Wednesday, January 21, 2004

வேம்படி மகளிர் கல்லூரி/விடுதி - 8


வலப்பக்க மூலையில் ஒரு பெரிய உயர்ந்த கட்டடம். மிகவும் பழமையானது. சென்னையில் ஆங்கிலேயர் காலத்துக் கட்டிடங்களைப்பார்க்கும்போதெல்லாம் எனக்கு இந்தக்கட்டிடமே நினைவிலாடும். என்னுடைய பள்ளிக்கூடம் இப்போது எப்படியிருக்கிறது என்று தெரியாது. ஆனால், நிச்சயம் இந்தக்கட்டடம் இல்லையென்றே நினைக்கிறேன். இந்தக்கட்டடந்தான் பள்ளியிலேயே எனக்கு மிகவும் பிடித்த இடம். ஆறாம் வகுப்பில் வேம்படியில் வந்து சேர்ந்தபோது, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட முதல் வகுப்பு அறை இந்தக்கட்டடத்தில் மாடியிலேயே இருந்தது. பயந்து பயந்துதான் ஏறுவோம். மரத்தால் கட்டப்படாத கட்டடமென்றாலும், நாங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அந்தக்கட்டடம் அசைவதாகத் தோன்றும் எனக்கு. அதுவும் யாராவது தடதடவென்று ஏறினாலோ, இறங்கினாலோ என்னுடைய இருதயம் அடித்துக்கொள்ளும் வேகமே வேகம். ஒரு நாளில்லை ஒரு நாள் தலையில் கொட்டப்போகிறது என்று நினைத்துக்கொள்வேன். கான்கிரீட்டால் கட்டப்படவில்லை என்றே நினைக்கிறேன். மாடியில் மூன்று வகுப்புகள் இருந்தன. இங்கேதான் அடிமட்டம் (அதாங்க ஸ்கேல், ரூலர்) பயன்படுத்தி அளக்கவும், பாகைமானி, என்றெல்லாம் கற்றுக்கொண்டேன்.

மாடிக்குப் போகும் வாசலுக்கு நேரெதிரான பக்கத்தில், பின்புறம் திறந்த வாசல். அதனூடாக உள்நுழைந்தால் இரண்டு பெரிய வகுப்புகள். இங்கு இரண்டொரு மாதங்கள் படித்தேன். உயர்ந்த சுவர்களுடன் ஒரு பழமை வாசனையும் உணர்வும் வீசிக்கொண்டே இருக்கும். ஏதாவது மணம் இருந்ததா என்று யோசிக்காதீர்கள். பழமையான கட்டடம் என்பதை மறக்கமாட்டோம் என்று சொன்னேன். பிறகு யாழ்ப்பாணத்திலும் சுத்திமுத்தி இருக்கும் இடங்களிலும் குண்டு போடத்தொடங்கியதும், மாடியில் வகுப்புகள் நடத்தப்படவில்லை. கீழேயும் பிறகு பிறகு வகுப்புகள் நடத்தப்படாமல் இருந்திருக்கலாம். ஞாபகமில்லை. மேலும் கீழும் வகுப்பறைகள் இருக்க, கட்டடத்தில் சாலைக்கு முதுகைக்காட்டிக்கொண்டு, புல் மண்டிக்கிடக்கும் விளையாட்டுத்திடலை பார்த்துக்கொண்டு ஒரு கல்லால் கட்டப்பட்ட ஒரு காலரி இருக்கும்.

இந்த காலரியில்தான் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடமே வந்து கூடும். கீழே மாணவிகள் வரிசையாக வந்து ஒவ்வொரு வகுப்பும் ஒரு நேர் வரிசையில் நிற்பார்கள். பக்கத்துப்பக்கத்து வகுப்பு மாணவிகள்தான் அருகில் நிற்பதால் அதிகம் பேச்சுத் சத்தம் இருக்காது. அதிகம் என்றுதான் சொன்னேன். :) பெண்மணிகள் என்று சும்மாவா சொன்னார்கள். நான் வேம்படியில் படித்தபோது இருந்த தலமையாசிரியை உருவத்தில் சிறியவர், தலைமுடி தும்பைப்பூ போன்று இருக்கும். அதிர்ந்து பேசமாட்டார். ஆனால், அவர் பேசத்தொடங்கினால், கூட்டமே கேட்கும். விளையாட்டுத் திடலில் ஒரு மூலையில்தான் அவருடைய வீடும் இருந்தது. சாதாரணமாக தலமையாசிரியரும், அவருடைய கணவரும் அவர்களின் நாயும் குடியிருக்கும் அந்த வீட்டிற்கு, தலைமையாசிரியரின் ஒரே மகன் எங்கிருந்தோ வந்து தங்கும்போது விடுதியே சலசலக்கும். இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்திருந்தால், நானும் சேர்ந்து சலசலத்திருக்கலாம். யார் கண்டது!

Comments on "வேம்படி மகளிர் கல்லூரி/விடுதி - 8"

 

post a comment