வேம்படி மகளிர் கல்லூரி விடுதி - 5
ஆரம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை பின்னேரமே ஹாஸ்டல் திரும்பிய நான், பலர் திங்கள் அதிகாலையில் பள்ளிச் சீருடையுடனும் துணிமூட்டையுடனும் வருவதைக் கவணித்தேன். அதற்குப் பிறகு நாங்களும் திங்கள் அதிகாலையிலேயே ஹாஸ்டலுக்குத் திரும்பிப் போகத்தொடங்கினோம். அந்த அதிகாலை வேளைகளும் ரம்யமானவை. அப்போது சிறை செல்லுவதுபோல உணர்ந்தாலும், மனதின் ஓரத்தில் பதிந்துபோன விஷயங்களை அவ்வப்போது அசைப்போட்டிருக்கிறேன். வானுக்காக காத்திருக்கும் பொழுதுகள். 'வெள்ளைச் சட்டையில் ஊத்தைப் பிரட்டாதே. தோளை நிமிர்த்தாதே, தலையைக் குனி, நேருக்கு நேர் பார்க்காதே' என்று ஒரே *தே தே தே* என்று ஒலிக்கும் அம்மாவின் குரல், ஊரே அமைதியாக இருப்பது. வீட்டிற்கு எதிர் முனையில் இருக்கும் மீனாட்சியின் (அவவின்ற பெயர் கள்ளுக் கடை மீனாட்சியாம், பிறகுதான் அவவின்ற பட்டப்பெயரை அம்மம்மா சொன்னவ.) வேலியில் இருந்த பூவரசன் இலைகளை பிய்த்து விசில் ஊதியது. ஊதியிருக்கிறீர்களா? காம்புடன் இலையைப் பிய்க்கவேண்டும். இலையை நன்கு துடைத்துவிட்டு - ஊத்தை பிரட்டாதே! - நுனியை கொஞ்சமாக மடிக்கவேண்டும். பிறகு இலையை உடைக்காமல், பிய்க்காமல் சுருட்டவேண்டும். நல்லா இறுக்கிச் சுருட்டினா ஊதுப்படாது. கொஞ்சம் விட்டுச் சுருட்டவேண்டும். சுருட்டின பிறகு ஓரத்தை மடிக்கவேண்டும். மடிச்ச பக்கத்தில ஊதினா, 'ப்ப்பீஈஈஈஈப்,' 'பீயீஈஈப்' என்று ஓசை வரும். பல திங்கட்கிழமை காலை வேளையில் என்னுடைய 'ப்பீஈஈஈப்' ஐக்கேட்டு ஆடுகளும் கோழிகளும் அலறி அடித்து ஓடிப்போயிருக்கின்றன. தங்களுக்குள் என்னைத் திட்டித் தீர்த்திருக்கலாம். யாருக்குத் தெரியும்? |
Comments on "வேம்படி மகளிர் கல்லூரி விடுதி - 5"