Tuesday, November 25, 2003

மஞ்சள் மகிமை


நான் சமைக்க வெளிக்கிட்டா குசினில கட்டாயம் இருக்கவேண்டிய சாமான் மஞ்சள்தூள். எங்கட ஊரில மஞ்சள்தூள் சமையலுக்கு பயன்படுத்துறவைதான் ஆனா, நானும் நீங்களும் பயன்படுத்துறமாதிரி இல்ல. மிளகாய்த்தூளில, மற்றது வெள்ளைக்கறிகளிலயும் பயன்படுத்துவினம். எங்கட ஊர் மிளகாய்த்தூளைப்பற்றி உங்களுக்குத்தெரியுமோ தெரியாது. மிளகாய், மல்லி எல்லாம் தனியத்தனிய அரைச்சு வைக்கிறதில்லை நாங்கள். ஊரிலயும் சென்னையிலயும் மிளகாய்த்தூளை மில்லில குடுத்து அரைப்பிப்பினம். எனக்குத்தெரிஞ்சு எங்கட ஊர்மிளகாய்த்தூளில, மிளகாய், மல்லி, பெருஞ்சீரகம், சின்னச்சீரகம், வெந்தயம், மஞ்சள் துண்டு, கொஞ்சம் அரிசி, கருவேப்பிலை எல்லாம் வறுத்து சேர்ப்பினம். கனடாவிலயும், இங்கிலாந்து, ஜேர்மனி, அமெரிக்காவிலயும் மிளகாய்த்தூளை கடையில வாங்கலாம். அதிலயும் நிறைய பிராண்ட் இருக்கு. 'நிரு' எண்ட பிராண்ட்தான் நல்லமெண்டு ஆக்கள் சொல்லீனம். நீங்க வீட்டுக்கு வந்தாலும் அந்த மிளகாய்த்தூளிலதான் கறிகாய்ச்சித்தரப்படும். :)

சரி மஞ்சள்தூளைப்பற்றித்தான் கதைக்கவந்தனான் நான். மஞ்சள்தூளை நான் பயன்படுத்துறமாதிரிதான் பெங்காலிகளும் எல்லாக்கறிகளுக்குள்ளயும் போடுறவை. என்ர ரூம்-மேட் ஒரு ஆள் பெங்காலி எண்டபடியா, எங்களுக்குள்ள பிரச்சினையே இல்ல. இப்பித்தான் ஒரு நாள் நான் சைனா-டவுனுக்குப் போயிருக்கேக்க அங்கயிருந்த தாய்லாந்துக்காரரின்ற கடையில அம்மா பயன்படுத்துறமாதிரி ஒரு வஸ்துவைக்கண்டன். எடுத்து மணந்து பார்த்தா, அதே கஸ்தூரி மஞ்சள் வாசம். கடைக்காரி என்னைப்பார்த்து சிரிக்கிறா. என்ன இது எண்டு கேட்டா. மஞ்சள்தானாம். பெயர் Kha-min. 'தாய்' கறிகளில உடன அரைச்சுப்போடுறவையாம். தாய் சிக்கன் கறி சாப்பிட்டு இருப்பீங்க. நான் பேஸ்ட்-தான் வாங்கிறனான். சிவப்பு பேஸ்ட். அதில மஞ்சள் பேஸ்டும், பச்சை பேஸ்டும் இருக்கு. சிவப்புத்தான் உள்ளதுக்குள்ள உறைப்புக் கூடினது.


நீங்க வியன்நாமீஸ் உணவுக்கடைகளில் சாப்பிட்டிருக்கிறீங்களா? அவர்களுடைய Pho சூப்பிற்கு அடிமை நான். அதிலும் நம்முடைய மஞ்சள் அரைக்கப்பட்டு சேர்க்கப்படுகிறது. மஞ்சள்கிழங்கு கிடைக்கவில்லை என்றால் மஞ்சள்பொடியைச் சேர்ப்பார்கள். அவர்கள் மஞ்சள்கிழங்கை Cu nghe, மஞ்சள்தூளை Bot nghe என்று சொல்வார்கள்.

சீன உணவு இருக்கிறதே அதில் சில சூப்புகளிலும் அரிசியிலும் மஞ்சள்தூள் சேர்க்கிறார்கள். மஞ்சள் இந்தியாவைச்சேர்ந்தது என்றாலும் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு மார்க்கோபோலோ சீனா சென்றபோது அங்கே மஞ்சள் பயன்படுத்துவதைக்கண்டு, குங்குமப்பூவிற்கு பதிலாகப்பயன்படுத்துக்கூடியது என்று சொல்லி இருக்கிறார். சீனமருத்துவத்திலும் Wong Geung பயன்படுத்தப்படுகிறது.

இதேபோல மத்தியகிழக்கு நாடுகள், எதியோப்பியா எங்கும் பலநூறு ஆண்டுகளாக மஞ்சள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கெல்லாம் தென்கிழக்காசிய நாடுகளைப்போல மஞ்சள் கலந்த அரிசி மங்கலப்பொருளாகக் கருதப்படுகிறது.

நம்மட ஊர்ல மஞ்சள் வேறென்னத்துக்கு பயன்படுத்தீனம்? மஞ்சள்தூளைக் நிறையத்தண்ணீரில் கலந்து வீடுகளில் தெளிப்பதைப் பார்த்திருக்கிறேன். பெண்கள் அழகுக்காக பயன்படுத்துகிறார்கள். முன்பு கஸ்தூரிமஞ்சள், பிறகு விக்கோ டெர்மரிக் கிரீம் (இப்பவுமா? இல்லையெண்டுதான் நினைக்கிறன்.) தலையிடி காய்ச்சலெண்டா பாலில விட்டுத்தருவினம். அதே விஷயத்துக்கு சுடுதண்ணீல மஞ்சள்தூளைப்போட்டு வேதுவிடச்சொல்லுவினம். இப்படி சங்கிலித்தொடராய் நிறைய சொல்லியண்டுபோகலாம்.

மார்க்கோபோலோ மஞ்சள்மகிமை பற்றி எழுதி ஏறக்குறைய எண்ணூறு வருஷம் கழிச்சுத்தான் விஞ்ஞானிகள் மஞ்சளின்ற மருத்துவ குணங்களை ஆராயீனம். ஆர்த்தரைடிஸ் இருக்கிற ஆக்களுக்கு நோக்குறைச்சு, வீக்கத்தைக்குறைக்கிறதுக்கு மஞ்சளில் இருக்கிற வேதியல் பொருள் உதவி செய்யுதாம். Curcumin என்ற அந்த வேதியல் பொருளின் பெயர் ஐரோப்பிய நாடுகளில் மஞ்சளைப்பற்றிச் சொல்லும் பெயரை ஒத்து இருக்கிறது. Curcuminதான் மஞ்சளுக்கு அந்த நிறத்தை அளிக்கிறது.

மேலும் ஆராய்ச்சியில் Curcumin கான்சர் செல்களை தந்திரமாக அளித்துவிடுவதைக்கண்டு பிடித்திருக்கிறார்கள். அப்படி செய்யப்பட்ட ஒரு சோதனையில் வாயில் கான்சர் வந்தவர்களுக்கு ஒன்பதுமாதத்தில் புண்கள் எல்லாம் ஆறிவிட்டதை நிரூபித்திருக்கிறார்கள்.

இங்கிலாந்துப்பத்திரிகைகள் அவ்வப்போது "Curry: The New Wonder Drug" என்று எழுதிவருகிறார்கள். அடுத்தமுறை சமைக்கும்போது கொஞ்சம் கூட மஞ்சளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.

வரட்டா....

Comments on "மஞ்சள் மகிமை"

 

post a comment