Friday, August 15, 2003

பேர்ல் துறைமுகம்அமெரிக்காவை இரண்டாம் உலகப்போரில் ஈடுபடச்செய்த தாக்குதல் Pearl Harbor இன் மீது மார்கழி 7ம் தேதி 1941ம் ஆண்டு நடந்தது. பறந்து வந்த ஜப்பானிய விமானங்கள் பெய்த குண்டுமழையில் ஏராளமான வீரர்கள் மாண்டனர், ஏராளமான பொருட்சேதமும் ஏற்பட்டது.அந்த பேர்ல் துறைமுகத்துக்குத்தான் நாம் இன்று செல்லப்போகிறோம்.
காலை நேரம் பத்து மணி. அதற்குள் நல்ல வெய்யில் சுள்ளென்று அடிக்கிறது. ஹானலூலுவின் மையப்பகுதியில் இருந்து பதினைந்து-இருபது நிமிடப்பயணத்தில் துறைமுகத்தை அடைந்துவிடலாம். சைனா டவுனைத்தாண்டியதும் பேருந்து வேகம்பிடிக்கிறது. இரு புறமும் மலைகளும் பள்ளத்தாக்குகளும் ஆங்காங்கே வீடுகளுமாய் அழகான காட்சிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள் மக்கள். அவற்றில் பலர் சுற்றுலாப்பயணிகள். பெரும்பாலானவர்கள் ஜப்பானியர்கள். ஜப்பானியர்கள்தான் ஹாவாய்தீவுகளுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளில் எண்ணிக்கையில் அதிகமானவர்கள். பல வியாபார ஸ்தலங்களும் இவர்களுக்கு சொந்தமானதே. சுற்றுலாப்பயணிகளுக்கென இயங்கும் நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானவர் ஜப்பானிய மொழி தெரிந்திருக்கவேண்டும் என்பது எதிர்பார்க்கப்படும் ஒன்று.

சரி, பேசிக்கொண்டிருந்ததில் நமது நிறுத்தம் வந்ததே தெரியவில்லை. சாலையைக்கடந்து இரண்டு-மூன்று நிமிடங்கள் நடந்து பேர்ல் ஹார்பரை அடைந்து விட்டோம். வெளியில் இருந்து பார்த்தால் நமக்கு அருகில் இருக்கும் USS Missouri என்னும் கப்பல் தெரிகிறது. 1999 ஆண்டு USS Missouri Memorial திறக்கப்பட்டது. இந்தக்கப்பலில் வைத்துத்தான் ஜப்பான் இரண்டாம் உலகப்போர் முடிவடையும் தறுவாயில் சரணடைவதற்கான ஒப்பந்தத்தில் கையப்பமிட்டது.

பேர்ல் துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் இருக்கின்றன. அதாவது இரண்டு நினைவிடங்கள். ஒன்று மைட்டி மோ என்றழைக்கப்படும் USS Missouri என்ற பிரமாண்டமான சிறிதளவும் சேதமடையாத கப்பல். மற்றது 1941ல் கடலில் மூழ்கிய USS Arizona. ஜப்பானியத்தாக்குதலின் போது மிகவும் மோசமாக சேதமான கப்பல் இது. மூன்று எண்ணூறு கிலோகிராம் எடையுள்ள குண்டுகளால் தாக்கப்பட்டு மூழ்கிய இந்தக்கப்பல் ஏறக்குறைய ஆயிரத்திநூறு வீரர்களுக்கு சமாதியாக இருக்கிறது. ஆமாம், இவர்களின் உடல்கள் இந்தக்கப்பலின் உள்ளேதான் இருக்கின்றன. கப்பல் தாழ்வதற்கு ஒன்பது நிமிடங்கள் ஆனதாம். வீரர்களின் சமாதியாக இருக்கும் இவ்விடத்திற்கு மரியாதைக்குரியவாறு உடையணிந்து இருப்பவர்களே அனுமதிக்கப்படுகிறார்கள். நீச்சலுடை அணிந்திருப்பவர்களோ, காலணியணியாதவர்களோ அனுமதிக்கப்படுவதில்லை.சரி இப்போது நான் பார்வையாளர்கள் கூடத்திற்கு செல்கிறோம். வழியிலேயே பேர்ல் துறைமுகம் பற்றிய படம் ஒன்றைப் பார்ப்பதற்கான சீட்டையும் வாங்கிக்கொள்கிறோம். தேசிய பூங்கா இலாகா இந்த இடத்திற்கு பொறுப்பேற்றுள்ளது. இங்கு நுழைவுக்கட்டணம் ஏதும் இல்லை. ஆனால் நினைவுப்பொருட்கள் வேண்டுமென்றால் விலை கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். கோடை காலத்தில் கூட்டமாக இருக்கும் இவ்விடம் மாசி மாதங்களில் அவ்வளவு கூட்டமாக இல்லை. ஆகவே அடுத்து தொடங்க விருக்கும் படக்காட்சிக்கு சுலபமாக போய் அமர இடம் கிடைக்கிறது. இரண்டால் உலகப்போரில் அமெரிக்கா பங்கு பெற வேண்டிய நிர்ப்பந்தத்தை உண்டாக்கிய இத்தாக்குதல் எப்படி எவ்வாறு நிகழ்ந்தது என்று காட்டுகிறார்கள். இருபது நிமிடங்கள் ஓடும் இப்படத்தை பார்த்தபிறகு நமக்கே லேசாக ஜப்பானியர்கள் மீது கோபம் வருகிறது. இதைப்பார்க்கும் அமெரிக்கர்கள் என்ன உணர்வுகளுக்கு ஆளாகிறார்கள். அதேபோல எங்களுடன் இருந்து படம் பார்த்த நூறுக்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் என்ன மாதிரியான உணர்வுகளுக்கு ஆளானார்கள்? அவர்கள் நாட்டில் இருக்கும் ஹிரோஷீமா, நாகசாகி நகரங்களில் இருக்கும் நினைவிடத்தை நினைத்துக்கொண்டார்களா என்ற கேள்விகளோடு வெளியே வருகிறோம்.


பிறகு அங்கிருக்கும் ஒரு படகில் ஏறி சற்றுத்தொலைவில் கடலில் இருக்கும் USS Arizona நினைவிடத்திற்கு செல்கிறோம். முகில்கள் அற்ற நீல நிற வானமும், நீல வண்ணத்தில் ஜொலிக்கும் அலைகடலும் சுகமாக வந்து தழுவும் தென்றல் காற்றும் மிகவும் இதமாக இருந்தாலும். சற்று முன் பார்த்த திரைப்படம் நெஞ்சில் கனக்கிறது. கிட்ட வந்து கொண்டிருக்கும் அரிசோனா நினைவிடத்தை அனைவரும் படமெடுத்து தள்ளிக் கொண்டிருந்தார்கள்.நூற்றிஎண்பத்திநான்கு அடி நீளமுள்ள நினைவுக்கட்டிடம் மூழ்கிப்போன அரிசோனா கப்பலின் வயிற்றுப்பகுதிக்கு குறுக்காக கட்டப்பட்டிருக்கிறது. பார்வையாளர்கள் படகில் இறங்கி கூடுமிடம் ஒரு ஓரத்திலும், விசேட நிகழ்ச்சிகள் நடாத்துவதற்காகவும் பார்வையாளர்கள் பார்வையிடவும் என்றிருக்கும் பகுதி நடுவிலும், Shrine Room என்றழைக்கப்படும் இடத்தில் அரிசோனா கப்பலில் இறந்தவர்களின் பெயர் பொறித்த பளிங்கு கல் இன்னொரு பக்கத்திலும் இருக்கிறது. பார்வையாளர்கள் பார்வையிடும் இடத்தில் நின்று கொண்டு மக்கள் 'லே' (lei) என்றழைக்கப்படும் மாலைகளை அரிசோனா கப்பல் வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும் பகுதியில் வீசுகிறார்கள். கூடவே மலர்களையும் சிலர் சொரிகிறார்கள். உலகெங்கும் சப்தமிடுபவர்கள் என்று அழைக்கப்படும் அமெரிக்கர்கள் இங்கு அமைதியாக இருக்கிறார்கள். சற்று முன்பே பார்த்த திரைப்படம் நினைவில் நின்று மனதைக்கனக்க செய்கிறது. பார்வையாளர்கள் பார்வையிடும் பிரிவில் நின்று பார்க்கும்போது கீழே மூழ்கிய கப்பல் தெரிகிறது. இங்கு ஆயிரம் பேர் சமாதியாக இருக்கிறார்கள் என்ற எண்ணம் நிலைத்து நிற்கிறது. கப்பலிலிருந்து இன்னமும் எண்ணெய் கசிந்தபடி இருக்கிறது. தினமும் 2/3 quart கசிகிறதான். முக்கால் வாசிக்கும்மேல் எண்ணை டாங்க் நிரம்ப இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். அது அபாயகரமானது என்றும் சிலர் எச்சரிக்கிறார்கள். விசேட மரியாதையாக, மூழ்கிய கப்பலின் main mastஇல் (தமிழில் என்ன? கொடிக்கம்பம்??) அமெரிக்க நாட்டுக்கொடி பறக்கிறது.இவ்விடத்தில் நினைவிடம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் 1942ம் ஆண்டிலிருந்தே எழத்தொடங்கி விட்டாலும் 1949ல் ஹவாய் பிராந்தியம் அதற்கென ஒரு குழுவை அமைத்தது. 1958ம் ஆண்டுதான் இரண்டாம் உலகப்போரில் வெற்றிபெற காரணமான ஒருவரான ஐக் (Ike) என்று அழைக்கப்பட்ட ஐசன்ஹோவரால் அனுமதிக்கப்பட்டு 1961ல் அரசு மற்றும் தனியார் நிதியுதவியினால் கட்டி முடிக்கப்பட்டு 1962ம் ஆண்டு திறக்கப்பட்டது.

இந்த நினைவிடத்தின் கட்டிடக்கலைஞரான (architect) Alfred Preis பின்வருமாறு கூறினார். "Wherein the structure sags in the center but stands strong and vigorous at the ends, expresses initial defeat and ultimate victory....The overall effect is one of serenity. Overtones of sadness have been omitted to permit the individual to contemplate his own personal responses...his innermost feelings."

கடல் வாசனையும் நினைவுக்கட்டிடத்தில் வந்து லேசாக முட்டும் அலைகளின் சப்தமும், பஸிபிக் சமுத்திரத்திலிருந்து வீசும் தென்றல் காற்றுமாக அரிசோனா கப்பலின் பணிபுரிந்து மாண்ட வீரர்கள் என்றும் இங்கு அமைதியுடன் இருப்பார்கள் என்று நம்புவோம்.
Comments on "பேர்ல் துறைமுகம்"

 

post a comment