Saturday, January 24, 2004

வேம்படி மகளிர் கல்லூரி/விடுதி - 9


ஒவ்வொரு நாள் காலையிலும் தேவாரம் ஒன்று பாடி, தலமையாசிரியரின் உரையையும் வேறு யாராவது ஆசியர்கள் பேசுவதையும் கேட்போம். சிலபோது, வெளியில் இருந்து யாராவது விருந்தினர்கள் வந்து பேசியறுப்பார்கள். சுருக்கமாக முப்பது நிமிடங்களில் முடிந்துபோகும் இந்தக் காலை நிகழ்ச்சி பிறகுபிறகு நாற்பந்தைந்து நிமிடம் நீட்டிக்கப்பட்டது (சரியாக ஞாபகம் இல்லை.). முப்பது நிமிடம் ஆடாமல் அசையாமல் நிற்பதற்கு நாங்கள் அலுத்துக்கொண்டிருக்கும்போது ஒரு நாள் தலமையாசிரியர் அடுத்த வாரத்திலிருந்து 'கோளறுபதிகம்' பாடப்படும் என்று சொல்லிவிட்டார். வெள்ளிக்கிழமைகளில்தான் காலைக்கூட்டம் முடிந்ததும் முதல்வகுப்பு சமைய வகுப்பாக தேவாரம் கற்றுக்கொள்ளும் வகுப்பாக இருந்தது. மற்ற மதத்தை சார்ந்த தோழிகள் அவரவர் வகுப்புகளுக்கு செல்வார்கள். கோளறுபதிகம் தினமும் பாடும்போது அவர்களும் எங்களுடன் இருந்தார்களா? இல்லை, பிறகு தலைமையாசிரியர் உரை மற்றும் அறிவிப்புகளுக்கு வந்து சேர்ந்தார்களா என்பது நினைவில் இல்லை.

திருஞான சம்பந்தரைப்பற்றியும் திருநாவுக்கரசரைப்பற்றியும் முதலிலேயே தெரிந்திருந்தாலும், இன்றும் மனதில் தேய்ந்த கிராம·போன் இசைத்தட்டுமாதிரி ஓடிக்கொண்டிருப்பது என்னுடைய தலைமை ஆசிரியர் (பெயர் கூட எனக்கு ஞாபகமில்லை. அம்மாவுக்கு ஞாபகம் இருக்கலாம். துரையப்பா என்ற பெயர் ஏனோ மனதில் ஒலிக்கிறது. சரி விடுங்கள். பெயரைத் தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்?) திருஞானசம்பந்தர் என்ன சூழ்நிலையில் அந்தப்பதிகத்தைப் பாடினார் என்றும், அவரே வாயெடுத்து நாட்களைப்பட்டியலிட்டும், 'நாளென் செயும் கோளென் செயும்' என்றெல்லாம் பாடியது நினைவிலாடுகிறது. பிறகு ஒவ்வொரு நாளும் கோளறுபதிகம் பாடினோம்.

Comments on "வேம்படி மகளிர் கல்லூரி/விடுதி - 9"

 

post a comment