blé d'Inde
ble d'inde பிரெஞ்சில் மக்காச்சோளத்தை இந்தியக் கோதுமை என்று சொல்கிறார்கள். காரணம் கிரிஸ்டோபர் கொலம்பஸ் இந்தியாவிற்கு செல்கிறோம் என்று நினைத்துக்கொண்டு அமெரிக்காவில் வந்திறங்கியபோது அவ்வாறு அழைத்ததுதான். மேலும் அவருக்கு 'Chica' எனப்படும் சோளத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட மதுபானத்தைக் கொடுத்து உபசரித்த கதை நமக்கு இப்போது தேவையில்லாதது. தென் அமெரிக்காவில் மட்டுமல்லாது வட அமெரிக்காவிலும் சோளம் பயிரிடப்பட்டதாம். கனடாவில் அபரிதமாகப் பயிரிடப்பட்ட இந்தப் பயிர் பக்கத்து நாட்டில் அவ்வளவு பிரபலமாகவில்லை. பத்தொன்பதான் நூற்றாண்டிலேயே அமெரிக்க நாட்டில் சோளத்துக்கு மவுசு வந்ததாம். கனடியப் பழங்குடியினரே கியூபெக் மாகாணத்தில் வந்தேறிகளான பிரெஞ்சுக்காரருக்கு திறந்த வெளிகளில் சமைத்து உண்பது பற்றியும் அதன் சௌகரியங்களையும் காட்டிக்கொடுத்தனர். குளிர்காலத்தில் அல்ல. நல்ல தட்பவெட்ப சூழ்நிலை நாட்களில்தான். ;) அந்த நாட்களில் இப்படி திறந்தவெளிகளில் சமைத்து சாப்பிடுவது பிரான்சு நாட்டில் கேள்விப்படாத விஷயம். அறுவடை செய்யப்பட்ட சோளத்தை நீரில் வேகவைத்து லேசாக உப்பும் பட்டரும் தடவி அப்படியே உண்பது இங்கே இன்னமும் நடக்கும் விஷயம். இதை கற்றுக்கொடுத்தவர்கள் கனடியப் பழங்குடியின மக்கள். அதற்கு பிரெஞ்சுக்காரர்கள் பெயர் வைத்து பெரிதாகக் கொண்டாடுகிறார்கள் - L'epluchette de ble d'inde (Corn Husking Party!). பெயர்தான் பிரெஞ்சுக்காரர்களுடையதே தவிர மற்றதெல்லாம் மண்ணின் மைந்தர்களுடையதே. இப்போதும் கியூபெக் மாகாண சமையலில் சோளம் பெரும் பங்கு வகிக்கிறது. |
Comments on "blé d'Inde"