வேம்படி மகளிர் கல்லூரி விடுதி - 1
நகரின் மையப்பகுதியில் அமைதியான சிறிய வீதியில் இரண்டு பக்கமும் மரங்கள் நிற்க, பழையதும் புதியதுமாக வீடுகள். அந்தத் தெருவில் நுழைந்து கொஞ்சத் தூரம் நடந்தால் உயரமான சுவர்களோடு ஒரு பெரிய கேற். கேற்றின் மேலே இரும்புக்கம்பிகள் கொண்டு நிர்மாணித்த வளைவில் அந்தப்பள்ளியின் பெயர். 'வேம்படி மகளிர் கல்லூரி'. பெயர்தான் கல்லூரியே தவிர, அது ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்புவரை பெண்கள் படிக்கும் பள்ளியே. வெள்ளை நிற சீருடையும் மஞ்சளும் கரும்பச்சையுமாக (சரியான கலர்தானா?) எலாஸ்டிக் பாண்ட் வைத்த டை. மரங்களும் பழைய புதிய கட்டிடங்களுமாகத் தெரிகிறது. பள்ளிக்குள் இன்னொரு நாள் போவோம். இப்போது கேற்றின் வலதுறம் இருக்கும் கட்டிடத்துக்குள் நுழைவோம். வாசலில் பூச்செடிகள் இருக்கின்றன. உள்ளே நுழையும் முன்பே இருக்கும் சின்ன வெராண்டாவில் வலது ஓரம் ஒரு சின்ன அறை இருக்கிறது. மாணவிகளுக்கான பல் மருத்துவர் அங்குதான் இருக்கிறார். நேர் முன்னே, விருந்தினருக்கான அறை. இங்கொருவரும் அங்கொருவருமாக உறவினர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் மாணவிகள். அதோ, வாசலில் இருந்து பார்த்தாலே தெரியக்கூடியமாதிரி மேஜை நாற்காலி போட்டு கனகம்பீரமாக உட்கார்ந்து இருப்பது யார்? வார்டனா? அந்த மேஜைக்குப்போய் பார்த்தால் இரண்டு புறமும் வெராண்டா விரிகிறது. மாணவிகளுக்கு மட்டுமே அனுமதி. வலப்புறம் திரும்பி நடந்தால், பெரிய டைனிங் ஹால். ஒவ்வொரு மேஜையிலும் சிறிய பூச்சாடிகள். பெரும்பாலான பூச்சாடிகளில் புற்களும், சில பூக்களும் தெரிகின்றன. ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு மேஜை. ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு ஆள் பூச்சாடியை அழகு படுத்தவேண்டும். மேஜையையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். காலை நேரத்தில் பனித்துளிகள் அலங்கரிக்க நிற்கும் புற்களையும், weedகளையும் கொண்டுவந்து அலங்கரிப்பது, இப்போது நினைத்துப்பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. ஒரு மேஜையில் தட்டுகள் இருக்கின்றன. என்னுடைய எவர்சில்வர் தட்டில் என்னுடைய பெயர் பொழிந்திருக்கிறது. மற்ற மேசையில் தேத்தண்ணிக்காக கப்புகள் இருக்கின்றன. காலையில் தேத்தண்ணி கிடைக்கும். இரவே காலமைத் தேத்தண்ணிக்கு கப்பும் சாப்பாட்டிற்குப் பிளேட்டும் வைக்கோணும். காலமையும் இரவும் சாப்பிடுறதுக்கு முதல் தேவாரம் பாடோணும். என்ன மாதிரி சாப்பாடு எண்டு கேக்காதீங்க. புட்டு தர்ர நாட்களில் அதை கையில் வைத்து பிளேட்டின் அடிப்பக்கம் ஒட்டிக்கொண்டு சிலர் போய்விடுவார்கள். சில அம்பிட்டிருவினம். அம்பிட்டா, அங்கயே நிண்டு சாப்பிட்டு முடிக்கவேண்டும். ஒருக்கா அம்பிட்டபிறகு, தலைகீழா நிண்டாவது சாப்பிட்டு முடிச்சிருவன். சினேகிதிகள், யார் வீட்டில இருந்தாவது ஆக்கள் வந்தா இரவுக்கும் சாப்பாடு கொண்டு வருவினம். என்ர வகுப்பில இரண்டு கசின்கள் இருந்தவை. சுமதியின்ற அக்காவும் எங்களோட ஹொஸ்டலில் இருந்தவ. அதைவிட, மைதிலி எண்ட இன்னொரு அக்காவும். இந்த நாலு பேர் வீட்டில இருந்து யாராவது வந்தா, எங்களுக்கு கொண்டாட்டம். வார்டன் அம்மா வந்திர்ந்தா, நீட்டி முழக்கி 'சந்ந்ந்ந்ந்ந்திரமதீஈஈஈ' எண்டு கத்தேக்கையே மேசையில் இருக்கிற பிளேட்டை அலுமாரிக்கு எடுத்து வைக்க ஆள் போயிரும். (தொடரும்) |
Comments on "வேம்படி மகளிர் கல்லூரி விடுதி - 1"