை பிரமிக்கவைத்தது. அந்தக் கூட்டத்தினரை திகைக்கவைத்தது. இந்தப் பாட்டு எந்தச் சூழ்நிலையில் எதற்காக எழுதப்பட்டது? இது உலக வழக்கா போன்ற பல கேள்விகள் எழுந்தாலும் இந்த அளவுக்கு இன்றைய யதார்த்தத்திற்கு அருகில் இருப்பது வியப்பே.

மான் உளை என்பதற்கு குதிரையின் பிடரி மயிர் என்றுதான் அர்த்தம். மானுக்கு பிடரி கிடையாது. சங்க காலத்தில் மா என்றால் கதிரை மான் என்றாலும் சிலசமயம் குதிரை. புறநானூறின் பிற்பகுதிப் பாடல்களில் மகட்பாற் காஞ்சி என்கிறவகையில் பல பாடல்கள் உள்ளன. மகளைக் கட்டிக்கொடுக்க தகப்பனோ, அண்ணன்மார்களோ மறுப்பதால் வரும் பிரச்னைகளைப் பற்றி ஊரார் கவலைப்படுவது. மேலும் சில பிரமிக்கத்தக்க உவமைகள் உள்ளன.

பாம்பு சட்டையை உரிப்பதுபோல் என் வறுமை நீங்கட்டும் என்கிறார் ஓர் ஏழைப் புலவர். வேங்கடம் இரண்டு பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளி venus கிரகம் பாதை மாறினால் நாட்டுக்குத் தீங்கு வரும் என்கிற நம்பிக்கை குறிப்பிடப்படுகிறது. மறைமுகமாக அதை நாங்கள் நம்பவில்லை என்று புலவர் சொல்லாமல் சொல்கிறார். (வெள்ளி எப்படிப் போனால் என்ன, எங்களுக்கு பரிசு கிடைத்துவிடும்!)

புறநானூறின் வற்றாத ஆச்சரியம் பிற்பாதியிலும் தொடர்கிறது. ஆனால் பல பாடல்கள் முழுமையாக இல்லை. பாட பேதங்களும் உள்ளன. விரைவில் நானூறு பாடல்களையும் ஒரு புத்தகமாக 'உயிர்மை' பதிப்பிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். முதல் இருநூறு விற்றுத் தீர்ந்தது மற்றொரு வியப்பு.

- சுஜாதா

Comments on "புறநானூறு என்னும் புதிர் - சுஜாதா"

 

post a comment