Thursday, August 14, 2003

பெயர்களும் குழப்பங்களும்



இப்போதுதான் பெயர்களைப்பற்றிய நிகழ்ச்சி ஒன்றைக் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.(நன்றி ரமணி) எனக்கு ஏன் இந்த பெயரை வைத்தீர்கள் என்று அப்பாவிடம் சண்டையிட்ட நாட்கள் ஞாபகம் வருகிறது. தமிழில் 'சந்திரமதி' என்று எழுதினால் ஆறு எழுத்துகள்தான் இருக்கின்றன. ஆனால் ஆங்கிலத்தில் எழுதினால் - '-------------' என்று பதின்மூன்று எழுத்துகள் இருக்கின்றன. ஏனோ தெரியவில்லை. இலங்கைத் தமிழர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதினால் இந்திய தமிழர்களை விட மிகவும் வித்தியாசமாக இருக்கும். இலங்கையில் இருந்தவரைக்கும் பள்ளிக்கூடத்தில் பெரிய பிரச்சினை வரவில்லை.

உங்கள் எல்லாருக்கும் அரிச்சந்திரன்-சந்திரமதி கதை தெரிந்திருக்கும். இலங்கையில் பள்ளிக்கூடத்தில் யாரும் எதுவும் சொன்னதில்லை. ஆனால், சில உறவினர்களால் பகிடி பண்ணப்பட்டேன். ஏறக்குறைய பத்துவயதாகும்போது என்னைக் கிண்டல் செய்யும் மாமாக்களையும் சித்தப்பாக்களையும் அப்படி சொல்லவேண்டாம் என்று சண்டைபோடத்தொடங்கினேன். அப்போதுதான் அப்பாவிடமும் புறுபுறுக்கத்தொடங்கி இருக்கவேண்டும்.

ஆனால் இந்தியா வந்து பள்ளியில் சேர்ந்தபிறகுதான் பெரும்பிரச்சினை வந்தது. பதிவேட்டில் என்னுடைய பெயரைக் கொலை செய்யும் ஆசிரியர்கள் ஒரு பக்கம். 'சாஆஆஆந்திரமதி', 'சாந்திமதி' என்று கொலை செய்த ஆசிரியர்களுடன் எனக்கு ஏனோ ஒட்டவில்லை. ஆரம்பத்தில் பொறுத்துப்பொறுத்து பார்த்து விட்டு ஓரிரு வாரங்களுக்குப்பிறகு ஆசிரியர்களை தனியாக சந்தித்து - Santhiramathy என்று எழுதப்பட்டிருந்தாலும் 'சந்திரமதி' என்றே கூப்பிடுங்கள் என்று சொல்லி இருக்கிறேன். கல்லூரியில் ஒரு டீச்சருடன் முறைத்துக்கொண்டதும் உண்டு. இப்படி வினோதமாக வைத்துக்கொண்டு எல்லாருக்கும் விளக்கி சொல்லுவதற்கு பதில் காஜெட்டில் மாற்றிவிடலாமே என்றார். ஒரு முறைப்போடு அது எனக்கு வைக்கப்பட்ட பெயர். அதை மாற்றுவதற்கு இஷ்டம் இல்லை. உங்களுக்கு பெயரை சொல்லுவதற்கு கஷ்டமாக இருந்தால் 'மதி' என்று சொல்லிவிடுங்கள் என்று சொல்லிவிட்டேன். பொதுவாக ஆசிரியர்களிடம் முறைத்துக்கொள்ளும் சாதியில்லை என்றாலும், ஏனோ இதில் மிகவும் உறுதியாக இருந்தேன்.

அதுவும் பள்ளியில் புதிதாக வந்து சேர்ந்த பாட்டனி ஆசிரியருக்கும் எனக்கும்தான் பயங்கர கொழுவல். அப்போது ஒன்பதாம் வகுப்பில் இருந்தேன். அப்போதுதான் எம்.எஸ்.ஸி படித்து முடித்து எங்களுக்கு பாடம் நடத்த வந்தார் அவர். உங்களுக்கெல்லாம் புதிதாக பாடம் நடத்த வரும் ஆசிரியர்களுக்கு இருக்கும் பயத்தையும், மாணவர்கள் அவர்களை இன்னமும் பயமுறுத்த தங்களால் இயன்றதை செய்வதும் தெரிந்திருக்கும். நீங்களும் செய்திருப்பீர்கள். :D தன்னை அறிமுகப்படுத்தி விட்டு பதிவேட்டில் பெயர்களைப்படித்து மாணவர்களுடன் ஒவ்வொருவராகப் பேசிக்கொண்டு வந்தார். என் முறையும் வந்தது. என்னுடைய பெயரை சரியாக உச்சரித்தாலும், அவர் அதற்குப்பிறகு செய்ததுதான் என்னுடைய கொதியை கிளப்பி விட்டது. 'நீ இங்கே இருக்கிறாய். அரிச்சந்திரன் எங்கே? லோகிதாசன் எங்கே?' என்று ஒரு கேள்வி கேட்டார் பாருங்க. அன்றிலிருந்து அவருடைய ஜென்ம விரோதியாகி விட்டேன். ஒரு வழியாக, தினந்தினம் நண்பர்களும், இந்த வாத்தியின் பேச்சைக் கேள்விப்பட்ட மற்ற வகுப்பில் இருப்பவர்களும் கிண்டலடிப்பது குறைந்தது.

இப்படியெல்லாம் இருந்தபோதுதான் ஒரு சுபயோகதினத்தில்தான் ஹவாய் வந்தேன். என்னுடைய வீணை டீச்சருக்கு நான் 'சந்திரா'தான். அதைப்போலவே இங்கும் பல நண்பர்கள் 'சந்திரா' என்று அழைத்தனர். வந்த வினை 'மதி'க்குத்தான். 'மாடி', 'மாதி' என்றெல்லாம் ஆனது. நல்லவேளை 'மந்தி' என்று அழைக்காமல் விட்டார்களே என்று நினைத்துக்கொள்வேன். என்னுடைய பெயருக்கு என்ன அர்த்தம் என்று கேட்பவர்கள் அதிகமானார்கள். சந்திரனை குறிக்கும் இரண்டு பெயர்கள் என்றும், 'மதி' என்றால் அறிவு என்பதை வைத்து அதனையும் சொல்லி வந்தேன். ஆனால் எனக்குப்பிடித்த பொருள். 'நிலவைப்போல அழகான, புத்திசாலி' என்பதுதான். அதைத்தான் இப்போதெல்லாம் கேட்பவர்களுக்கெல்லாம் சொல்லிவருகிறேன். அட முறைக்காதீங்கப்பா. ஏதோ என்னோட அற்ப சந்தோஷம். :D தமிழ் இணையப்பக்கம் வந்தபிறகு பலர் என்னுடைய பெயர் அழகாக இருக்கிறது என்று சொன்னதை அப்பாவிடம் ஒரு அசட்டுச்சிரிப்புடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். பார்த்தியா பெயர் நல்லா இல்லை. பெருசா இருக்கு என்று சண்டை போடுவாயே என்று நான் எதிர்பார்த்ததையே சொன்னார். வீட்டில் என்னுடைய பெயர் எப்படி எல்லாம் அரவிந்தனாலும் விக்கியாலும் கிண்டலடிக்கப்பட்டது என்பது தனிக்கதை. அதையெல்லாம் இங்கே சொல்லி என் தலையில் நானே மண்ணை வாரிப்போடமாட்டேன்.

நம்மவர்கள் தென்கிழக்கு ஆசியா, குறிப்பாக சீனா, ஹாங்காங் தேசத்தவர்கள் போல ஆங்கிலப்பெயர்கள் வைத்துக்கொள்வதில்லை. ரமணீதரன் அவர்களின் வலைப்பதிவில் பார்த்து கேட்ட அந்த நிகழ்ச்சியிலும் 'மீனாட்சி' தன்னுடைய குழந்தைகளுக்கு இந்தியப்பெயர் வைக்கப்போவதாக சொன்னாள். நம்மவர்கள் இப்படி அர்த்தமுள்ள பெயர்களை ஏன் வைக்கிறார்கள். பாசிட்டிவ் அப்ரோச் என்ற விஷயம் நம்முள் முன்பே இருந்திருக்கிறதா? சின்னவயதில் படித்த ஒரு கதை ஞாபகம் வருகிறது. பெரிய குற்றங்கள் செய்தவன் ஒருவன் தன்னுடைய கடைசி மகனுக்கு 'நாராயணன்' என்று பெயர்வைக்கிறான். கடைசிகாலத்தில் இறக்கும்தறுவாயில் மகனது பெயரை சொல்லிக்கொண்டே இறந்ததினால், உணர்ந்து சொல்லாவிடினும் பெயர்சொன்ன காரணத்திற்காகவே சொர்க்கம் போகிறானாம்.

அமெரிக்காவில் இருக்கும் உறவினர் ஒருவர் வந்திருந்தபோது 'தவமணி' என்ற அவரது பெயரை சுருக்கி 'மணி' என்று கூப்பிடுங்கள். 'Money', 'மணி' இரண்டும் ஒரே மாதிரிதான் என்று சொல்லியும் எல்லாரும் 'மானி' என்று கொலை செய்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார். பொதுவாக நம்மெல்லோருக்கும் இப்படி நடந்திருக்கும். உங்களுக்கு ஏதாவது சுவாரசியமான சம்பவங்கள் தெரிந்திருந்தாலோ நடந்திருந்தாலோ பகிர்ந்துகொள்ளுங்களேன்.

Comments on ""

 

post a comment