Sunday, July 20, 2003

திருமறைக்காட்டில் ஒரு மாலைப்பொழுது



இன்று என்ன எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த போது சும்மா ஹவாய் பத்தியும் இங்கிலீசு படம் பத்தியுமே எழுதி கிட்டு இருக்காதே. வேற எதாய்ச்சும் எழுதுன்னு உள்மனசு சொல்லுச்சு. அதான், அதன்மேல பாரத்தைப்போட்டுட்டு கொஞ்சம் வித்தியாசமான அனுபவம் பத்தி எழுதப்போறேன்.

கடைசியா ஊருக்கு போறதுக்கு முன்னாடி இந்தயிந்தக் கோயில்களுக்கு போகணும்னு ஒரு பட்டியலே தயார் பண்ணியிருந்தேன். அதை தங்கச்சிக்கும் அனுப்பி அவளும் தமிழ்நாட்டு வரைபடத்தை வச்சுகிட்டு நான் எப்போ வருவேன்னு வழிமேல விழி வச்சு காத்துக்கிட்டிருந்தா. :)

ஒரு சனிக்கிழமை அன்னிக்கு கோயில் சுற்றுலா கிளம்பினோம். பயணம் கிளம்பிய இரண்டாம் நாளன்று வேளாங்கண்ணி மாதாவை தரிசித்து விட்டு வேதாரண்யம் நோக்கி பயணித்தோம். பிற்பகல் வேளை. கடற்காற்று சில்லென்று அடிக்க கார் தெற்கு நோக்கி பயணித்தது. சில இடங்களில் சாலையில் இருமருங்கும் வயல்வெளிகளையும், சிற்சில இடங்களில் கடலையும் பார்த்தவாறு சென்று கொண்டிருந்தோம். அம்மாவிற்கு இலங்கைக்கு அருகில் வருகிறோம் என்ற மகிழ்ச்சி வேறு கொப்பளித்துக்கொண்டிருந்தது. நானும் தங்கையும் அவரை கள்ளத்தோணி கிடைத்தால் தேடி அனுப்பி வைக்கிறோம் என்று கலாட்டா செய்து கொண்டிருந்தோம். ஆனால், சில இடங்களில் போலீஸ் செக்போஸ்ட் இருந்தது. ஓட்டுநர், கடத்தல் நடவடிக்கைகளையும் இன்னபிறவற்றையும் கண்காணிக்கவுமே அந்த செக்போஸ்டுகள் போடப்பட்டிருக்கின்றன என்று சொன்ன பிறகு காரில் ஜேசுதாஸ் குரல் மட்டுமே கேட்டது. :)) வழியில் ஓரிடத்தை இதுதான் நாட்டுப்புறப்பாடல் பாடும் புஷ்பவனம் குப்புசாமியின் ஊர் என்று சொன்னதும், குப்புசாமியின் காசட் ஒலிக்க ஆரம்பித்தது.

வேளாங்கண்ணியில் இருந்து சில மணிநேரம் பயணித்து திருமறைக்காடு என அழைக்கப்படும் வேதாரண்யத்தை அடைந்தோம். நாங்கள் மூவரும் பலநாட்களாக இந்தக்கோயிலுக்கு வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தபடியால் நேரம் கடத்தவில்லை. வழக்கம் போல நானும் தங்கையும் போட்டி போட்டுக்கொண்டு கோபுரத்தை புகைப்படம் எடுத்துத்தள்ளினோம்.

கோபுரத்தின் அளவே எங்களை பிரமிக்க வைத்திருந்தது. கோபுர வாயிலில் சிறிய கதவு மட்டுமே திறக்கப்பட்டிருந்தது. ஒருவர் பின் ஒருவராக கோவிலின் உள்ளே சென்ற எங்களால் வாய்பேச முடியவில்லை. அத்தனை பெரிய பரப்பளவில் கோவில் அமைந்திருந்தது. அந்திப்பொழுதாகையால் தென்றல் காற்றும் சுற்றிலும் மரங்களும் ஆங்காங்கே சன்னதிகளுடன் நடுவில் பிரம்மாண்டமான கோயில் கட்டடம் எங்களை வியப்பில் ஆழ்த்தியது. நாங்கள் சென்றது கோயிலின் பின்புறம். மிக அகலமான வெளி வீதியில் நடந்து கோயிலின் முன் பகுதியை அடைந்தோம்.

அங்கிருந்த பெரிய கதவினூடாக உள்நுழையும்போதே அப்பரும் சம்பந்தரும் இங்கு தரிசனம் செய்தது ஞாபகம் வந்தது. அப்பர் என்ற திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் இறைவனை வழிபட இக்கோவிலுக்கு வந்திருக்கிறார்கள். அப்போது அடியார்கள் முன் வாசலை உபயோகிக்காமல் பக்கத்திலிருக்கும் வழியையே உபயோகிப்பது கண்டு என்னவென்று விசாரித்திருக்கிறார்கள். கதவை திறக்கமுடியவில்லை என்று அடியவர்கள் கூறியதைக்கேட்டு இருவரும் இறைவனுக்கு பாடல் பாடி அவனையே கதவையும் திறக்கச்செய்யவேண்டும் என்று முடிவு செய்தார்கள். கதவை திறக்க செய்வதற்கு அப்பர் 10 பாடல்கள் அடங்கிய பதிகம் பாடினார். கதவும் திறந்தது. திறந்த கதவை மூட செய்ய திருஞானசம்பந்தர் பாடிய ஒரு பாடலே போதுமாக இருந்தது.

சிவாஜி அப்பராக நடித்ததைப்பற்றியும் நிஜமாகவே இங்குதான் படத்தை எடுத்திருப்பார்களோ என்றும் பேசிக்கொண்டே கோயிலின் முன் வாசலை அடைந்தோம். யப்பா அங்கு எங்களுக்கு இன்னொரு அதிசயம் காத்திருந்தது. சிவலிங்கம் இருக்கும் மூல சன்னதியை அடைய நாங்கள் தாண்டிய கதவுகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். போகிறோம் போகிறோம் போய்க்கொண்டே இருக்கிறோம். :) சிவனை தரிசனம் செய்து விட்டு திரும்பி வரும்போது எத்தனை கதவுகள் இருக்கிறது என்று எண்ணவேண்டும் என்று பேசிக்கொண்டோம்.

ஆனால் அதற்குள் ஒருவர் வந்து வாருங்கள் வாருங்கள் என்று எங்களை பரபரப்பாக அழைத்தார். அதுவரை கோயில்களில் அர்ச்சகர்களின் தொல்லையால் அவதிப்பட்ட நாங்கள் அவர் எதற்குக்கூப்பிடுகிறார் என்று எண்ணிக்கொண்டே வந்தோம். அவரோ கையில் இருந்த மல்லிகைச்சரத்தை அம்மாவிடம் கொடுத்து மரகத லிங்கத்திற்கு பூஜை நடக்கிறது. சீக்கிரம் போங்கள் என்று அனுப்பி வைத்தார். சப்தவிடங்க தலங்கள் என்று அழைக்கப்படும் எட்டுக்கோவில்களில்தான் மரகத லிங்கம் இருக்கிறது. அதில் வேதாரண்யமும் ஒன்றும். மரகத லிங்க பூஜையை தரிசித்து விட்டு பிறகு தொடர்ந்து நடந்த மாலைவேளைப்பூஜையும் பார்த்தோம்.

உள் பிரகாரத்திலேயே தனிச்சன்னிதி கொண்ட துர்க்கையம்மனை வழிபடும்போது ஏனோ புங்குடுதீவு ஞாபகம் வந்து போனது. உள் பிரகாரப்பூஜை முடிந்ததும் வெளிப்பிரகாரத்தில் இருக்கும் விநாயகருக்கும் முருகனுக்கும் பூஜை நடந்தது. இங்கு இருக்கும் விநாயகரைத்தானாம் இராமர் வழிபட்டாராம். மேலும் இங்குதான் சிவன்-பார்வதியின் திருமணக்கோலமும் அகத்தியருக்கு கிடைத்ததாம். உலகத்தில் இருக்குறவங்கல்லாம் பார்வதி பரமேசுவரரின் கல்யாணத்தை பார்க்கிறதுக்கு இமயமலை வந்துட்டாங்களாம். அனைவரும் வடக்கே வந்துவிட்ட படியால் வடபகுதி தாழ்ந்தும் தென்பகுதி மேலாகவும் வந்து விட்டதாம். அதை மாற்றி பூமியை பழைய படி இருக்க செய்ய சிவன் உயரத்தில் சிறியவரான அகத்தியரை தெற்கே அனுப்பி வைத்தாராம். அவரும் தனக்கு மறுபடியும் திருமணக்காட்சியைக்காட்ட வேண்டும் என்று கண்டிஷன் போட்டுட்டுத்தான் கிளம்பி இருக்கார். அகத்தியரின் கண்டிஷனை இங்கதான் நிறைவேற்றி வைத்தார்களாம் பார்வதியும் பரமேஸ்வரனும். :)

நாங்கள் கோவிலை விட்டு கிளம்பும்போது இருட்டி விட்டது. ஆங்காங்கே மினுக்கிக்கொண்டிருந்த டியூப் லைட்டுகள் தீவட்டிகளாக உருவகித்துக்கொண்டு பழங்காலத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டோம் நானும் தங்கையும். அந்த ரம்யமான மாலைப்பொழுதில் அந்த பிரமாண்டமான கோயில் பிரகாரத்தில் நடக்கும்போது எத்தகைய வரலாற்றுப்பொக்கிஷங்கள் இருக்கின்றன நம்மிடையில். ஆனால் நாம் அவற்றிற்கு வேண்டிய மரியாதை கொடுக்கிறோமா என்று நினைத்துக்கொண்டேன். பயணம் முடிந்து சென்னை திரும்புவதற்கு எத்தனை தரம் அப்படி நினைத்தேன் என்று எனக்கே தெரியவில்லை. :(

I dont know if I have done justice to ones' experience in this great temple.

என்னால் முடிந்த அளவு என் எழுத்தின்மூலம் என்னுடைய அனுபவத்தை உங்களிடன் பகிர்ந்து கொள்ள முயற்சித்திருக்கிறேன். எப்படி இருக்கிறது என்று நீங்கள் சொன்னால் மகிழ்வேன்.

Comments on "திருமறைக்காட்டில் ஒரு மாலைப்பொழுது"

 

post a comment