Friday, October 10, 2003

பிரமாபுரம் ஏவிய பெம்மான் தரிசனம்

எங்கள் ஊரில் பள்ளிக்கூடத்தில் சமயமும் ஒரு பாடம். தேவாரங்களும், புராணக்கதைகளும் சொல்லித்தருவார்கள். கூடவே ஆறுமுக நாவலரது சைவசமய வினாவிடையும் இருக்கும். அதில் படித்த சிலது இன்னமும் ஞாபகம் இருக்கு. திருநீற்றை எப்படி பூசவேண்டும், கோவிலுக்கு போனதும் முதலில் யாரை வணங்க வேண்டும், எத்தனை தரம் கோவிலை வலம் வர வேண்டும் என்றெல்லாம் அதில்தான் படித்தேன்(படித்தோம்). உளவாரப்பணி பற்றியும் அப்பரின் தொண்டு பற்றியும் படித்ததும் இன்னமும் ஞாபகம் இருக்கிறது. வீட்டிற்கு அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் கூட்டத்துடன் சேர்ந்து உளவாரப்பணியாக புற்களை வெட்டியதும் (அதற்குப் பயன்படுத்தும் பொருளின் பெயர் மறந்து விட்டது. யாராவது உதவுவீர்களா?). இப்படியெல்லாம் படித்தாலும், எனக்கு வீட்டில் முதலில் சொல்லிக்கொடுத்தது திருஞானசம்பந்தரைப்பற்றித்தான். கதையே எங்களை முதலில் ஈர்த்தது. மூன்று வயது பையன் அழுததற்கு சிவபெருமான் வந்தது, அவன் தேவாரம் பாடியது என்று அதிசயிக்க பல விஷயங்கள் இருந்தன. முதன்முதலில் பாடிய தேவாரமும் 'தோடுடைய செவியன்'தான். அத்தோடு எங்கள் வீட்டிலும் ஊர்க்காரர்களுக்கு சீர்காழி கோவிந்தராஜனை மிகவும் பிடிக்கும். அவர் எங்கள் ஊர் கோவிலுக்கும் வந்திருக்கிறார்.
இப்படி எங்கெளுக்கெல்லாம் சீர்காழி (ஊரும், பாடகரும்) என்றாலே மிகவும் பிடிக்கும்.

இதுவரை கோயில் பிரயாணம் போகும்போதெல்லாம் சீர்காழி போகாமல் விட்டதில்லை. சிதம்பரம் சென்று விட்டு, அடுத்த கோவில் சீர்காழிதான். அமைதியான ஊரில் சாலைக்கு அருகிலேயே மிக உயர்ந்த மதிற்சுவர்களோடு தோணியப்பர் கோவில் இருந்தது. முதன்முதலில்தான் கோவிலைக்கண்டு பிடிப்பதற்கு சிரமப்பட்டு போனோம். இப்போதெல்லாம் தூக்கத்திலும் எப்படி போவதென்று வழி சொல்லுவோம். :)
முதன்முதலில் கோவிலுக்கு போனபோது நாங்கள் எல்லாரும் திருக்குளத்தைத் தான் ஆவலுடன் தேடினோம். அதன் படிகளில் நின்றுகொண்டு கோவில் எப்படித் தெரிகிறது என்று பார்த்தோம். நாங்கள் அப்போது அடைந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. பல வருடங்களாக எப்படி இருக்கும் என்று உருவகப்படுத்தி வந்ததை பார்த்தோம் நாங்கள். கோவிலைப் பார்த்து விட்டு குளத்தில் கால் கழுவலாம் என்று திரும்பிய எங்களுக்கு அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. என்னவென்று கேட்கிறீர்களா? அந்தக் குளத்தின் நிலைதான். ஊர்மக்கள் அனைவரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறது என்று புரிந்து கொண்டோம். (2000இல் சென்றபோது நிலமை இன்னமும் மோசமாக இருந்தது.)

ஒரு வழியாக கால் கழுவிக்கொண்டு, பிரம்ம புரீஸ்வரரைத் தரிசனம் செய்தோம். இந்தக்கோயிலுக்குள் சிவனுக்கு மூன்று பிரகாரங்கள் இருக்கின்றன. முதலில் பிரம்மபுரீஸ்வரன் சன்னிதிக்கு சென்றோம். பாடல் பெற்ற தலங்களுள் மிக அதிகமான பாடல்கள் இந்தக்கோவில் இறைவனுக்குத்தான் பாடியிருக்கிறார்கள். மொத்தம் எழுபத்தியரு தேவாரங்கள் கிடைத்திருக்கின்றதாம். சிவபெருமானின் அடுத்த பிரகாரத்தில் சிவனும் பார்வதியும் இருக்கிறார்கள். இது தோணி வடிவத்தால் ஆனது. தோணி வடிவத்தில் இருப்பதால்தான் தோணியப்பர் என்று சொன்னார்கள் என்றும் சிவபெருமான் ஒரு முறை அறுபத்திநான்று கலைகளையும் தோணியில் கொண்டு போய் காப்பாற்றினாராம். அதனால்தான் சீர்காழியையும் தோணிபுரம் என்று சொல்லுவார்களாம். அதேபோல பிரம்மபுரீஸ்வரர் என்று இறைவனுக்கும் பிரம்மபுரம் என்று ஊருக்கும் பெயர் வரக்காரணம் பிரம்மா இங்கு வந்து சிவனை வழிபட்டதாலாம். தோணியப்பரை வழிபட்டுவிட்டு மேலும் உயர செல்லும் படிக்கட்டுகளில் ஏறி சட்டநாதரையும் தரிசிக்கலாம். இங்கிருந்து கீழே பார்த்தால் கோவிலை நன்கு பார்க்கமுடியும், கோவில் குளமும் தெரியும். அமைதியாக இருக்கும் இந்தக்கோவிலில் கண்ணை மூடி நின்றால் 1000 வருடங்களுக்கு முந்தய காலத்துக்கு போய் விடுவோம் என்று நினைக்கிறேன்.

ஒரு முறை இக்கோவிலில் சட்டநாதரை தரிசித்துவிட்டு வரும்போது அருகில் இருக்கும் மண்டபத்தில் ஒரு துறவியை பார்த்தோம். ஆறேழு அடிகள் வளர்ந்த கூந்தல் அருகில் இருக்க அமர்ந்திருந்தார் அவர். அவரிடம் திருநீறு வாங்கியது எங்களுக்கு மிகவும் மனநிறைவைத் தந்தது. அப்போது இருந்த மனநிறைவும் நிம்மதியும் இப்போது கூட நினைவில் கொண்டு வரமுடிகிறது.

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதி சூடி
காடுடைய சுடலைப்பொடி பூசி யென்னுள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைனாட் பணிந்தேத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் ஏவிய பெம்மான் இவன் அன்றே


Comments on "பிரமாபுரம் ஏவிய பெம்மான் தரிசனம்"

 

post a comment