Sunday, November 30, 2003

Poutine


இன்றைக்கு இங்கே பனி பெய்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு அதிகாலையில் லேசாகத்தூவியிருந்ததைத்தான் இந்த வருடத்தின் முதல் பனியாகக் கொள்ளலாமென்றாலும், இன்றுதான் தொடர்ந்து காலையிலிருந்து பின்னேரம்வரை பொழிந்தது. கூடவே வேகமான காற்றும். இதனால் ஏறக்குறைய முகத்திலே வந்து ஊசிமுள்ளாய்க் குத்தியது.

இனிமேல் சந்திரனுக்குப் போவதுபோல் உடை உடுத்தவேண்டும். குறைந்தது மூன்று உடுப்புகளாவது மாட்டிக்கொண்டு மேலே பனிக்கால மேலங்கி அணிந்துகொள்ளவேண்டும். கைக்கு கிளவுஸ், தலைக்குத் தொப்பி, கழுத்துக்கு ஸ்கார்·ப் என்று அணிந்ததுபோக காலுக்கு பனிக்கால சப்பாத்தும் தேவை.

இதோடு சுவாரசியமான விஷயம் புட்டின் (Poutine). கியூபெக் மாகாணத்து உணவான இது இப்போது கனடா முழுவதும் பரவலாகக் கிடைக்கிறது. அமெரிக்காவிலும் கிழக்குக்கரையோர நகரங்களில் கிடைப்பதாக சொல்கிறார்கள். பிரெஞ்ச் ·ப்ரைஸ் (Freedom Fries? :p) உருளைக்கிழங்கு வறுவல், அதற்கு மேலே அன்றோ, முதல்நாளோ தயாரான Cheddar Cheese Curds அவற்றுக்கு மேலே சுடச்சுட ஊற்றப்பட்ட கிரேவி. உருளை வறுவலும், கிரேவியும் சூடாக இருப்பதால் இடையில் இருக்கும் சீஸ் கொஞ்சம் உருகி உருளைக்கிழங்கில் ஒட்டிக்கொள்கிறது.

Poutine

பனிக்காலத்திற்கு நல்ல உணவாகக்கருதுகிறார்கள் இதை. ஏதோ காலகாலமாக இந்த ஊர்க்காரர்கள் உண்டுவந்த உணவு என்று நினைக்காதீர்கள். சில வருடங்களுக்கு முன்புதான் நாற்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறது புட்டின். 1957 வாக்கில் கியூபெக் மாகாணத்தில் வார்விக் நகரத்தில் Fernand Lachance என்பவரால் உருவாக்கப்பட்டது. இவர் என்னமோ அவருடைய சமையலறையில் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கவில்லை. ஒரு நாள் இவருடைய உணவகத்துக்கு வந்த ஒரு ஆள், உருளை வறுவலையும் சீஸையும் ஒரே பையில் போட்டுத்தரும்படி கேட்டிருக்கிறார். இப்போது எண்பத்திமூன்று ஆகும் Fernand Lachanceம் முனகிக்கொண்டே செய்து கொடுத்தாராம். சில நாட்களிலேயே, பிரபலமாகிவிட்ட புட்டினுக்கு Fernand Lachanceஇன் மனைவி கொஞ்சம் காரமான சாஸ் செய்து தனியாகக்கொடுத்தாராம். இதை 65 சதத்திற்கு விற்ற Fernand Lachance தன் உணவகத்தில் புட்டினை உண்பவர்களால் தான் நிறையவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது என்று சொல்கிறார். வேறென்ன சுத்தப்படுத்தும் வேலைதான்.

La Belle Province, Montreal

இப்போது புட்டின் இரண்டு வகைகளில் கிடைக்கிறதான் இத்தாலியன் புட்டின் என்று சொல்லி ஸ்பாகட்டி சாஸ¤டன் உருளை வறுவல், சீஸ் சேர்த்துக்கொடுக்கிறார்களாம். நான் உண்டது என்னவோ Fernand Lachance உருவாக்கிய புட்டின்தான். செமிப்பதற்குப் பலமணிநேரம் எடுக்கும் இந்த உணவை பனிநாட்களில் சாப்பிட்டால்தான் சரிவரும். மேலும் நான் இங்கு கண்ட இன்னொரு விஷயம். பனிநாட்களில் பலரும் சின்னச்சின்ன பைகளில் சீஸ் துண்டங்களை வைத்து சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். La Belle Provinceஇல்தான் மான்ரியலில் நல்ல புட்டின் கிடைக்குமென்றாலும் மாக்டொனால்ட், பர்கர் கிங் போன்ற இடங்களிலும் கிடைக்குமென்று அறிகிறேன்.

Comments on "Poutine"

 

post a comment