Wednesday, November 19, 2003

கர்ணன் பேசுகிறேன்



மாதவன் தந்த வரத்தால்
ஆதவனை அழைத்தாய்
சூதறியா நாளில்.. இந்தப்
பாதகனை படைத்தாய்

சொல் தாயே
பெற்றதன் பாவம் ஆற்றில்
விட்டதும் போகும் என்று
சொன்னது யார்

அன்பை காணும் வகையற்று
பண்பில் வாழும் நிலைவிட்டு
ஆற்றில் மனம் ஆறும் என்றா
என்னை துரத்தி வைத்தாய்

சொல் தாயே
உணர்ச்சிகள் மறைத்து வாழ்ந்தால்
உலகம் உய்யும் என்று
சொன்னது யார்

கனவுகளில் உனைத் தேடி
நினைவுகளில் நிதம் எனைத் தேடி
தொலைந்த மனமும் கலைந்த கனவும்
என் வாழ்வின் அடையாளம் என்றாய்

சொல் தாயே
இருக்கும் நேரம் மறந்தாய்
இறக்கும் நேரமேனும்
அடையாளம் தர வருவாயா

-----------------

இன்று மரத்தடியில் ஐயப்பன் எழுதிய கவிதை இது. தொடர்ந்து நடந்த விவாதத்தின்போது ஹரி கிருஷ்ணன் அவர்கள், மகாபாரதத்தில் கர்ணனைப்பிடிக்கும் என்று சொன்னவர்களிடம் ஏன் என்று சொல்லமுடியுமா என்று கேட்டார்.

நான் சொன்னது
கர்ணனை எதுக்காகவெல்லாம் பிடிக்கிறது?

ஆரம்பிக்கிறதுக்கு முதல் ஒன்றைச்சொல்லோணும். சின்னவயதில் பார்த்து, பிறகு அடிக்கடி பார்க்கும்(டேப் தேய்ந்துப்போகும் அளவுக்கு) 'கர்ணன்' படந்தான் கர்ணனை பிடிச்சுப்போக காரணம். அதுவும், குந்தி வந்து கூப்பிடும்போது போகாத கர்ணனும், கடைசியில் கண்ணன் வந்துகேட்கும்போது இல்லையென்று சொல்லக்கூடாது என்பதற்காக, தன்னுடைய தானதர்ம புண்ணியங்களைக் கொடுக்கும் கர்ணன். இதுக்காகவே அர்ச்சுனனைப் பிடிக்காமப்போச்சு.

இராமாயணம்பத்தி தெரிஞ்சுக்கறதுக்கு, சக்கரவர்த்தித்திருமகன் கிடைச்சாமாதிரி, மகாபாரதத்திற்கும் ஒரு புத்தகம் கிடைத்தது. பெயர் மறந்துபோய்விட்டது.

1. அம்மா செஞ்ச தப்புக்கு பிறந்த உடனேயே தண்டனை அனுபவிக்கும் குழந்தை.

2. தேரோட்டி வீட்டில் வளர்ந்தாலும், முன்னேறத்துடிக்கும் குணம்.

3. ஒரு முறை துரோணரிடம் சீடனாக வரக்கேட்டு அவர் மறுத்தமாதிரி ஞாபகம். (நினைவில் இருந்து சொல்வதால், everything is quite hazy :( )

4. எப்படியோ வில்வித்தை, இத்யாதி கற்று, போட்டியில் கலந்துகொள்ளமுடியாமல் இருந்து, கடைசியில் கிடைத்த சந்தர்ப்பத்தை பற்றிக்கொண்டவிதம்.

5. அங்கே அவமானப்பட்டு, போட்டியில் கலந்துகொள்ளமுடியாமல்போக இருக்கும்போது, தன் லாபத்துக்காக கர்ணனை மன்னனாக்கும் துரியோதனனுக்கு நன்றி மறவாதிருத்தல். இங்கே கொஞ்சம்/நிறையவே இடிப்பது. நண்பனுக்கு ஏன் அறிவுரை சொல்லவில்லை என்பது. சிலசமயம் எனக்குநானே சொல்லிக்கொள்வது -
தேரோட்டிமகனான தனக்கு அரசர் பதவி கொடுத்த நண்பனுக்கு அறிவுரை சொல்வதா என்று கர்ணன் எண்ணியிருக்கலாம் என்பது.

6. துரியோதனன் உதவியால் அரசனானாலும் பெரியவர்களால் அவ்வப்போது அவமானப்படுத்தப்படும் கர்ணன் - வெளிப்படையாக இல்லாவிட்டாலும், மேலோட்டமாகவாவது அவமானப்படுத்தப்பட்டிருக்கிறான். அதனால்தான், பீஷ்மர் வீழ்ந்தபின்னரே களத்தில் இறங்குவேன் என்று சூழுரைத்தான். அதே கர்ணன், பீஷ்
மரை அம்புப்படுக்கையில் இருக்கும்போது சென்று சந்திக்கிறான் (உபயம்: மகாபாரதா
தொலைக்காட்சித் தொடர்)

7. எல்லாவற்றிற்கும் மேலாக, குந்தி வந்து அழைத்தபோது செல்லமறுத்து, தோற்போம் என்பது தெரிந்தே நண்பனுக்குத் துணையாக நின்றது. இது ரொம்ப ரொம்ப பிடித்த விஷயம்.

இன்னொன்று: எல்லாரும் என்னை ரவுண்டு கட்டி அடிக்கலாம். ஆனால், கர்ணன் என்று நினைத்தால் சிவாஜிமுகத்துடனே ஒரு பிம்பம் வருகிறது.


Comments on "கர்ணன் பேசுகிறேன்"

 

post a comment