நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
வக்கீல்களும் அவர்களின் வாதத்திறமையும் என்னை மிகவும் கவர்ந்த ஒரு விஷயம். தங்கள் பேச்சு வல்லமையினால், வக்கீல்கள் சாதிப்பதையும் நான் சினிமாவிலும், அமெரிக்க தொலைக்காட்சிகளிலும் நாவல்களிலும் கண்டு வியந்திருக்கிறேன். சொல்லப்போனால், இம்மாதிரியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மீது போனவருடம் வரைக்கும் அடிக்ட் ஆகி இருந்தேன். அது Jag ஆகட்டும், Law and Orderஉம் அதன் பல்வேறு விதமான வடிவங்களாகட்டும், ஒன்றையும் விட்டதில்லை. அதே போல திரைப்படங்களிலும் வக்கீல்கள் சம்பந்தப்பட்ட படங்கள் இன்றும் என்னுடைய மிகவும் விருப்பமான படங்கள் பட்டியலில் இருக்கிறது. அவற்றில் மறக்கமுடியாதது To Kill a Mockingbird.
சமீபகாலமாகவே என்னை அரித்துக்கொண்டிருக்கும் கேள்வியை நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். இதோ உங்களிடமும் இப்போது. வழக்குகளில் இரு தரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகி வாதாட வேண்டும். கொலை, கொள்ளை வழக்குகளிலும் குற்றவாளிக்காகப் பேச ஒரு வக்கீல் இருப்பார். பணம்படைத்தவர்களால் கொண்டுவரப்படும் வக்கீல், அதற்கேற்றமாதிரி வழக்கிலிருந்து குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்தும் விடுவார். எனக்கு கிரிமினல் வக்கீல்கள் யாரையும் தெரியாது. இல்லையென்றால் அவர்களின் உணர்வுகள் பற்றிய என் கேள்விகளைக் கேட்டிருப்பேன். எப்படியும், வக்கீல்களுக்கு அது கிரிமினல் வழக்கோ, சிவில் வழக்கோ தான் வழக்காடும் நபர் உண்மையிலேயே குற்றம் இழைத்தவர் என்று தெரிந்துகொண்டே வாதாடுவார்கள். எதையும் மறைக்கவேண்டாம், அப்போதுதான் தம் பணியை சரியாக செய்யமுடியும் என்றெல்லாம் வக்கீல்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். தவறிழைத்தவர்கள் - அதுவும் மக்களைப் பாதிக்கும் அளவு குற்றம் செய்தவர்களை, மனதறிந்து கட்சிக்காரராக ஏற்று வழக்கில் முழுமுனைப்போடு எப்படி செயல்படுகிறார்கள் என்று நான் வியப்பது ஒரு புறமிருக்க... இந்த வக்கீல்கள் தொழில்நேரம் போக மற்ற நேரங்களில் எப்படி செயல்படுவார்கள்? தம் சாட்சிக்காரர் என்ன தவறிழைத்திருந்தாலும், அதைப்பற்றிய தம் எண்ணத்தை ஒதுக்கிவிட்டு கோர்ட்டில் வாதாடுவதுபோலவே நிஜத்திலும் நடந்து கொள்கிறார்களா? உலகம் பூராவும் ஏன் வக்கீலுக்குப் படித்தவர்களே பெரும்பாலும் அரசியலில் ஈடுபடுகிறார்கள்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? |
Comments on "நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"