Tuesday, August 19, 2003

கனகசபாபதி தரிசனம்


எங்கள் குடும்பத்தவர்களும் உறவினர்களும் சிதம்பரத்தில் இருக்கும் இறைவன் பெயர்தான் அதிகம் வைப்பார்கள். தில்லையம்பலம், தில்லைநாதன் என்ற மாமாக்களும் சித்தப்பாக்களும் அதிகம். அதிலும் எனக்கு தாத்தா முறை வரக்கூடிய உறவினர் தன்னுடைய ஐந்து மகன்களுக்கு தில்லையம்பலம், தில்லைநாதன், நடனசபாபதி, நடேசுவரன், நடனசிகாமணி என்றும் ஒரு பெண்ணிற்கு நடேஸ்வரி என்றும் பெயர் வைத்தார். ஏனோ தெரியாது எங்கள் ஊர்க்காரர்களுக்கு, சிதம்பரம் என்றால் பெரும் பித்து. அந்தக்காலத்தில் தாத்தா கப்பலில் வந்து சிதம்பரம் கோயிலுக்கு வந்ததை, பிறகு எங்களுக்கு கதை கதையாக சொல்லிக்கொண்டிருந்தார்.

Natarajar

நாங்கள் இந்தியா வந்து சேர்ந்த முதல் வருடம்; அப்பா எங்களைப்பார்க்க இரண்டு தரம் வந்தார். அவர் இரண்டாம் முறை வந்தபோது ஆண்டுத்தேர்வுகள் முடித்து நாங்களும் காத்திருந்தோம். அப்போதுதான் இந்தக்கோவிலுக்கும் ஏனைய சில கோவில்களுக்கும் முதல்முறை வந்தோம். இன்றைக்கும் மனதிற்கு மிகவும் பிடித்த இந்தக்கோவிலுக்கு போன முதல் பயணம் அவ்வளவு சரியாக இல்லை. பிற்காலங்களில் வந்தது போல காரில் சொகுசு பயணம் இல்லாதது ஒரு விஷயம். :) அடுத்தது சென்னையிலிருந்து பிற்பகல் கிளம்பி இரவு சிதம்பரம் வந்து சேர்ந்தோம். இருட்டிக்கிடந்தது நகரம் - மின்தடை. தங்க ஹோட்டல் அறைகளே இல்லை. தேர்வுத்தாள் திருத்தத்திற்காக ஆசிரியர்கள் வந்திருப்பதாக அறிந்தோம். அங்கிருந்து மயிலாடுதுறை சென்றோம். ஹ¥கூம். திரும்பி சிதம்பரத்திற்கே வந்த எங்களைக்கண்டு அனுதாபப்பட்ட ஒரு ஹோட்டல்காரர் அறை தந்தார். இரவு பூரா கொசுக்கடியில் அவதிப்பட்டதனால் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து ஐந்து மணிக்கு கோவிலுக்கு சென்ற எங்களுக்கு அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. கோவில் திறக்கப்படவில்லை.

Chidambaram Kopuram

அந்த அதிகாலை வெளிச்சத்தில் அழகாக பிரமாண்டமாக தெரிந்தது கோவில். பெரிய கோபுரமும் மிகப்பெரிய அதுவரை பார்த்திராத அளவு பெரிய கோபுர வாயிலும் கதவும் எங்களை பேச்சிழக்க வைத்தது. அதற்குப்பிறகு நடந்ததுதான் எங்களை இன்னமும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த மிகப்பெரிய வாசற்கதவில் ஒரு சின்னக்கதவு இருந்தது. அது திடீரென்று திறக்கப்பட்டு உள்ளுக்குள் இருந்து ஒரு பக்கம் குடுமி இட்ட இளம் ஐயர்கள் (தீட்சிதர்கள் என்று பிற்பாடு சொல்லத்தெரிந்து கொண்டாலும் - சட்டென்று ஐயர்மார் என்றுதான் சொல்ல வருகிறது) வந்து கொண்டே இருந்தார்கள். எட்டிப்பார்ப்பதற்கும் தயக்கமாக இருந்தது. உள்ளுக்குள் இருந்து வருபவர்களில் முட்டி விடுவோமோ என்று.

வெளியில் நின்று கொண்டே அதுவரை சிதம்பரம் கோவிலைப்பற்றி படித்ததையும் தெரிந்த விஷயங்களையும் பகிர்ந்து கொண்டோம். நந்தனாரைப்பற்றியும் பேசிக்கொண்டோம். நந்தனார் கீழ்சாதிக்காரர். சிவன் மேல் பற்றுக்கொண்டவர். ஒரு முறை இவர் சிவனை தரிசிக்க சென்ற போது (வெளியிலிருந்துதான்) நந்தி நடுவில் இருந்ததால் தரிசனம் கிடைக்கவில்லையாம். அப்போது சிவன், நந்தியை நோக்கி 'சற்றே விலகி இரும்பிள்ளாய்' என்று சொன்னதாக படித்திருந்தோம். இந்த நந்தனாருக்கு சிதம்பரம் நடராஜரை தரிசிக்கவேண்டும் என்பது மிகப்பெரும் விருப்பமாக இருந்ததாம். ஆனால் அவரின் முதலாளியோ வேலை கொடுத்துக்கொண்டே இருந்தாராம். நந்தனாரும் கேட்பவர்களுக்கெல்லாம்
'நாளைக்குப்போறேன், நாளைக்குப்போறேன்' என்று சொல்லிக்கொண்டே இருந்தாராம். அதனாலேயே இவருக்கு "திருநாளைப்போவார்" என்ற
பெயரும் கிடைத்ததாம். சரி கடைசியில் என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா? நந்தனார் முதலாளியிடம் விடுமுறை கேட்க வழக்கம் போல இந்தயிந்த வேலையெல்லாம் முடித்தால் நீ போகலாம் என்று சொல்லியிருக்கிறார். இரவோடிரவாக சிவபெருமானின் பூதகணங்கள் வந்து வயல்வேலைகளை முடித்துவிட்டதாம். நந்தனாரும் சிதம்பரம் கிளம்பிவிட்டார். அவர் கிளம்பிய பிறகு சிவபெருமான் தில்லைமூவாயிரர் கனவில் வந்து, என்னுடைய பக்தன் என்னைப்பார்க்க வருகிறான் அவனை வரவேற்று அழைத்து வாருங்கள் என்று கூறினாராம். நாயன்மார்களில் ஏறக்குறைய அனைவரும் தரிசித்த தலம் இதுதான். நாங்களும் வந்திருக்கிறோம். நாமெல்லாம் இங்கு வர எத்தனை புண்ணியம் செய்திருக்கவேண்டும்
என்று அம்மா சொல்லிக்கொண்டே இருந்தார்.ஒரு வழியாக ஐயர்மார் எல்லாரும் வெளியே வந்து நாங்கள் உள்ளே சென்றோம். உள்ளே சென்றவர்கள் கொஞ்ச நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றிமுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தோம். வாழ்நாளில் நாங்கள் யாரும் அத்தனை பெரிய கோவில்களைக்கண்டது கிடையாது. வெளிவீதியின் நீள அகலத்தைக்கண்டு பிரமித்து விட்டோம் நாங்கள். கூடவே அந்த அதிகாலை வேளை தென்றல்காற்றும், வெளியில் இருந்து வந்த
பக்திப்பாடலும் மனதை கொள்ளைகொண்டது.

வெளிவீதியில் இருந்த கிணற்றில் கைகால் அலம்பிக்கொண்ட நாங்கள் ஒருவர் கையை மற்றவர் பிடித்தவாறு - தொலைந்து போகாமல் இருப்பதற்காக - கோவிலின் உள்ளே நுழைந்தோம். மெய் சிலிர்க்கும்படி இருந்தது கோவிலின் அமைப்பும் இறைவன் தரிசனமும். யாரோ ஒருவர் வழிகாட்ட நாங்கள் கோவிலின் மையப்பகுதியை அடைந்தோம். மற்றக்கோவில்கள் போல அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. உள் பிரகாரத்தில் மரத்தாலான கர்ப்பக்கிருகத்தில்தான் நடராஜரும் உமையும் இருக்கிறார்கள்.சிதம்பரம் பஞ்சபூத தலங்களில் ஒன்று. அதாவது நிலம், நீர், காற்று, தீ, வெளி ஆகிய சக்திகளுக்கு ஒவ்வொரு சிவன்கோவில் இருக்கிறது. சிதம்பரம் வெளிக்கு - Space - ஆன கோவில். கர்ப்பக்கிருகத்தில் நடராஜருக்கு வலதுபக்கத்தில் ஒரு சன்னதி இருக்கிறது. இங்குதான் இறைவன் உருவில்லாமல் தங்கத்தால் ஆன வில்வ மாலையை அணிந்து காட்சியளிப்பதாகவும் கூறுவார்கள். அர்ச்சனை முடிந்து ஐயர் அழைத்து நன்றாக பாருங்கள் என்று சொல்லி தீபாராதனை காட்டினார். "எனக்கு ஒண்டுமே தெரியேல்ல" என்று ஐயரிடமே என்னுடைய தங்கை முறையிட்டாள். அதற்குப்பிறகு சிதம்பரம் செல்லும்போதெல்லாம் நினைவிற்கு வரும் சம்பவம் இது.

தெற்கு நோக்கி இருக்கும் நடராஜருக்கு அருகிலேயே கிழக்குப்பக்கத்தை பார்த்த வண்ணம் இருக்கிறார் திருமால். அடுத்த பிரகாரத்தில் உற்சவ மூர்த்திகளும், சிவலிங்க வடிவில் சிவனும், பிள்ளையார், முருகன் மற்ற தெய்வங்களும் இருக்கிறார்கள். இங்கு இருக்கும் பிள்ளையார் மிகவும் பெரியவர். எங்கள் வீட்டில் எல்லாருக்கும் இஷ்ட தெய்வம் பிள்ளையார். ஆகவே அவருக்கு ஒரு விசேட வணக்கம் தெரிவித்தோம். கூடவே கோவி
லமைப்பை பற்றி அவ்வப்போது சிலாகித்துக்கொண்டோம். கருங்கல்லால் கட்டப்பட்ட மிக நீண்ட பிரகாரங்களை அந்தக்காலத்தில் எப்படி கட்டினார்கள். அதுவும் கொஞ்சம் கூட பிசகு இல்லாமல் என்று வியந்து கொண்டோம். இன்று வரை வியக்கிறோம்.

சிதம்பரம் கோவிலை நினைக்கும்போதெல்லாம் நினைவு வரும் இன்னொருவர் - மாணிக்க வாசகர். சைவக்குரவர் நால்வரான சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் வரிசையில் இன்னொருவர் இவர். மாணிக்க வாசகர் இயற்றிய திருவாசகம் சின்னவயதில் வெள்ளிக்கிழமைகளில் எங்கள் வீட்டிலும் பிறகு பள்ளிக்கூடத்திலும் பாடிய ஞாபகம் இருக்கிறது. அதே போல (நான் முன்பொரு நாள் எழுதிய மார்கழி அனுபவத்தில் வந்த) மார்கழி மாத அதிகாலை வேளையில் பாடப்பட்ட திருவெம்பாவை இவர் இயற்றியதுதான்.சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பல முறை வந்திருந்தாலும் இன்றைக்கும் மனதில் நிற்கும் இன்னொரு பயணம், என்னுடைய அத்தை, மாமா, மற்றும் தமிழ் பேசத்தெரியாத என்னுடைய கசின் இவர்களோடு வந்ததுதான். மற்றவர்களால் முடியவில்லை என்பதால் இம்முறை நானும் அப்பாவும் மட்டுமே வந்திருந்தோம். டீவியில் இந்தியக்கோவில்களைப் பார்த்து தன்பெற்றோரை நச்சரித்து அந்த வருட விடுமுறையை தமிழ்நாட்டு கோவில்களில்
செலவிட வந்திருந்தாள் அவள். இது வரை சென்ற கோவில் சுற்றுலாக்களில் 90%க்கும் மேலானவற்றை சிதம்பரத்தில் இருந்துதான் ஆரம்பித்திருக்கிறேன். அவ்வளவு ஏன் சிதம்பரம் வருவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பாக இருக்கும் வளைவு எனக்கு அத்துப்படி. இம்முறை நாங்கள் மாலைவேளையிலேயே சிதம்பரம் வந்து சேர்ந்தமையால் இரவு நேர பூஜையை தரிசிக்க முடிந்தது. சிவனுக்கு பல ஆடை அணி
கலன்களை அணிவித்து பல உபசாரங்கள் செய்து சிவனின் பாதுகைகளை உள்பிரகாரத்தில் இருக்கும் பள்ளியறைக்கு கொண்டு சென்றனர். என்ன நடக்கிறது என்று என்னுடைய கசினிற்கு அப்பா விளங்கப்படுத்திக்கொண்டிருந்தார். உள்பிரகாரத்தை சுற்றிக்கொண்டிருக்கும்போது ஒரு வயதானவர் என் கசினின் அருகில் வந்து மேலும் சில விளக்கங்களை அவளுக்கு புரியும் ஆங்கிலத்தில் தெளிவாக கூறிவிட்டு கையில் ஒரு நடராஜர்
படத்தையும் வீபூதியையும் கொடுத்தார். சற்றுப்பின்னே வந்து கொண்டிருந்த எங்களிடம் அவள் அவற்றைத்தந்ததும் மாமா(முன் அனுபவத்தின் காரணமாக) அவளிடம் கொஞ்சம் பணத்தைக்கொடுத்தார். அவள் அன்று முழுக்க அவளுடன் பேசியவரைத்தேடிக்கொண்டிருந்தாள்.

கடந்த முறை நானும் அம்மாவும் தங்கையும் சென்றிருந்த போதும், வெளிப்பிரகாரத்தில் ஒருவர் அற்புதமாக தன்னைமறந்து நடராஜர் போல நடனம் ஆடியவாறு நின்றிருந்தார்.

Comments on "கனகசபாபதி தரிசனம்"

 

post a comment