Sunday, September 07, 2003

கணினியில் தமிழ் - புது விஷயங்கள்



இந்த வாரம் கொஞ்சம் கணினி பற்றியும் அதில் தமிழ் பயன்படுத்துவது பற்றியும் பேச ஆசை. முதலில் மரத்தடி நண்பர் கே.வி.ராஜா 'தமிழா' உலாவிக்கு கொடுத்திருக்கும் அறிமுகத்தை படியுங்க. இன்னும் அதிக விபரங்களும் விஷயங்களும் நாளைக்கு அதற்கு அடுத்த நாட்களிலும் பகிர்ந்து கொள்கிறேன்.

***************************************

'தமிழா' அறிமுகம்


டன் டன் டன் டக்கா டன் டன் டன்

நாட்டுக்கு சேதி சொல்ல நாகரீக கோமாளி வந்தேனைய்யா.....

டன் டன் டன் டக்கா டன் டன் டன்

மக்கள் 1: வாய்யா கோமாளி, என்ன காலங்காத்தால தாளம் தப்பட்டையுமா கெளம்பிட்ட, எதுனா சேதி இருக்கா?

கோமாளி: டகர டகர டன் டகர டகர டன்.... சேதி இல்லாம கோமாளி வருவானுங்களா ஐயாமாரே!!!! சேதி இருக்கு நல்ல சேதிஇருக்கு, இந்த உலகத்துக்கே ஒரு நல்ல சேதி இருக்கு. நம்ம தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல சேதி இருக்கு.

மக்கள் 2: ஆகா, அது என்னப்பா தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல சேதி?

கோமாளி: தமிழ்ல ஒரு நல்ல உலாவி (Browser) இல்லையேன்னு கவலைப்பட்ட பெரியவங்களுக்கும், ஆங்கிலம் தெரியாதே நான் எப்படி இணையத்தைப் பத்தி தெரிஞ்சுக்க முடியும்ன்னுவருத்தப்பட்ட தமிழ் மக்களுக்கும் நன்மை செய்ய.... பல நன்மை செய்ய.... இலவசமா ஒரு உலாவி வருது... ஐயா இலவசமா ஒரு உலாவி வருது.

மக்கள் 1: நல்ல சேதியா தான் இருக்கு. ஆமா அது என்ன உலாவிப்பா, அதோட பேரு என்ன?

கோமாளி: தமிழுக்கு பெருமைச் சேர்க்க, நம்ம தமிழனுக்குப் பெருமைச் சேர்க்க"தமிழா"ன்னு பேரோட வருதைய்யா....

மக்கள் 3: ஏனப்பா, இது முன்னாடி வந்த உலாவி தானே?

கோமாளி: வந்த உலாவி தானைய்யா, இது வந்த உலாவி தானைய்யா. ஆனா....... பல முன்னேற்றங்களோட வருகுதைய்யா இந்த புது உலாவி.

மக்கள் 4: கோமாளி, அது எப்படிப்பா எலவசமா கெடைக்கும்?

கோமாளி: நெட்ஸ்கேப் ஏஓஎல்ன்னு ஒரு பெரிய நிறுவனம் "மோஸில்லா" உலாவியை இலவசமா கொடுக்கிறாங்க. அதை தமிழ்படுத்தி தானைய்யா "தமிழா" வந்துச்சு. உங்களுக்குத் தெரியுமா??? "மோஸில்லா"வை தான் பிசி வோர்ல்டுவலைத்தளம் இரண்டாயிரத்து மூன்றாம் வருசத்து சிறந்த உலாவியா சொல்லி இருக்காங்க. அதோட தமிழ்பதிப்பு தான் "தமிழா".

மக்கள் 2: இதை எதாவது ஒரு தமிழாள் நிறுவனம் தமிழாக்கம் செய்துச்சா கோமாளி?

கோமாளி: இல்லிங்கண்ணே, இது வேற மாதிரி. உலகத்துல ஒவ்வொரு மூலைல இருக்கிற பத்து பதினைந்து கணினி பொறியாளர்கள் ஒண்ணா சேர்ந்து இந்த உலாவி செய்துருக்காங்க.

மக்கள் 5: அட அப்போ இது உலகத் தமிழ் மக்களால உருவாக்கப்பட்ட தமிழ் உலாவின்னு சொல்லு!!!!!!!

கோமாளி: ஆமாங்கைய்யா ஆமாங்கைய்யா..... டனா டண்டனக்கா டன் டனா டண்டனக்கா டன்....

மக்கள் 6: கோமாளி, எம்புள்ள அமேரிக்காவுல இருக்கான், எம்பொண்ணு மலேசியாவுல கட்டிக்குடுத்துருக்கு. இவங்களுக்கெல்லாம் நா தமிழ்ல கடுதாசி எழுத முடியுமா? என்னமோ இணையம் வழியா அனுப்பினா அடுத்த நொடியே அங்கே போயி கடுதாசி சேர்ந்துடுமாம்ல்ல. தமிழ்ல கடுதாசி அனுப்ப முடிஞ்சா நா நெதமும் ஒரு கடுதாசி எம்புள்ளைங்களுக்கு எழுதுவேனே....

கோமாளி: இருக்குதைய்யா இருக்கு. முழுக்க முழுக்க தமிழ்லேயே இருக்கு. எல்லோருக்கும் புரியிறமாதிரி தமிழிலேயே இருக்கு. நீங்களும் உங்க புள்ளைங்களுக்கு தமிழிலேயே எழுதலாம், உங்களுக்கு வர்ர கடுதாசிங்களையும் படிக்கலாம். எல்லா வசதியும் இருக்கு.

மக்கள் 4: ஏம்பா, இந்த மாதிரி கடுதாசிங்களோட ஏதோ கெட்ட கெட்ட சமாச்சாரங்களையும் நமக்கு முன்ன பின்ன தெரியாத ஆளுங்கல்லாம் அனுப்புவாங்களாமே, இத தடுக்க "தமிழா"விலே எதுனா வழி இருக்கா??

கோமாளி: இருக்கு சாமி இருக்கு. நல்லதுகெட்டது நாலும் தெரிஞ்சு நல்லதை அனுமதிச்சு கெட்டதைத் தடுக்கவும் இதுல வழி இருக்கு.

மக்கள் 7: கோமாளி, எங்க பக்கத்தூட்டு கோவாலு மவன் ஏதோ வலைப்பக்கம் செய்துக்கிட்டு வந்து எங்கக்கிட்டல்லாம் காட்டுறான். நமக்கும்தமிழ்ல அது மாதிரி செய்ற வசதி இருந்தா நல்லா இருக்குமே.

கோமாளி: நல்ல விஷயம் கேட்டிங்கைய்யா ரொம்ப நல்ல விஷயம் கேட்டிங்க. நம்ம "தமிழா"விலே தமிழ்ல வலைப்பக்கம் செய்யிற வசதியெல்லாம் செய்துக் கொடுத்திருக்காங்க, நீங்களே எளிமையா உங்களுக்கு வலைப்பக்கங்கள் எல்லாம் உண்டாக்கிக்கலாம்.

மக்கள் 8: எல்லாம் சரி கோமாளி. நா இது வர இணையத்துப் பக்கம் தலைய கூட வச்சுப் படுக்காத ஆளு. இணையத்துல எதுனா தமிழ் வலைப்பக்கமெல்லாம் இருக்குமான்னு எப்படி கண்டுபிடிக்க?

கோமாளி: உங்களுக்கும் சரி, தமிழ் வலைப்பக்கங்கள் இருக்கிற இடம் தெரிஞ்சவங்களுக்கும் சரி, எல்லோடும் எளிமையா தமிழ் வலைப்பக்கங்கள்ல உலாவ வசதியா நல்ல தமிழ் வலைப்பக்கங்களை "தமிழா" உங்களுக்காக அடையாளக்குறிகளோட தனக்குள்ள வச்சிருக்கு. எங்கே போகணும்ன்னு பார்த்து ஒரு சொடுக்குச் சொடுக்கினா போதும், நீங்க போக வேண்டிய இடத்துக்குக் கொண்டுபோய் சேர்த்துடும்.

மக்கள் 1,2,3,4,5,6,7,8: கோமாளி, உண்மையிலேயே ஒரு பெரிய நல்ல சேதி தான் சொல்லி இருக்க. கேக்கவே சந்தோஷமா இருக்கு. இந்த உலாவி எங்கே கிடைக்கும்? சீக்கிரம் சொல்லு... வாயால கேட்டு சந்தோஷப்பட்ட உலாவியை, பயன்படுத்தி சந்தோஷமடையிறோம்.

கோமாளி: இதை நீங்க கேக்காமலேயே சொல்லிடுவேனே!!! நான் சொல்ற இடத்துக்குப் போங்க அங்கேதான் "தமிழா" கிடைக்குது.

சுட்டி: http://thamizha.com/downloads/mozilla-win32-1.4-taMY-installer.exe

[இங்கேயும் உள்ளது: http://ftp.mozilla.org/pub/mozilla/l10n/lang/moz1.4/mozilla-win32-1.4-taMY-installer.exe]

இணையத்திலே இப்போ சொல்லி இருக்கிற இடத்துக்குப் போனா "தமிழா" கிடைக்கும், எல்லோரும் இலவசமா பயன்பெறுங்க. அப்படியே இந்தஉலாவி கொண்டு வர முயற்சி செய்த எல்லா அன்பு நெஞ்சங்களுக்கும் உங்களோட நன்றிகளையும் சொல்லிக்கோங்க, அவங்க இன்னும் நெறைய இப்படி புதுசு புதுசா செய்ய அவங்களை வாழ்த்துங்க. உங்களோட சேர்ந்து இந்த கோமாளியும் வாழ்த்துறேன். டன் டன் டன் டகர டன் டன் டன் டகர டன் டன் டன்!!!!!!!!!!!!!!

==========================
அறிவிப்பு ஆக்கம்: கே.வி.ராஜா
==========================

கே.வி ராஜாவுக்கு நன்றி !!!
-முகுந்த்
-தமிழா! உருவாக்க குழு சார்பாக.



Comments on "கணினியில் தமிழ் - புது விஷயங்கள்"

 

post a comment