வெள்ளாவி - ஒரு வாசிப்பனுபவம்
வெள்ளாவி நாவலில் வரும் ஒரு பகுதியை முந்தைய பதிவில் கொடுத்திருக்கிறேன். இலங்கை, மட்டக்களப்புத் தமிழில் எழுதப் பட்டிருக்கும் இந்நாவல் வண்ணார் சமூகத்தை மையமாக வைத்து எழுதப் பட்டிருக்கிறது. இச்சமூகத்தைப் பற்றியோ வேறு சில சமூகங்களைப் பற்றியோ விரிவாக ஆராய்ந்து கூட இந்நாவலையும் ஆராய்ந்து விவரித்து எழுதும் சூழ்நிலை இப்போது இல்லையென்று நினைக்கிறேன். நம் சமூகத்தின் பழக்க வழக்கங்கள் இன்னும் மாறாத அல்லது முழுவதும் மாறாமல் எச்சங்களை இன்னும் இறுக்கிப் பிடித்திருக்கும் இந்த நாட்களில், 'வெள்ளாவி' போன்றொதொரு நாவலைப் பற்றி விரிவாகக் கதைக்க முடியாது. குறைந்தது, புத்தகங்கள் மற்றும் வேறு வழிகளில் மூலம் தங்கள் வேர்களைக் கண்டு பிடிக்கும் என்போன்றவர்களால் சமூகவியல் என்பதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தஇயலாது என்று நினைக்கிறேன். அதிலும் இந்நாவலாசிரியர் விமல் குழந்தைவேல் தம்முடைய பூர்வீகப் பிரதேசத்தைக் களமாக வைத்ததோடு நிற்காமல், நிஜ சம்பவங்களையும் அந்தச் சம்பவங்களில் சம்பந்தப் பட்ட மனிதர்களின் பெயர்களையும் மாற்றாமல் பயன்படுத்தி இருக்கிறார் என்றும் அறிகிறேன். அதுவே, பல பிரச்சினைகளுக்கு வழிவகையாக அமைந்திருக்கிறது(படிக்க ஜனவரி மாத உயிர்மை). பாதிக்கப் பட்டவர்கள் இன்னமும் இருக்கும்போது பெயரைக்கூட மாற்றாமலிருந்ததை என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை.
நாவலில் வரும் பழக்க வழக்கங்கள் மாறியிருந்தாலும்(நிச்சயமாகத் தெரியவில்லை), தமிழ் சமூகமோ சாதிக் கண்ணோட்டங்களோ மாறவில்லை என்பதால் நாவலில் வரும் சமூகத்தாரைப் பற்றியோ அவர்களைப் பற்றிய விவரங்களைப் பற்றியோ பெரிதும் விவாதிக்க விருப்பமில்லை. இந்நாவல் மாதவி என்ற பெண்ணைச் சுற்றி வருகிறது. மாதவி, அவளுடைய மகள் பரஞ்சோதி மற்றும அவர்களின் அயலட்டத்தவர்களையும் அக்கிராமத்திற்கு அருகில் வசிக்கும் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் சிலரையும் நாம் சந்திக்கிறோம். பல கஷ்ட நட்டங்களுக்கு இடையில் தன்னுடைய மகளை பத்திரமாக வளர்த்தெடுக்கப் பாடுபடும் மாதவி, தாய் நடந்துகொள்ளும் விதத்தால் அவளை வெறுத்தொதுக்கும் பரஞ்சோதி, மாதவியின் மருமகன் முறைக்காரனான நாகமணி, மாதவியை வீட்டு வேலை மற்றும் துணி தோய்ப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளும் போடியார் மனைவி என்று பலரைச் சந்திக்கிறோம். மட்டக்களப்புத் தமிழைப் பற்றித் தெரியாததால் ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும், போகப் போக அந்தத் தமிழின் அழகை ரசிக்கப் பிடித்திருந்தது. ஆசிரியர் சில சமயங்களில் எழுத்துத் தமிழையும் பேச்சுத் தமிழையும் குழப்பிக் கொள்கிறாரோ என்று தோன்றுகிறது. அறிந்தவர்கள் சொல்ல வேண்டும். நாவலில் இருந்து இன்னுமொரு பகுதியை உங்களுக்காக இங்கே கொடுக்கிறேன். வளவு முழுக்கக் இறைஞ்சி கிடந்த இலை செடி மரம் எல்லாத்தையும் ஒதுக்கி குவிச்சிப் போட்டு, கிணத்தடியில் நிண்ட செவ்விளநீர் தென்னம் கண்டுக்கீழ கத்தியப் போட்டுப் போட்டு தண்ட தோழ் உயரத்துல வளர்ந்து நிண்ட தென்னைய உத்துப்பாத்தான் நாகமணி. ஒட்டி ஒட்டி வைச்சாப்போல இருந்திச்சி செவ்விழநி குலை. "டேய் நாகமணி என்னடா வைச்சகண் வாங்காம தென்னையைப் பாத்த மாதிரி நிக்காய்." "இல்ல மாதவியக்க எண்ட தோழ் உசரம்கூட இல்ல என்னமா காய்ச்சித் தொங்குது. நல்ல காலம் அடிச்ச காத்துக்கு ஒள்ளம் உசரமா இருந்திருந்தா ஒரு குரும்பைகூட மிஞ்சியிருக்காது. அதான் பாக்குறன்." "தூ... தூ... உண்ட கண்ணேண்டா அதுல பட்டிச்சி, கண்ணூறு படப்போகுது. இஞ்சால வாடா." "பாக்கப் பாக்க சோட்டையா இரிக்கக்க. ஒரு இளநி பிய்ச்சிக் குடிக்கட்டோ?" "டேய் மாரி காலம் அடை மழையும் வெள்ளமும்.... அடிக்குற காத்துக்கும் குளிருக்கும் இளநியக் குடிச்சி கைகால் கொடுகிச் சாகப் போறயோடா?" "மாதவியக்க சோட்டையா இரிக்கி அதுதான்..." "டேய் முன்னமுன்ன காய்ச்ச தென்னங்குலைய அம்மன் கோயிலுக்கு குடுக்கறதெண்டு நேந்து வச்சிருக்கன். அது அம்மாளுற தென்னை தொட்டுடாதை.... அத உட்டுப்போட்டு இஞ்சாலவாடா." குசினிக்குள்ள போன நாகமணிக்கு ஒரு தட்டுல முருங்கையிலைச் சுண்டலையும் அவிச்ச கிழங்கையும் வைச்சிக் குடுத்தாள் மாதவி. பரஞ்சோதியும் வந்து ஒரு தட்டுல சுண்டலையும் கிழங்கையும் போட்டெடுத்து மூலைக்குள்ள குந்திக்கொண்டு முழங்காலுல தட்ட வைச்சித் தின்றுகொண்டிருந்தாள். "முருங்கையிலைச் சுண்டல் நல்ல சோக்கா இரிக்கக்க. இந்த மையரிக் கிழங்குதான் செப்பமாயில்ல." "ஏண்டா நல்ல மாப்போல விரிஞ்சி அவிஞ்சிதானேடா இரிக்கி." "அவிஞ்சிரிக்கக்க இல்லையெண்டதாரு? வெள்ளத்துல வேர் அழகுனதால ஒரு பூங்கறை நாத்தம் அடிக்கிற மாதிரி இரிக்கெல்லோ.' "அடா இதாகுதல் கிடைச்சிதே... விளைஞ்ச பூமிய வெட்டிக் கட்டுற காலத்துல வெள்ளம் வந்திரிக்கேடா. இண்டைக்கு நாளைகாகுதல் முகத்துவாரத்த வெட்டி உட்டாங்களெண்டா பரவாயில்ல. தண்ணி வடிஞ்சி நிலம் காஞ்சாத் தானேடா களவட்டிக் காகுதல் போகலாம்." 'வெள்ளாவி' நாவல் ஆசிரியர் - விமல் குழந்தைவேல் முதல் பதிப்பு - ஜூலை 2004 வெளியீடு - உயிர்மை, சென்னை விலை - 125 ரூபாய் |
Comments on "வெள்ளாவி - ஒரு வாசிப்பனுபவம்"