Tuesday, April 20, 2004

Say Cheese





மேலே நீங்கள் பார்ப்பது St.Denis தெரு. Latin Quarterஇல் இருக்கிறது. கோடை காலத்தில் மிகவும் பரபரப்பாக இயங்கும் இத்தெருவில் வரும் மே முதலாம் தேதியில் இருந்து ஆகஸ்ட் முப்பதாம் தேதி வரை காமெராக்கள் பொருத்தப்போகிறார்களாம். தூள் விற்பனை இந்தப் பகுதியில் மிகவும் அதிகரித்திருப்பதாகவும், அதனால், வாடிக்கையாளர்கள் இப்பகுதியிலிருக்கும் க·பேக்கள், உணவுவிடுதிகள், பார்களுக்கு
வருவது குறைந்துவருவதாக சொல்கிறார்கள்.



அதே நேரத்தில் இம்மாதிரி காமெராக்கள் வைப்பது மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற விவாதமும் சூடாக நடைபெறுகிறது. சில வருடங்களுக்கு முன்பு, நகரின் மத்தியபகுதியில் இம்மாதிரி காமெராக்களை நிறுவி, மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல் நீக்கினார்களாம்.



St.Denis தெரு downtownக்குப் பக்கத்தில் இருக்கிறது. ஒரு பக்கம் மியூசியங்களும், மறுபக்கம் வர்த்தக நிறுவனங்களும், இன்னுமொரு பக்கம் 'The village' என்ற Gay villageஉம் இருக்கிறது. Gay Village என்று சொன்னாலும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடம் இது. ஒவ்வொரு வெள்ளி, சனி, ஞாயிறும் கூட்டம் அலைமோதும். அடுத்த அக்டோபர் மாதம் வரை மான்ரியல் ஒவ்வொரு வார இறுதியிலும் விழாக்கோலம் எடுக்கும். எதாவதொரு விழா நடந்துகொண்டே இருக்கும். இம்மாதிரி காமெராக்கள் பொருத்தினால், கூட்டம் குறைந்துபோகும் என்று ஒரு சாரார் சொல்கிறார்கள். இன்னும் சிலரோ, St.Denis தெருவில் காமெராக்கள் பொருத்தினால், சுற்றிலும் இருக்கும் சின்னத் தெருக்களுக்கு தூள் வியாபாரம் நகர்ந்து செல்லும். அதனால் என்ன பிரயோசனம் என்கிறார்கள். இன்னும் சிலரோ வான்கூவரில் சில வாரங்களுக்கு முன்பு போதைப்பொருள் உபயோகிப்பவர்களுக்காக வான்கூவர் நகர மேயர் ஊசிகளைக் கொடுக்கிறார். அதுபோல இங்கும் சில அதிகாரபூர்வமான இடங்களை ஒதுக்கலாம் என்கிறார்கள்.

(வான்கூவரில் போதைப்பொருள் உபயோகிப்பவர்களுக்கு ஊசிகளை நகரமே சில பிரத்தியேக இடங்களில் கொடுக்கிறது. இதனால், போதைப்பொருட்களை சுத்தமில்லாத ஊசி பயன்படுத்தி இறப்பவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறையும் என்று வான்கூவர் நகர மேயர் எதிர்பார்க்கிறார். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. ஐரோப்பாவில் சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இம்மாதிரியான இடங்கள் பல வருடங்களாக இருக்கின்றனவாம்.)

என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments on "Say Cheese"

 

post a comment