Tuesday, December 02, 2003

Taarof


நாம யாராவது லேசாத்தெரிஞ்சவங்களை எங்கையாவது பார்த்த என்ன செய்வோம்? 'நீங்க ஒரு நாள் கட்டாயம் எங்க வீட்டுக்கு வரணும்'னு உபசாரமா சொல்லுவோம். அவங்களும் பதில் உபசாரமா, 'கட்டாயம்'னு' சொல்லுவாங்க.

ஒருத்தங்க வீட்டுக்கு வந்திருக்காங்க. 'வாங்க. வாங்க. வந்து சாப்பிடுங்க'னு சொல்லுவீங்க. அவங்களும் வேணாம்னு சொல்லி நீங்க, கொஞ்சம் அவங்ககிட்ட பேசி, அப்புறம் அவங்க சாப்பிட வருவாங்க. அப்படி சாப்பிட ஒக்காந்தவங்ககிட்ட, அவங்க வேணாம்னு சொன்னாலும் சாப்பாடு தட்டுல போட்டுக்கிட்டு இருப்போம். அவங்க ரொம்ப வற்புறுத்தி வேணாம்னு சொன்னாத்தான் விடுவோம்.

பக்கத்துவீட்டு அம்மா வந்து ஒங்ககிட்ட(/ஒங்க வீட்டம்மா கிட்ட), அவங்க புதுசா வாங்கியிருக்கிற பொடவை எப்படி இருக்கு. எங்கயோ போகணும். புடவை எப்படி இருக்கு அவங்களுக்கு'னு கொஞ்சம் சந்தேகமா இருக்கு. நீங்க சொல்றதை வச்சுத்தான் வேற உடுத்திக்கறதா இல்லையான்னு முடிவு செய்யப்போவதா சொல்லுறாங்க. அந்தம்மாவை உங்களுக்கு நல்லாத்தெரிஞ்சிருந்தா உங்களோட உண்மையான கருத்தைத் தெரிவிப்பீங்க. அவங்களை உங்களுக்கு அவ்வளவாத் தெரியலைன்னா என்ன சொல்லுவீங்க? நல்லா இருக்குன்னுதானே!

நாம மட்டும் இப்படி நடந்துக்கிறது இல்லை. பெரும்பாலான ஆசியர்களும் இப்படித்தான் நடந்துகொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால், இப்போது வாசிக்கும் ஒரு புத்தகத்தில் கண்ட குறிப்பு:

Being polite is often better than telling the truth.

ஈரானியர்களிடையே இப்படி உபசாரமாகப்பேசுவது மிகவும் புழக்கத்தில் இருக்கிறது. ஒரு முறை ஒரு அமெரிக்கப் பெண்மணி, டெகரானுக்கு முதன்முறையா வருகிறார். வரும்வழியில் எகிப்தில் ஈரானில் அணிவதற்கென பிரத்தியேகமாக உடைகள் தைத்துக்கொண்டு வருகிறார். ஈரான் நாட்டுப்பெண்கள்கூட அப்படி உடை அணிவதில்லை. வந்து சில நாட்களிலேயே ஒரு விருந்தில் கலந்துகொண்டவரின் உடையை, இந்த எழுத்தாளரின் ஈரான் நாட்டுத்தோழி பாராட்டி இருக்கிறார். தானும் அப்படி ஒரு உடை தைத்துக்கொள்ளப்போவதாக சொல்லி இருக்கிறார். பிறகு நம்முடைய எழுத்தாளர் அவரிடம் விசாரித்தபோது, அப்படித்தான் உடுத்தப்போவதில்லை என்று பதில் வந்திருக்கிறது. கூடவே அது யாருக்கும் மனவருத்தம் கொடுக்கவில்லை. என்னுடைய அம்மா உயிரோடு இருந்திருந்தால், என்னைப்பாராட்டி இருப்பார். பொதுவாக நான் Taarof செய்வதில்லை. உண்மை பேசுகிறேன் என்று திட்டிக்கொண்டே இருப்பார் என்று பதில் வருகிறது.

நானும் அந்தப்பெண்மணி அவரின் அம்மாவிடம் திட்டு வாங்கியதுபோல வாங்கியிருக்கிறேன். அதுவும் வாங்கிய திட்டு, கொஞ்ச நாட்களிலேயே மறந்துபோய் மறுபடியும் என்னை யாராவது ஏதாவது அபிப்ராயம் சொல்லச் சொன்னால், உண்மை சொல்லி... சங்கிலித்தொடர்போல நிகழ்வுகள் தொடர்ந்திருக்கின்றன. அதே நேரத்தில் நானும் Taarof செய்திருக்கிறேன்.

நீங்கள்?

Comments on "Taarof"

 

post a comment