Saturday, September 13, 2003

My obsession with 'The Hindu'



இண்டைக்கு 'த ஹிந்து' பத்திரிகை தொடங்கி 125 வருஷம் ஆனதை கொண்டாடீனம். அந்த விழாவுக்கு டெல்லில இருந்து பிரதமர் வாஜ்பாய் வந்திருக்கிறேராம். ஏகதடபுடலாக விழாக்கொண்டாடேக்க ஹிந்து பேப்பர் அதின்ற நூற்றிஇருபத்தி ஐந்து கால வரலாற்றில இருந்து கொஞ்சம் நம்மளிட்ட பகிர்ந்திருக்கு. அதில நல்ல பழைய போட்டோக்களும் இருக்கு.

http://www.hinduonnet.com/th125/index.htm

எனக்கு நல்லா பிடிச்ச பேப்பர்களில ஹிண்டுவும் ஒண்டு. முதன்முதலா நானும் என்ற குடும்பமும் சென்னைக்கு வந்தபோது அப்பாவின்ற ·பிரண்டு வீட்டிலதான் தங்கினனாங்க. அங்க கண்ட பேப்பர்கள்தான் இண்டைக்கும் எங்கட வீட்டில வாங்கீனம். ஹிண்டுவும் தினமணியும். டொக்டர் மாமா (அப்பாவின் நண்பர்) வீட்டில அவரிண்ட பிள்ளைகள் தமிழ்பேப்பரை அவ்வளவு விரும்பி படிக்கமாட்டினம். எங்களுக்கெண்டா தமிழ்தான் நல்லாத்தெரியும். மூண்டுபேரும் அடிச்சுப்பிடிச்சண்டு படிப்பம். இதை ஒரு கிழமையா கவனிச்சண்டு இருந்த டொக்டர் மாமா, ஒரு நாள் பேப்பரை மாத்தி கொடுத்திட்டேர். எங்களை ஹிண்டு படிக்கசொல்லியும் அவையை தமிழ் படிக்கசொல்லியும். நாங்கள் எங்கட பட்லர் இங்கிலிஷில் படிக்கிறதை அவையை இருந்து கேக்கசொல்லி, பிறகு அவையை தினமணியை படிக்கசொல்லியும் சொன்னேர். அம்மு அக்கா பறுவாயில்லை நல்லா வாசிச்சா. ஆனால் குமார்தான் எழுத்துக்கூட்டி சரியாக்கஷ்டப்பட்டு போயிற்றான். பிறகு விக்கியை, குமார் படிச்ச அதே செய்தியை படிக்கசொன்னேர் டொக்டர் மாமா. விக்கிக்கு அப்ப என்ன ஒரு எட்டு வயசிருக்கும். அவ கடகட எண்டு படிக்கிறதை பார்த்து குமாரிட்ட விக்கிற்ற தமிழ் படிக்கசொல்லி சொல்லிற்று போயிற்றேர். அவர் அப்படி சொன்னது எங்களில ஒருத்தருக்கும் பிடிக்கேல்ல எண்டது வேற விஷயம். ஆனால், இண்டைக்கும் விக்கியைக்கண்டா குமார், தன்ற தமிழ் டீச்சர் எண்டு சொல்லுவான்.

பிறகு நாங்கள் பள்ளிக்கூடத்தில சேர்ந்து, தனிவீடு எடுத்து வந்திற்று செஞ்ச முதல் காரியம், பேப்பர்காரனிட்ட பேப்பர் கொண்டுவர சொன்னதுதான். அண்டைல இருந்து இண்டைவரைக்கும் பேப்பர்காரன், ஹிண்டுவும், தினமணியும், மங்கையர்மலரும் போட்டுக்கொண்டு இருக்கிறேர். முதல்முதலா அம்மா வாங்கின இன்னொரு சாமான், இரண்டு இங்கிலிஷ்-தமிழ் டிக்ஷனரி. காலமை பள்ளிக்கூடம் போறதுக்கு முதல் ஒவ்வொருவரும் உக்காந்து கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கோணும் எண்டு உத்தரவு. வாசிச்ச பிறகுதான் தினமணியை தொடலாம். நானும் அரவிந்தனும் மாங்குமாங்கெண்டு ஹிண்டு படிச்சண்டு இருக்கேக்க, அம்மாவும் விக்கியும் சந்தோஷமா தினமணி படிப்பினம். ஹிண்டு படிக்கேக்க முதலில ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் பாத்தண்டு இருந்தனான். பிறகு அது அலுத்துப்போய் இதுவா இருக்குமோ, அதுவா இருக்குமோ எண்டு யோசிக்க ஆரம்பிச்சன்.

முந்தியே வாசிக்கிறதில ஆர்வம் இருந்ததால, போகப்போக காலமை பேப்பர் படிக்காட்டி, கையும் காலுமே ஓடமாட்டுது போல இருக்கத்தொடங்கிற்றுது. அப்பா என்னை வீட்டுக்கு வர்ரவையிட்ட, பேப்பரை வச்சண்டு கவிண்டு கிடக்கிற என்னைக்காட்டி, பென்ஷனியர் மாதிரி முதல் பக்கத்தில இருந்து கடைசிவரைக்கும் படிச்சண்டு இருப்பா, என்று குற்றப்பத்திரிகை சொல்லுற அளவுக்கு ஆகிப்போயிற்றுதெண்டா பாருங்களேன். அதுவும் பொங்கல், தீபாவளி, ஆயுதபூசை மாதிரி நாட்களில ஹிண்டு வராம இருக்கேக்க காலமை எழும்பவே மனசு வராது. ஏதோ ஒண்டை தவறவிட்டதுபோலயும், எப்படா இந்த நாள் ஓடிப்போயிரும் எண்டும் இருக்கும். அதுவும் ஆயுதபூசை அண்டைக்கு ஒண்டும் வாசிக்கவே விடமாட்டினமே அப்ப இன்னும் சரியான கஷ்டமா இருக்கும். பிறகுபிறகு குறுக்குப்புத்தி அதிகமாப்போனபிறகு, இதுக்கெண்டே சுவாரசியமானதை வச்சிருந்து, இது பேப்பர்தான், இது படிச்சா ஒண்டுமில்லை எண்டு சொல்லிற்று படிச்சும் இருக்கிறன்.

இன்னொண்டு சொன்னா சிரிப்பீங்க. நாங்க இருந்த அப்பாட்மெண்டில காலமை ஆறரைக்கு பேப்பர் வரும். கொஞ்சம் முன்னபின்ன இருக்கும். அதுவரைக்கும், மூண்டுபேரும், முன் ஹோலில ஏதோ சீரியசா செஞ்சண்டு இருக்கிற மாதிரி இருப்பம். பிறகு போட்டி கூடிப்போய் ஒரு ஆள் பால்கனில படிக்கிறன் பேர்வழியெண்டு இருக்கும். முதல் பேப்பர் அந்த ஆளின்ற கையில. தினமணி அம்மாவின்ற கைக்குப்போயிரும் - இல்லையெண்டா கொண்டிருவா :p. ஹிண்டு கைக்கு கிடைக்கிற ஆள், சுற்றி நிக்கிற மற்றவையிட்ட, மனசு வச்சு கூட வாற பேப்பர்களை கொடுக்கும். இப்படி பால்கனில இருக்கிற ஆளிட்டயே பேப்பர் போகத்தொடங்கினதால, கதவுக்கு வெளியில இருக்கிற இடத்துல ஒரு ஆள் உலாத்தத்தொடங்கிற்றுது.(நாந்தான். :D). பிறகென்ன பேப்பர் எண்ட கையில. ஆனா, அந்த சந்தோஷமும் நிறைய நாளைக்கு இருக்கேல்ல, நாங்க அடிபிடிபடுகிறதை பாத்திற்று அம்மா, எல்லாரும் ஹோலுக்குள்ளதான் இருக்கோணும் எண்டு சொல்லிற்றா. பிறகு என்ன செய்யிறது. எல்லாரும் ஹோலுக்குள்ள இருப்பம். அதிலயும் இன்னின்ன கதிரைல இன்னார் இருக்கோணும் எண்டும் சட்டம் வந்திற்றிது. :D

இப்ப என்ன செய்யிறது? சரி ஒரு பேப்பர்காரன்தான் தொடர்ந்து பேப்பர் போடுவார். அவரின்ற சைக்கிள் நிப்பாட்டுற சத்தத்தை நல்லா உத்துக்கவனிச்சு, படியேறி வர்ர சத்தத்திலயும் நம்ம பேப்பர்காரன்தான் எண்டு அதை உறுதிப்படுத்தியண்டு பேப்பரை கதவிடுக்கில தள்ளேக்க கோழிக்குஞ்ச பருந்து தூக்குற மாதிரி நிறைய நாளைக்குத்தூக்கி இருக்கிறன். எல்லாம் அந்த அற்புதமான புதுப்பேப்பர் மணத்தோட, மடிப்புக்கலையாம படிக்கிறதுக்குத்தான்! காலமை பேப்பர் வந்த உடன எல்லாத்தையும் விட்டுட்டு பேப்பர் படிக்கிற என்ற பழக்கத்தாலை எங்கட வீட்டில சோதனை நாட்களில ஒண்டு செஞ்சிச்சினம். 10-12 வரைக்கும் நடந்தது இது. சோதனை வர்ரதுக்கு ஒரு மாசம் இருக்கேக்க பேப்பரை நிறுத்திருவினம். பிறகு சோதனை முடிச்ச அடுத்த நாள்தான் பேப்பர் எங்கட வீட்டில இருக்கும். அந்த ஒண்டு-ஒண்டரை மாசம் பேப்பர் படிக்காதது என்னமோ போல இருக்கும். பேப்பர் திரும்பியும் போட தொடங்கினாலும், பழைய பேப்பர் படிக்கோணும், நிறைய விஷயங்களை தவறவிட்டுட்டேனே எண்டு உள்ளுக்குள்ள சொறிஞ்சண்டே இருக்கும். அதுக்கும் வழி கண்டுபிடிச்சன். கீழ் வீட்டிலயும் தனா அண்ணா, ஜனனி அக்கா, அங்கிள் ஆண்டிட்ட சொல்லி, அந்த ஒரு மாசம் வர்ர பேப்பர் எல்லாம் பழைய பேப்பர்காரனிற்ற போடாம பாக்கசொல்லி இருந்தன். :D சரிசரி, இந்த மாதிரி பைத்தியத்தை இதுவரைக்கும் கண்டதில்லை எண்டு நீங்கள் நினைக்கிறது எனக்கு விழங்குது. நான் ஒருமாதிரியான ஆள்தான்! :)

இப்பவும் தினமும் ஹிண்டுல சென்னை/தமிழ்நாட்டு செய்திகள், லை·ப் , மெட்ரோ பிளஸ், சண்டே மகசீன், லிட்டரெரி ரெவ்யூ, ஓப்பன் பேஜ், எடுக்கேஷன், புக் ரெவ்யூ, சயண்டெக், எண்டர்டெயின்மெண்ட். முந்தி படிச்சு, இப்ப படிக்காத பக்கம் யங்வேல்ட் தான்.

ஆ.... முடிக்கிறதுக்கு முந்தி இன்னொண்டையும் சொல்லோணும். இவ்வளவு தூரம் அடிச்சுப்பிடிச்சு படிக்கிற ஹிண்டுவில ஒரே ஒரு விசயம் எப்பயோல இருந்து பிடிக்காது. என்னண்டு எங்கட ஊர்காரருக்கு தெரியும். எத்தனை நாள் இது பற்றி கதைச்சு, சீறியிருப்பம். ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி ஹிண்டுல வர்ர செய்திகளைத்தான் நான் சொல்லுறன். இந்த செய்திகளால், ஹிண்டுவின் மேல் இருக்கிற நம்பகத்தன்மை குறைஞ்சு, இண்டைக்கு அரசியல் பற்றி தெரியோணுமெண்டா 'நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்' எண்டு ஆகிப்போயிற்றுது. இதால ஹிண்டுவுக்கு ஒண்டும் நட்டமில்லைதான். ஆனால், இருநூற்றைம்பதாவது நிறைவு விழா கொண்டாடேக்க ஹிண்டு செய்த தவறுகள் எண்டு இதுவும் வரும். ஏன் இருநூறாவது ஆண்டுவிழா கொண்டாடேக்கையோ, நூற்றிஐம்பதாவது ஆண்டுவிழா கொண்டாடேக்கையோ கூட வரலாம்!!!

Comments on "My obsession with 'The Hindu'"

 

post a comment