Wednesday, July 02, 2003

மார்கழித்திங்கள்பொதுவாகவே எனக்கு மார்கழி மாதம் மிகவும் பிடிக்கும். சென்னைக்கு வந்த பிறகு மார்கழி மாதம் எப்போது வரும் என்ற ஆர்வம் அதிகரித்தது. அதற்குக்காரணம் இசைவிழா கூடவே அண்ணாநகரில் இருக்கும் ஐயப்பன் கோயிலில் K.J.ஜேசுதாஸின் கச்சேரி. இவையெல்லாம் இப்போதும் நினைவில் வந்து போகிறது. ஆனால் இங்கே நான் பேசப்போவது புங்குடுதீவில் மார்கழி நாட்கள் கூடவே இன்னொரு கோயிலில் பொங்கல் பொங்கிய நினைவுகள்....

எனக்குத்தெரிஞ்சு எங்கட ஊரில இருக்கிற கோயில்கள்ல விஷ்ணுவுக்கோ, லட்சுமிக்கோ,அனுமாருக்கோ சன்னிதி இருக்கேல்ல. ஆனா, வீட்டில லஷ்மியைக்கும்பிட்டனாங்கள் அதே மாதிரி அனுமாரையும். ஆனால் எங்கட வீட்டு சாமியறையில விஷ்ணு படம் இருந்தமாதிரி எனக்கு நினைவில்ல. ஊரில் எங்கட வீட்டுக்குப்பின்னுக்கு கொஞ்ச தூரத்தில ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு - பெரியபுலம் பிள்ளையார் கோயில். வடக்கால ஒரு 3-4 மைலுக்கு அங்கால இன்னொரு பிள்ளையார் கோயில் இருக்கு - அரியநாயகன் புலம் பிள்ளையார் கோயில் - இந்தக்கோயில் கொடிமரம்தான் தாத்தா கொண்டு வந்தது. தெக்கால ஒரு 4 மைலுக்கு அங்கால ஒரு அம்மன் கோயில். அங்கேருந்து இன்னும் 2 மைல் தூரத்தில ஒரு முருகன் கோயிலும் கொஞ்சம் தள்ளி ஒரு சிவன் கோயிலும் இருக்கு. பிறகு எங்கட வீட்டுல இருந்து ஒரு 4-5 மைல் தூரத்துல மாரிகாலத்தில தீவாகிற இடத்தில - பேர் கூட கேரதீவு - அங்க ஒரு ஐயனார் கோயில் இருக்கு. சுத்திவர சவுக்குத்தோப்பு. எப்பயாவதுதான் திருவிழாவுக்கு ஆக்கள் போறவையாம். மாட்டை 1-2 மாசத்துக்கு மேச்சலுக்கு அவுத்து விட்ட அங்க தான் போகும் மற்றபடி அங்க ஆக்கள் இருக்கிறதில்லை எண்டு அம்மம்மா சொல்லியிருக்கிறா. அந்தக்கோயிலுக்கு பொங்கல் பொங்குறதுக்குத்தான் சனம் போறதாம். இப்படி எங்கயாவது கூட்டமா போனாத்தான் எங்கட வீட்டில மாட்டு வண்டி வைச்சிருக்கிற தாத்தாட்ட சொல்லி விட்டிருவினம். வண்டில்ல மேல கூரை இருக்காது. இதே மாட்டு வண்டிதான் எங்கட பனைத்தோப்புக்கு போய் பனையோலை, தேங்காய் எடுத்தண்டு வரேக்க பிடிக்கிறது. ஆனா, போகேக்க மட்டும்தான் வண்டில்ல போகலாம். வரேக்க 'நடராசா'தான்.
இப்படி மாட்டுவண்டில்ல படுத்துக்கிடந்தண்டு வானத்தில இருக்கிற சந்திரனோட உங்களில எத்தனைபேர் ரேஸ் ஓடியிருக்கிறியள்? கேரதீவுக்கு போயிற்று வரேக்க மட்டும்தான் எங்களுக்கு இந்த அனுபவம் கிடைக்கும்.

கேரதீவு ஐயனார் கோயில் சின்னக்கோயில்தான். மற்றக்கோயில்களில் இருக்கிறமாதிரி ஐயரையெல்லாம் நான் கண்டதில்லை. பொங்கல் பானை வைக்கேக்க ஒரு இலையானும்(ஈ தான்.) இருக்காது ஆனால் பொங்கி முடிக்கேக்க எங்க இருந்து வருவினமோ தெரியாது ஆக்கள் வந்து சேர்ந்திடுவினம். பூசாரியும் வந்திருவேர். நாங்க ஒரு 2-3 மணிக்கு வெளிக்கிட்டா வீட்ட பொங்கல் பானை இறக்குறதுக்கு ஒரு 5 மணி ஆயிரும். ஆக்களுக்கெல்லாம் புக்கையை கொடுத்திட்டு நாங்க வெளிக்கிடேக்கிள்ள இருட்டிரும். அம்மம்மா அல்லது சித்தின்ர கைய விடமாட்டன் வீடு வந்து சேரும் வரைக்கும். எனக்கு கோயிலுக்குள்ள கவனமில்லை. என்ர கவனமெல்லாம் சுத்தி இருக்கிற சவுக்குத்தோப்பிலதான். அதுவும் அப்ப எல்லாம் தமிழ்வாணனின் 'சங்கர்லால் துப்பறியும் கதைகள்' வாசிச்ச வயசு. என்ன எல்லாம் நினைச்சண்டு இருந்திருப்பனெண்டு உங்களுக்கே தெரியும். இங்க தான் நான் முதல் முதலா கலை வாறதப்பார்த்தனான். சும்மா நிண்டண்டு இருந்த ஒரு மனுசி ஒண்டு இருந்தாப்போல ஆடத்தொடங்கிற்றா. தலைமயிர் எல்லாம் கழண்டு தலையை சுழட்டி சுழட்டி ஆடத்தொடங்கினா. சில பேர் அவட கையில வேப்பிலைய கொடுத்தவை. கொஞ்ச நேரம் ஆடிட்டு அவ பூசாரி வந்து திருநூறு குடுத்தோடன சரிஞ்சு விழுந்திட்டா. சரியான வேர்வை அவவில.

இதே மாதிரி இன்னொரு நாள், பெரியநாயகன் புலம் கோயில்ல ஏதோ திருவிழாக்கு போயிற்று நானும் ஒரு பக்கத்தில நிண்டனான். திடீரெண்டு பாருங்கோ... எனக்கு பக்கத்தில் இருந்த மனுசி கலை வந்து ஆடத்தொடங்கி விட்டா. எனக்கு கையும் ஓடேல்ல காலும் ஓடேல்ல. நல்ல காலம் கொஞ்ச தூரத்தில நிண்ட சித்தி வந்து தனக்குப்பக்கதில என்னை இருத்தினவ.

எங்கட ஊரில மார்கழி மாசத்தில காலம 5 மணிக்கு தெருவில கன பேர் பாட்டுப்பாடியண்டு போறதை கேட்டுட்டுதான் என்ர அம்மம்மாட்ட காலைல யாரு பாட்டுப்பாடியண்டு போகீனம், ஏன் பாடீனம் எண்டெல்லாம் கேட்டனான். அவவும் மார்கழி மாசத்தில இப்படித்தான் சனம் பாடியண்டு போவினம். அவை பாடுறது திருவெம்பாவை எண்டும் சொன்னவ. அண்டைக்கு அவவையும் அம்மாவையும் அரிக்கத்தொடங்கினதுதான். ஒரு வருசமா அரி அரி எண்டு அரிச்ச பிறகுதான் என்னையும் போக விட்டவை. ஆனா, நானா எழும்பி நானே யாரையும் துணைக்கு கூப்பிடாம கிணத்தடில குளிச்சுட்டு போகோணும். தங்களை யாரையும் துணைக்கு கூப்பிடக்கூடாது எண்டும் சொல்லிட்டினம். எனக்கு இதுவே பெரிய விசயம். நான் இவைட்ட வீட்டில ஒண்டும் கதைக்கேல்ல. ஆனா பள்ளிக்கூடத்தில யாராவது கூட வருவினமா எண்டு பார்த்தா அதில நிறைய பிரச்சனை. சில பேருக்கு விருப்பம் இல்லை. சில பேரின்ட வீடு தூரத்தில இருந்துது. கடைசியா என்னட்ட மாட்டுப்பட்டது என்ர வீட்டுக்கு முன் வீட்டில இருக்கிற கீதாதான். எனக்கு அவ மச்சாள் முறை. அவட அம்மா வேலியடியில வந்து நிண்டு "மச்சா.........ள்" எண்டு என்ர அம்மாவை ராகம் பாடி கத்தி கூப்பிடுறது நாங்க புங்குடுதீவு போன புதுசில எங்களுக்கு சிரிப்பு. ஆனா கீதாவும் அவளின்ட மூண்டு தம்பிகளும்தான் எங்களுக்கு விளையாட்டுத்துணை.

மார்கழி பத்தி எழுதப்போறன் எண்டு நான் அப்பாட்ட சொன்னோடன அவர் தன்ர சின்ன வயசு மார்கழி அனுபவங்கள் பத்தி சொல்ல தொடங்கிட்டேர். என்ர பாட்டி என்ர அப்பாக்கு 9 வயசு இருக்கேக்கயே செத்துப்போயிற்றா. அவவை நாங்கள் அப்பம்மா எண்டுதான் கூப்பிடோணும். ஆனா கூப்பிட ஆள் இல்லை எண்டபடியா பாட்டி எண்டுதான் சொல்லுறனாங்கள். பாட்டி இறந்த பிறகு, அப்பா, மூண்டு தம்பிமார், அக்கா இவ்வளவு பேரையும் வளர்த்தது தாத்தாவின் அம்மா, மற்ற வேற சில பெத்தாச்சிமார்தான் எண்டு அப்பா சொல்லுவேர். அப்பாவுக்கே பாட்டி எண்டா எனக்கு?!

சரி, சரி, கதைக்கு வாறன். காலைல 4 மணிக்கு எழுப்பி விட்டுருவாவாம் அப்பா, சித்தப்பாமாரையெல்லாம் பெத்தாச்சி. மாமி ஹொஸ்டல்ல எண்ட படியா தப்பினா எண்டு அப்பா சொல்லுவேர். குளிர குளிர குளிச்சுட்டு எல்லாரும் பெத்தாச்சியோட பெரியநாயகன்புலம் பிள்ளையார் கோயிலுக்கு நடந்து வருவினமாம். அப்பேக்க, அரியநாயகன்புலம் பிள்ளையார் கோயில் இல்லையெண்டு அப்பா சொன்னவர். பிறகு அரியநாயகன்புலம் பிள்ளையார் கோயிலடிக்குப்பக்கத்தில தான் அப்பாவைட வீடு. நான் அங்க இருந்த காலத்தில மாதிரி இல்லாம, முந்தி எல்லா காணிகளும் வயல் வெளியாக நெல்,சாமை,வரகு, குரக்கன் தானிய வயல்களாக இருந்தது எண்டு சொன்னேர். ஆன ரோட்டும் இல்லை(ஒழுங்கான பாதை). இருட்டில 5 மணிக்கு வயல் வரப்பில விசுக் விசுக் எண்டு நடக்கிற 'பெத்தாச்சி'க்கு பின்னுக்கு தாங்க எல்லாம் எங்கனக்க பாம்பு கிடக்குதோ? எங்க மிதிக்கபோறமோ எண்டு பயந்தண்டே போனதெண்டு சொன்னவர். அங்க கோயில்ல எல்லாரும் திருவெம்பாவை பாடுவினம். திருவாசகம், தேவாரமும் பாடுவினம். ஆனா தாங்க எல்லாம் எப்படா பூசை எல்லாம் முடிச்சு நைவேத்தியம் கொடுப்பினம் எண்டு ஆவெண்டு பார்த்தண்டு நிக்கிறது எண்டு சொன்னேர் அப்பா. நைவேத்தியத்தில தாற சுண்டல் மாதிரி தான் இன்னும் எங்கயும் சாப்பிடேல்ல எண்டும் சொன்னேர். கோயில்ல இருந்து வீட்டுக்குப்போய் புத்தகத்தை தூக்கியண்டு பள்ளிக்கு வெளிக்கிட்டுருவம் எண்டு சொல்லி அப்பா தன்ர கதையை முடிச்சேர்.

இப்ப என்ர முறை. நானும் ஒரு வழியா கீதாவை என்னோட வரும்படி மூளைச்சலவை செய்திட்டனா! அதுக்குப்பிறகுதான் பிரச்சனையே. என்னண்டு காலமை எழும்புறது. வீட்டில ஒரு சனமும் உதவி செய்ய மாட்டனெண்டு சொல்லிப்போட்டுதுகள். எங்கேயோ கிடந்த அலாரம் மணிக்கூட்டை கொண்டு வந்து வச்சு 4.30 மணிக்கு சித்திய விட்டு அலாரமும் வச்சண்டு, அறைக்குள்ள படுத்தா எழும்புறது கஷ்டம் எண்டு விறாந்தையில (veranda) படுத்தனான். கீதாட்டயும் எழும்பின உடன வந்து எழுப்புறன் உடன குளிக்க எல்லா ஆயத்தமும் செஞ்சுட்டு படுக்க சொல்லி சொல்லிட்டன். நானும் கிணத்தில இருந்து தண்ணி எல்லாம் குளிக்க எடுத்து வச்சனான். காலம கெதியா எழும்போணும் எண்டு வெள்ளன படுத்தனான். காலம எழும்பி பார்த்தா நேரம் 6.30 மணி. ஓடிப்போய் பின்னுக்குப்பார்த்தா அம்மம்மா, மாட்டில பால் கறந்தண்டு இருந்தா. என்ன நடந்தது, அலாரம் அடிக்கேல்லயே எண்டு கேட்டா, தனக்கு தெரியாது அலாரம் மணிக்கூடு பத்தி எண்டு சொல்லிட்டு அவ பால் கறந்தண்டு இருந்தா. வீட்டுக்குள்ள வந்து பார்த்தா, மணிக்கூடு ஓடியண்டு தான் இருந்தது. வீட்டில இருக்குற ஆக்களுக்கு எல்லாம் என்னக்கண்டு ஒரு இளிப்பு வேற.....

அண்டைக்கு இரவு, கீதாட்ட சொல்லிட்டு, நானும் அவ சொன்னபடி செஞ்சுட்டு படுத்தன். என்ன செஞ்சனானெண்டு கேக்கிறீங்களா? ஒரு பெரிய டின்னை எடுத்து அதால அலாரம் மணிக்கூட்டை மூடச்சொன்னா கீதா. நானும் பால்மா டின்னுக்குள்ள அலாரமை வச்சனான். அலாரம் அடிச்சது, ஆனா நாந்தான் எழும்பேல்ல எண்டு எங்கட வீட்டுல இருக்கிற அம்மம்மாவின்ர புத்திர செல்வங்கள் - அதான் அம்மாவும் சித்தியும் முதல் நாள் இளிச்சண்டு சொல்லிச்சினம். எனக்கு அவய நம்பவும் முடியேல்ல, நம்பாமயும் இருக்கவும் முடியேல்ல. சரி, அடுத்த நாள் என்ன நடந்ததெண்டு நினைக்கிறீயள். 'பழய குருடி கதவ திறடி' கதைதான். அம்மம்மாட்ட என்னைக்கு அடுத்த நாளாவது அவ எழுப்பி விட வேணும் எண்டு நான் சண்டை போட்டு சொல்லிட்டன்.

அப்பாடா, கட்டக்கடசியா மூண்டாம் நாள் அம்மம்மா எழுப்பி விட்டவ. என்ன எழுப்பிற்று கீதாவையும் எழுப்பி விட்டவ. நாங்களும் 5 மணிக்கு, பாம்புக்கு பயந்து பயந்து கொஞ்சம் மல்லிகைப்பூவையும் செம்ம்பருத்தி பூவையும் பறிச்சண்டு நிண்டனாங்கள். அம்மம்மா, எங்கள அந்த ஆக்களோட சேர்த்து விட்டுட்டு நித்திரை கொள்ளப்போய் விட்டா. குளிரெண்ட அப்படி ஒரு குளிர். ஆனா, ஒரு சுவெட்டர் தந்தபடியா ஒரு மாதிரி நாங்களும் திருவெம்பாவையை ஒரு ஆள் ஒரு வரி பாட, மற்ற ஆக்கள் திருப்பி சொல்லியண்டு போனனாங்கள். திருவாசகம், தேவாரம் வேற கொஞ்ச பாட்டுகள், திருப்புகழ் எல்லாம் பாடிச்சினம். எங்களுக்கு இது முதல் தரமெண்ட படியா எல்லாத்தையும் வாய ஆவெண்டு திறந்தெண்டு பார்த்தண்டு போனனாங்கள். கோயிலுக்கு போனோடன நாங்க கொண்டந்த பூக்களை கொடுத்துட்டு, சுண்டல், வடை,பஞ்சாமிர்தம், புக்கை,(சக்கரைப்பொங்கல்) வெள்ளைப்புக்கை (வெண்பொங்கல்) எல்லாத்தையும் கவனமா பாத்தண்டு, அப்பப்ப சிவபெருமானையும் பார்த்தனாங்கள், நானும் கீதாவும். ஒரு மங்கிய விளக்கு ஒளியில் சிவன் சிலை இன்னும் ஞாபகம் இருக்கு... வீட்டுக்கு கன கம்பீரமா, சுண்டல் கொண்டு வந்தனான்..... கதை அங்க முடியேல்ல. :)

ஆனா, அடுத்த 4 நாள் எனக்கு சரியான காச்சல். நல்ல வீட்டில சாத்துப்படி (வேறென்ன....... திட்டுதான்) வாங்கினாலும் அந்த வருஷ மார்கழி மாதம் மறக்க முடியாதது.

Comments on "மார்கழித்திங்கள்"

 

post a comment