Friday, July 11, 2003

என் ஆசிரியர்கள்என்னுடைய ஆசிரியர்களை நான் அடிக்கடி நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். ஏனென்றால் இப்படி உங்களுடன் நான் பேசிக்கொண்டிருப்பதற்க்கு காரணமே அவர்கள்தானே!

நான் இந்தியாவிற்கு 1985 வந்து பள்ளிக்கூடத்தில் சேர்ந்தபோது ஆங்கிலத்தில் எனக்கு புலமை மிகவும் குறைவு. என்னுடைய ஊரில் ஆங்கிலம் இரண்டாவது மொழியே. தமிழே எனக்கு பயிற்றுமொழியாக இருந்தது. சென்னையில் வந்து சேர்ந்த பள்ளியோ ஆங்கிலத்தை பயிற்றுமொழியாகக்கொண்டது. எனக்கு சுலபமாக இருந்த பாடங்கள் (அதாவது என்ன பேசுறாங்க என்று புரிந்தவை) தமிழும் கணக்கும் மட்டுமே. மற்ற வகுப்புகளில் "சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்தமாதிரி" (ஆமா ஏன் இப்படி சொல்லுறாங்க என்று யாருக்காவது தெரியுமா? என்னுடைய நெடுநாள் சந்தேகம் இது.) முழித்துக்கொண்டு இருந்தேன். என்னுடைய ஏழாம் வகுப்பில் என்னை விட மூன்று இலங்கை மாணவர்கள். பார்த்தார் எங்களுடைய இயற்பியல் ஆசிரியர் - "தமிழிலும் ஆங்கிலத்திலுமாக பாடம் நடத்தட்டுமா என்று மற்ற மாணவர்களிடம் அனுமதி பெற்று பாடம் நடத்தினார். அன்றுதான் என்னமோ கொஞ்சம் பாடங்கள் விளங்கியது. இதிலும் எனக்கு மற்றவர்களை விட இன்னமும் கஷ்டமாக இருந்தது. ஏனென்றால் நான் பள்ளி ஆண்டில் இடையில் வந்து சேர்ந்து கொண்டேன். ஆனால் என்னுடைய வகுப்பிலும் என்னுடைய தம்பியின் வகுப்பிலும் மாணவர்கள் எங்களுக்கு எங்களின் நோட்டுப்புத்தகங்களை வாங்கி அவர்களே வார இறுதி விடுமுறை நாட்களில் நோட்ஸ் எழுதிக்கொடுத்தார்கள். இந்த மாணவ நண்பர்களும் அந்த ராஜசேகர் சாரும் எனக்கு இந்தியா வந்ததும் என் மனதில் முதலில் இடம் பெற்றவர்கள்.

அடுத்தது என்னுடைய புவியியல் மாஸ்டர் சுவாமிநாதன். நமக்கு ஆங்கிலம் "ததக்கு புதக்கு" என்று வந்தாலும் புவியியலிலும் சரித்திரப்பாடத்திலும் ஒரு விவரிக்கமுடியாத ஆர்வம் இருந்தது. (இன்றும்தான்.) விலங்கியல் பாடத்தில் பூஜ்யம் வாங்கிய தேர்வில்தான் நான் புவியியலில் 72ம் வாங்கி இருந்தேன். (தேர்வு நடந்தது நான் பள்ளியில் சேர்ந்து 2 வாரத்துக்குப்பிறகு.) சுவாமிநாதன் சார் தான் போன வகுப்புகளில் எல்லாம் மாணவர்களை என்னுடைய பெயர் சொல்லிக்காட்டி வறுத்தெடுத்ததால் எல்லா மாணவர்களும் என்னமோ zooவிற்கு போவதுபோல என்னுடைய வகுப்புக்கு வந்து என்னை பார்வையால் எரித்து விட்டுப்போனார்கள். நான் வீட்டில் போய் பெருமை அடித்துக்கொண்டேன். அப்போதுதான் அவர் என்னுடைய தம்பியின் வகுப்பு ஆசிரியர் என்பது தெரிந்தது. அடுத்தநாள் அவரின் மனைவியும் எங்கள் பள்ளியில் இயற்பியல் ஆசிரியை என்பது தெரிந்தது. அவர் என்னிடமும் தம்பியிடமும் ஆர்வமாக எங்களைப்பற்றிய விவரங்களை கேட்டு அறிந்து விட்டு வேண்டுமானால் தானும் தன் மனைவியும் எங்களுக்கு டியூஷன் எடுப்பதாக சொன்னார். ஆகா, இந்த டியூஷனுக்குத்தான் இவர் அடி போட்டாரா! என்று தவறாக நினைத்துவிடாதீர்கள் நண்பர்களே!

தமிழ் தவிர ஏனைய அனைத்துப்பாடங்களிலும் எங்களுக்கு அனைத்து வார்த்தைகளையும் மொழி பெயர்த்து பாடம் நடத்தினார்கள் சுவாமிநாதன் சாரும் சாந்தி டீச்சரும். கணிதத்தில் "சக" என்பது பிளஸ், "சய" என்றால் மைனஸ் என்பதில் இருந்து ஆங்கில poetryயில் ஒவ்வொரு வார்த்தைக்கும் புத்தகத்தில் தமிழில் தன் கைப்பட எழுதித்தருவதில் இருந்து எல்லாமே அவர்கள்தான் எங்களுக்கு சொல்லிக்கொடுத்தார்கள். ஒரு ஆறு மாதத்திற்கு வாரத்தின் ஏழு நாட்களையும் எங்களுடன் செலவழித்தார்கள். அது மட்டும் இல்லை, 4 மணிக்கு பள்ளியில் இருந்து வந்து ஐந்து மணிக்கு அவர்களின் வீட்டுக்கதவைத்தட்டும் எங்களை 9 மணிக்கு வீட்டுக்குகொண்டுவந்து விடுவதும் அவர்கள்தான். நடுவில் புதன்கிழமையில் அந்த நாட்களில் ஒளிபரப்பான சிவசங்கரியின் கதையில் ரகுவரன் நடித்து ஒரு தொடர் வந்ததே "ஒரு மனிதனின் கதை" அதைப்பார்ப்பது அவர்கள் வீட்டில்தான். ஆனால் வெள்ளிக்கிழமை ஒலியும்ஒளியும் பார்க்க விடமாட்டார், தானும் பார்க்கமாட்டார்! என்னடா இவள் இப்படி ஒரு ஆசிரியரைப்பற்றி இவ்வளவு எழுதுகிறாளே(புகழ்கிறாளே!) என்று நீங்கள் நினைக்ககூடும். ஆனால் உங்களில் யாருக்காவது இப்படி ஒரு ஆசிரியர் கிடைத்து இருக்கிறாரா? கிடைத்து இருந்தால் உங்களைப்போல பாக்கியசாலிகள் யாரும் இல்லை!

என்னுடைய அருமைத்தம்பி "நெத்தலிப்பயில்வான்" என்று மரத்தடியில் பெயர் வாங்கிய அரவிந்தன் பத்தாவது வகுப்பு மெட்ரிக் பரீட்சையில் அவனும் நாங்கள் குடும்பட்த்தினரும் ஆவலுடன் எதிர்பார்த்தது போல கணிதத்தில் ராங்க் வாங்கவில்லை. மாறாக அவன் முதல் ராங்க் வாங்கியது ஆங்கிலத்தில். பள்ளிகூடத்தில் யாருமே எதிர்பாராதது இது. அவன் ராங்க் வாங்குவான் என்றே யாரும் எதிர்பார்க்கவில்லை. அவன் வகுப்பில் கூட பேசமாட்டான். அவன் இருக்கிறான் என்றே ஆசிரியர்கள் பலருக்குத்தெரியாது. எல்லாரும் அல்லோக கல்லோக பட்டுக்கொண்டிருந்தபோது எனக்குத்தெரியும் இப்படி நடக்கும் என்பது போல பார்த்துக்கொண்டிருந்தார் சுவாமிநாதன் சார். என்னுடைய அப்பா ஆறு மாதம் கழித்து வந்ததும் சென்றுபார்த்த முதல் ஆள் சுவாமிநாதன் சார்தான். இன்னும் எங்கள் வீட்டில் சார் குறிப்பெழுதிய ஆங்கில புத்தகத்தை வைத்திருக்கிறேன்.

அடுத்தது, என்னுடைய பத்தாம் வகுப்புக்கணக்கு வாத்தியார் Mr. Tiller. எங்கள் பள்ளியின் உப தலைமையாசிரியரான அவர் ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பில் நான்கு பிரிவில் ஒரு பிரிவிற்குப் பாடம் நடத்துவார். எல்லாரும் எந்த வகுப்புக்கு அவர் வருவாரோ என்று பயத்துடன் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். நானும் அப்படித்தான் பயத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தேன். தூரதிஷ்டவசமாக (???) எங்கள் வகுப்புக்கு வந்தார். நாங்கள் கணக்கில் புரியாமல் விடும் தவறுகளைப்பொருட்படுத்தாத அவருக்கு இந்த careless mistake விட்டாலே சாமி ஏறிவிடும். பிரம்பினால் அடி பசங்களும், காதில் சவ்வு மாதிரி இருக்கும் பகுதியில் லேசாக நிகம் வளர்ந்து இருக்கும் விரல்களால் ஒரு கிள்ளு பெண்களும் வாங்குவோம். நானும் அவரிடம் 3 முறை வாங்கிக்கட்டிக்கொண்ட பிறகுதான் அவர் சொல்லுவது போல எல்லா எண்களுக்கும் "+/-" போடத்தொடங்கினேன். அவர் அவ்வாறு செய்ய சொன்னதற்கான காரணமும் இன்னமும் நன்றாக நினைவு இருக்கிறது. எல்லா எண்களுக்கும் "+/-" போட்டுப்பழகி விட்டால் பிறகு "-" போடமறக்கமாட்டோம் என்று சொன்னார். மேலும் ஒன்பது மணிக்கு மற்ற எல்லாருக்கும் வகுப்புத்தொடங்கும். ஆனால் எங்களுக்கு மட்டும் எட்டு மணிக்கே cycle test என்று தினமும் எல்லா பாடங்களிலும் தேர்வு வைத்தார்கள். ஐடியா கொடுத்தது வேறு யார்? Mr. Tiller தான். அது மட்டுமல்ல வாரத்தில் மூன்று நாட்கள் எங்களுக்கு 4.30pm - 6pm கணக்கு பாடம் நடந்தது. அத்துடன் சனியன்றும் எங்களுக்கு கணக்கு வகுப்பு உண்டு.

Mr.Tiller இன்னொன்றும் செய்தார். வகுப்பில் நாற்பத்தைந்து மாணவர்களில் பத்து பேரைத்தேர்ந்து எடுத்து அவர்கள் வீட்டிற்கும் போவார். அடையாறு, டி. நகர் என்று தொலைவில் இருக்கும் மாணவர்கள் வீட்டிற்கும் விசிட் உண்டு. எப்ப யார் வீட்டுக்கு வருவார் என்றே தெரியாது. phew... அவர் இப்படி விசிட் அடிக்கத்தொடங்கியபிறகு எங்களைப்போல் ஒழுங்குபிள்ளைகளை நீங்கள் பார்த்தே இருக்க மாட்டீர்கள். பின்ன, வீட்டில இதுதான் சாக்கு என்று நாங்கள் செய்யுற கூத்தையெல்லாம் report பண்ணிருவாங்களே! எங்கள் வீட்டிற்கு வந்து தட்டிய அன்று கதவு திறந்தது நான்தான். பேய் அறைந்தது மாதிரி நின்ற என்னை "என்ன சந்திரமதி, டிவியா பார்க்கிறாய்?" என்று சிம்மகுரலில் கேட்டார். டிவி இல்லை sir என்று நான் சொன்னதும் என்னுடைய அம்மாவை புகழ்ந்து விட்டுப்போனார். நான் எத்தனை மணிக்கு எழுந்து கொள்கிறேன், என்ன என்ன செய்கிறேன் என்றெல்லாம் கேள்வி. சிபிஐகாரன் கெட்டான் போங்கள்! ஒரு நாள்தான் வருவார் என்று தப்புக்கணக்கு போடாதீர்கள். எனது வீட்டிற்கு எத்தனை முறை வந்தார் என்பது எனக்கு ஞாபகத்தில் இல்லை. ஆனால் அவர் வந்து விசிட் அடித்த மாணவர்கள் எல்லாமே 190க்கு மேல் மார்க் வாங்கினோம். எனக்கு கணக்கு I ல் 99ம், கணக்கு IIல் 93ம் மார்க் கிடைத்தது. என்ன ஆனது கணக்கு Iல் என்று கேட்டார். அவரிடம், இரண்டு மார்க் வரும் ஒரு கணக்கில் square root of 1 = 1தான் என்பது முப்பது நிமிடங்களாக மனதில் தலைகீழாக நான் குட்டிக்கரணம் போட்டும் தோன்றவில்லை என்று நான் அப்பாவிடம் வந்து புலம்பியதை, அப்பா அவரிடம் சொல்லி விட்டார். திட்டு விழப்போகுது என்று பயந்துபார்த்துக்கொண்டு இருந்த எனக்கு இன்னமும் Tiller sirன் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை மறக்கமுடியவில்லை!

Comments on "என் ஆசிரியர்கள்"

 

post a comment