Tuesday, September 23, 2003

மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி, ஆனால்....


நம்மில் பலர் தினமும் காலை, மாலை, பகல் வேளைகளில் இதைச்செய்கிறோம். ஆனால், இதைப்பற்றி உட்கார்ந்து நன்றாக யோசனை செய்திருக்கிறோமா? என்று என்னைக்கேட்டால் தெரியாது என்றுதான்சொல்லுவேன்.

அப்படி என்ன செய்து, அதைப்பற்றி பெரிதாக யோசிக்காமல் இருக்கிறோம் என்று நீங்கள் கேட்கலாம். பொறுமை. பொறுமை. இன்றைக்கு இதைப்பற்றித்தானே பேச வந்திருக்கிறேன்.

நம் நகர வீதிகளிலும் நடைபாதைகளிலும் நாம் செலவழிக்கும் நேரத்தைத்தான் சொன்னேன். அதுவும் நாம் செலவழிக்கும் விதத்தைப்பற்றி கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.

வாகனங்களில், ஒரு காலத்தில் வீதிகளாய் இருந்து இப்போது கட்டடவேலைகள் நடக்கும் இடமாகிப்போன சாலைகளை ஊர்ந்து ஊர்ந்து கடக்கிறோம். அப்படி ஊரும்போதே சுற்றி இருக்கும் வாகனங்களில் எது எப்போது தன் போக்கிற்கு நகரும் என்றும் ஓரக்கண்ணால் பார்த்துக்கொள்கிறோம். இது தவிர குறுக்கும் மறுக்குமாய் ஓடும் சைக்கிள்களையும்ம், 'சித்தம் போக்கு சிவன் போக்கு' என்று சாலையை நினைத்த நேரத்தில் கடக்கும் பாதசாரிகளையும் சமாளித்தாக வேண்டும்.

இது மட்டுமா? ஊரில் திரும்பிய இடத்தில் எல்லாம் இருக்கும் பாலங்களில் வாகனங்கள் பிதுங்கி நிற்கும்போது, நான் நுரையீரலை கொள்ளும்மட்டும் நிரப்பி விட்டு, காரின் ரேடியோ/டேப்பின் சத்தத்தையும் கூட்டுகிறோம். பக்கவாத்தியமாக ஸ்டியரிங் வீலில் தாளம் வேறு. இந்த பாட்டுச்சத்தத்தாலும் தாள ஒலியிலும் மலைபோல் குவிந்திருக்கும் முடிக்கவேண்டிய வேலைகளை மறக்கப்பார்க்கிறோம். ம்ம்ம்... முடிகிற காரியமா?

சரி வாகனங்களில் சென்றால்தான் பிரச்சினை, பொடிநடையாகப்போய் வேலைகளை முடிக்கலாம் என்றால் முடிகிறதா? வரிக்குதிரைகள் படுத்திருக்கும் இடங்களில் கும்பல் சேருவதற்கு காத்திருந்து, எதிர்பார்த்த அளவு கூட்டம் சேராவிடில் சாலையைக்கடக்கும் விளக்கு ஒளிர்ந்தாலும் உயிருக்குப்பயந்து சாலையைக்கடக்காமல் இருக்கிறோம். ஏனென்று நான் சொல்லாமலே உங்களுக்குப்புரிந்திருக்கும். காலையில் விழிக்கும்போதே, இன்று இத்தனைபேரை துவம்சம் செய்வது என்று முடிவெடுத்தமாதிரியல்லவா வாகன ஓட்டிகள் ஓட்டுகிறார்கள்.

இதற்கிடையில், நாம் சாலையில் கால்வைக்க இஷ்டப்படுகிறோமோ இல்லையோ, நடந்தாக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கும் சாலைப்பணியாளர்கள். என்னமோ அவங்கப்பன் கட்டின நடைபாதை மாதிரி பகல்வேளைகளில்தான் சாலையிலும் நடைபாதையிலும் ரிப்பேர் செய்யும் பணியாளர்கள், தண்ணீர் பைப் சரி செய்பவர்கள் என்று எத்தனைபேர்.என்னடா ஒரே புலம்பல் புராணமாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? உங்களில் பலருக்கும் மேற்சொன்ன விஷயங்கள் அத்துபடியாக இருக்கலாம். உங்களில் சில அட நம்ம சிங்கார சென்னை என்று நினைக்கலாம்.

நண்பர்களே அப்படி நினைத்தால், உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். இது சென்னையை பற்றிய செய்திக்கட்டுரை அல்ல.இங்கு மான்ரியலில் நேற்று நகரின் மத்தியபகுதியில் குறிப்பிட்ட பகுதியில் காலை பத்து மணியில் இருந்து மாலை மூன்று மணிவரை வாகனங்கள் ஓட்டக்கூடாது என்று சட்டம். (அது என்ன நேரக்கணக்கோ தெரியலை. அலுவலகம் வர்ரவங்க எல்லாம் பத்து மணிக்கா வருவாங்க. எல்லாம் சும்மா பம்மாத்துன்னு நான் மட்டும் சொல்லலை. நிறையப்பேர் சொல்லுறாங்க.) வாகன நெரிசலில் அவதிப்படும் நகரங்கள் வரிசையில் சேர்ந்து வெகு விரைவாக முன்னணிக்கு முந்திக்கொண்டிருக்கும் சிறிய தீவு மான்ரியல். அக்கம்பக்கம் சுற்றி இருக்கும் இடங்களில் இருந்து காலையில் இங்கு வந்து விட்டு மாலையில் வீட்டை நோக்கி ஊரும் பறவைகள் இங்கு அதிகம். அதுவும் தீவு என்றபடியால், காலை, மாலை வேளைகளில் இங்கிருக்கும் பாலங்களில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பது நிதமும் நடக்கும் விஷயம். எனவேதான் பரிசோதனை அடிப்படையில் முதலாவது கார்-·பிரீ டேயை மான்ரியல் வெள்ளோட்டம் விட்டது. இது விஷயமாக எட்டுநாள் விவாதத்தை இங்கிருக்கும் ஆங்கில தினசரி - Gazette ஏற்பாடு செய்திருந்தது. முதல் நாளன்று முதல்பக்கத்தில் வந்த செய்தியில் தமிழாக்கத்தைத்தான் உங்களுக்கு மேலே தந்திருக்கிறேன்.

Comments on "மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி, ஆனால்...."

 

post a comment