Thursday, June 26, 2003

இந்தக்கட்டுரையை முற்றிலும் இலங்கைத்தமிழ் நடையில் எழுதினால் என்ன என்று தோன்றியது. படித்து விட்டு புரிந்ததா என்று சொல்லுங்கள் நண்பர்களே!

என்ர ஊரின்ட பெயர் புங்குடுதீவு எண்டு நான் உங்களுக்கெல்லாம் முந்தியே சொல்லிட்டன். ஆனால் என்ர ஊர் தமிழ்நாட்டு தமிழ் நவீன இலக்கியத்தில் முக்கிய இடத்தில இருக்கிற பொன்னியின் செல்வனிலும் இடம் பெற்று இருக்கெண்டு உங்களில எத்தனை பேருக்குத்தெரியும். எனக்கே படிச்சு முடிச்சோடன எவ்வளவு ஆச்சரியம் தெரியுமா! ஊமைராணி இருந்த ஊரான "பூததீவுதான்" என்ர ஊர். அதப்போல மணிமேகலையில் வர்ற மணிபல்லவத்தீவுதான் என்னுடைய தீவுக்குப்பக்கத்தில இருக்கிற நயினாதீவு எண்டு நாங்க இப்ப கூப்பிடுற "நாகதீவு". இந்த நயினாதீவுல இலங்கை முழுக்க சனங்களுக்கு நல்லாத்தெரிஞ்ச நாகபூஷணி அம்மன் கோயில் இருக்கு. இந்த தீவுக்கு படகில தான் போகோணும். நானும் சின்ன வயசில ஒருக்கா போயிருக்கிறன் திருவிழாக்கு. நயினாதீவுல ஒரு புத்த விகாரையும் இருக்கு கண்டியளோ! அங்க ஒரு சிங்கள புத்தபிக்குவும் இருக்கிறேராம்! ஆக்கள் சொல்லி இருக்கினம்.

நாகபூஷணி அம்மன் கோயில் திருவிழாக்கு முந்தி எல்லா இடத்தில இருந்தும் சனம் வாறது எண்டு அம்மம்மா சொல்லுறவ. நிறைய சிங்கள ஆக்களும் வாறவையாம். யாழ்ப்பாணத்தில இருந்து ஒரு முப்பது மைல்தான் எண்டாலும் பிரயாணம் கொஞ்சம் கடினம். ஏனெண்டா யாழ்ப்பாணத்தில இருந்து புங்குடுதீவு வரைக்கும் தான் பாலம் இருக்கு. பிறகு எல்லாரும் லோஞ்சிலதான்(launch) போகோணும். நாங்களும் ஒருக்கா போனது எனக்கு ஞாபகம் இருக்கு. எனக்கு தண்ணியெண்டா அப்ப புழுத்த பயம். கனக்க சனத்த வேற அவங்கள் லோஞ்சில ஏத்திட்டாங்கள் எண்டு நினைக்கிறன். கடலில ஆட்டத்தில லோஞ்ச் கவிண்டு போயிரும் போல இருந்தது. அரவிந்தன் எங்களோட வந்த அண்ணாமாரோட லோஞ்சுக்கு மேல போய் இருந்திட்டான். நானும் அவனோட போவமெண்டு பார்த்தா அம்மா மாட்டனெண்டு சொல்லிப்போட்டா. கொஞ்ச நேரத்துக்கு பிறகு என்ர பயத்த பார்த்திட்டு அம்மம்மா அண்ணாமாரை என்னையும் மேல இழுக்கச்சொல்லி சொன்னா. ஆனா எனக்கு அந்த அண்ணாமார் என்னை மேல இழுக்கும்வரை சீவன் கையில இல்ல. எப்பிடியோ ஒரு வழியா நயினாதீவுக்குப்போய் சேர்ந்திட்டம். திரும்ப லோஞ்சில போகோணும் எண்ட நினைப்புத்தான் அண்டைக்கு முழுக்க இருந்தது!

எனக்குப்பொதுவா நிறைய சனம் ஒரு இடத்தில இருந்தாப்பிடிக்காது. அதுவும் சரியான சத்தம் போட்டுக்கொண்டு இருந்திச்சினம் எண்டால் அதைப்போல விசர் வேற ஒண்டும் இல்ல. நாகபூஷணி அம்மன் கோயில் நல்ல வடிவாத்தான் இருந்தது. பழைய கோயில் எண்டெல்லாம் சொல்ல ஏலாது. ஆனா எங்கட கோயில்களோடு பாக்கேக்க கொஞ்சம் பெரிய கோயில்தான். அம்மன் சரியான சக்தி வாய்ந்தவ எண்டு அம்மம்மா சொன்னா. நாங்க போனது ஏழாம் நாள் திருவிழாவோ எட்டாம் நாள் திருவிழாவுக்குத்தான். தேர் திருவிழாக்குத்தானாம் சனம் எல்லாப்பக்கத்திலயும் இருந்து வருமாம். நாங்க போன அண்டைக்கு அந்தளவுக்கு சனநெருக்கடி இல்லை எண்டு எல்லாரும் சந்தோஷப்பட்டிச்சினம். எனக்கு ஒரே ஒரு எண்ணம்தான் என்ற மனசில ஓடிக்கொண்டு இருந்தது. அது என்னெண்டா, "இந்த சன நெருக்கடியே தாங்கேலாமாக்கிடக்கு. இதுக்குள்ள இதை விட கூடச்சனமெண்டால் எங்க போய் ஒழியிறது!" எண்டுதான்.

நான் சின்ன வயசில சாமி கும்பிட எல்லாம் திருவிழாவுக்குப்போனதில்லை. கச்சான், அப்பளம், மணிக்கூடு, காப்பு, பலூன் எல்லாம் வாங்கித்தருவினம் எண்ட ஒரே ஒரு காரணத்துக்குதான் நாங்க சின்னாக்கள் எல்லாம் கோயிலுக்கு போறதுக்கு. பிறகு வளர, வளர நான் வீட்டில நிக்கிறன், நீங்க எல்லாரும் போயிற்று வாங்க எண்டு புங்குடுதீவில நடக்கிற திருவிழாக்களுக்கு போகாமல் இருக்க அடி போட்டா... இந்த மாதிரி சாமான் எல்லாம் வாங்கித்தாறம் எண்டுதான் கூட்டியண்டு போவினம். சில வேளையில ஏமாத்தியும் போட்டுருவினம்!

மொத்ததில என்ர மனசில நாகபூஷணி அம்மன் திருவிழாக்குபோனதில நினைவில நிக்கிறது அந்த லோஞ்சில போய் வந்ததுதான். அதுதான் என்ர கடைசிப்பயணமும் கூட கடலில். (அதற்குப்பிறகு ஹவாயில் திமிங்கிலம் பார்ப்பதற்காக கடலில் பயணம் செய்தேன் 2000ம் ஆண்டு.)

புங்குடுதீவில என்ர வீட்டுக்கு பக்கத்தில ஒரு நாலு மைல் சுத்துவட்டாரத்துல அஞ்சாறு கோயில்கள் இருக்கு. இதுல நான் புங்குடுதீவுக்கு போய் இருந்த மூண்டு வருசத்தில் அஞ்சாறு தரம் திருவிழாக்குப்போய் வந்திட்டன். முதலில் என்னமோ நல்லாத்தான் இருந்தது. பிறகு, பிறகு எல்லாரும் வரயில்லை எண்டு சொல்லத்தொடங்கினம். ஆனாலும் கட்டாயம் ஒரு நாளாவாது போய் வந்தனாங்க. எனக்கு நல்லா பிடிச்ச ஒரு திருவிழா - பெருங்காடு கந்தசாமி கோயில் திருவிழாவில பாட சீர்காழி கோவிந்தராஜனை கூட்டியண்டு வந்த அண்டைக்குத்தான். 1983 ஜூலைக்கு முதல் எண்டு நினைக்கிறன். சும்மாவே எங்கட ஊரில லெளட்ஸ்பீக்கர்ல கடவுள் பாட்டு மட்டும்தான் போடுவினம். நான் சினிமா பாட்டெல்லாம் கேக்கத்தொடங்கினது இந்தியா வந்துதான். மத்தியானம் அவர் புத்தகங்களில கையெழுத்துப்போட்டுக்கொடுத்தவர். அரவிந்தன் ஒரு மாதிரி போய் ஒண்டு வாங்கியண்டு வந்தவன். பின்னேரம்தான் அவரின்ற கச்சேரி எண்டு சொல்லிச்சினம். நாங்களும் அம்மம்மா, அம்மா, சித்தி மற்ற படி அவைட சினேகிதர்களும் பின்னேரம் சாப்பிட்டுட்டு வெளிக்கிட்டனாங்கள். சும்மா சொல்லக்கூடாது. சீர்காழி, நல்லாப்பாடினேர். இண்டைக்கும் இந்தியா போய் கோயில் எல்லாம் பாக்கப்போகேக்க சீர்காழிக்கு போகாம போனதே இல்ல. இந்தியாவில சனம் அவ்வளவு ஏன் சீர்காழி கோயிலுக்கு போறதில்லையெண்டு ஒவ்வொருக்காவும் ஏக்கமும் கோவமுமாக இருக்கும். மத்த கோயில்களில் இருக்கிற அளவு கூட்டத்த நான் சீர்காழி தோணியப்பர் கோயிலில பார்த்ததேயில்ல.

மற்ற படி திருவிழாக்கள் எல்லாம் பத்து நாள் பதினைந்து நாள் நடந்தாலும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கிறது முதல் நாள் கொடியேற்றத்திருவிழாவும், கடைசில வாற தேர்திருவிழாவும்தான். அந்த நாட்கள்ல நல்லா கவனிக்க இல்லையே எண்டு வருத்தப்படுறது கொடியேற்றத்திருவிழாவில கொடிமரத்துக்கு செய்யிற நீட்டுப்பூசைதான். அப்ப எல்லாம் எப்படா முடிப்பினம் எண்டு பார்த்துக்கொண்டு இருப்பன். அதுவும் என்ர வீட்டுக்குப்பக்கத்தில இருக்கிற பிள்ளையார் கோயிலுக்கு கொடிமரத்த என்ர தாத்தாதான் சித்தப்பா மட்டக்களப்பில G.A (கலெக்டர் மாதிரி) இருக்கேக்க கொண்டு வந்தது எண்டு எல்லாரும் சொன்னதைக்கேட்டு தாத்தா இந்தப்பெரிய மரத்த எப்படி கொண்டுவந்து சேர்த்திருப்பேர் எண்டு என்ர கற்பனைக்குதிரைக்கு வேலை கொடுத்தண்டு இருப்பன்.

இங்க ஊரில எல்லாருக்கும் என்ர அப்பாவைத்தெரியாது. அவர் சின்ன வயசிலேயே கொழும்புக்கு போயிற்றேர் எண்டதால். எங்களைப்பார்த்து யாரெண்டு கேக்கிற ஆக்களுக்கு "சொர்ணலிங்கத்தாரின்ர பேத்தி" எண்டு சொல்லச்சொல்லி எனக்கு உத்தரவு. நிறையப்பேர் "ஓ.... மூத்தவளின்ர மகளே!" எண்டு சொல்லுவினம். சிலர் "ஆறுமுகத்தாரின் பேத்தியெண்டு சொல்லு பிள்ளை" எண்டு என்ற அப்பாவின்ற அப்பாட பேரச்சொல்லுவினம்.

இந்தியாவில எப்படி எண்டு தெரியல்ல. ஆனா இலங்கையில தேர் திருவிழா அண்டைக்கு தேர் வீதியெல்லாம் சுத்தி வந்தபிறகு சாமியை அலங்காரம் செய்வினம். அலங்காரம் எல்லாம் பச்சையில இருக்கு. இதுக்கு "பச்சைசாத்துறது" எண்டு சொல்லுவினம். பச்சைசாத்தின சாமியும் உள்வீதி வெளிவீதி வலம் வருவேர். நிறைய ஆக்கள்தான் தூக்கியண்டு போவினம். பல்லக்கும் தினமும் தூக்கிற மாதிரி சின்னன் இல்லை. சரியான பாரமெண்டு பார்த்தோடன தெரியும். சாமியை ஆட்டி ஆட்டித்தான் கொண்டு போவினம். ஏன் அப்படிக்கொண்டு போகீனம் எண்டு கேக்ககூட மறந்து பாத்தண்டு இருப்பன். வீதியெல்லாம் சுத்தி பிள்ளையார் கோயிலின்ர முன்வாசலுக்கு வரேக்க பாருங்க அவரின்ர ஆட்டம் கூடும். தூக்கிற ஆக்கள் எல்லாம் கலை வந்தமாதிரி அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் ஆடுவினம். சனமெல்லாம் நல்லா இடம் விட்டுத்தான் நிக்கும். வாசல் நெருங்க நெருங்க ஆட்டமும் கூடும். அதே போல் சனங்களின் பிள்ளையாரை வேண்டும்/வாழ்த்தும் சத்தமும் கூடும். உற்சவ மூர்த்தி இருக்கிற இடம் வந்தோடனதான் ஆட்டம் மட்டுப்பட்டு பிள்ளையார் சாந்தமாவேர்.

பிறகும் கொஞ்சநேரம் பூசை நடக்கும். அதுக்குப்பிறகு திருநீறு, சந்தனம், குங்குமத்தோட பிரசாதமும் கிடைக்கும். எங்கட ஊரில எல்லாரும் திருநீற்றை மூன்று அல்லது நாலு விரலால தாம் பூசுவினம். அதே மாதிரி சந்தனமும் ஒரு விரலால பூசப்படும். குங்குமம் குன்னக்குடி மாதிரி வைக்கேல்ல எண்டாலும் கொஞ்சம் பெரிசாத்தான் இருக்கும். சந்தனம் மிஞ்சி இருந்தால் சில இளம் பெண்கள் தவிர மற்ற எல்லாரும் கன்னத்தில விரலால கோடு கிழித்து இருப்பினம். அந்த வெயிலுக்கு நல்ல இதமா இருக்கும்.

Comments on ""

 

post a comment