படித்ததில் பிடித்தது - 'துணையெழுத்து' எஸ்.ராமகிருஷ்ணன்
இன்றைக்குப் படித்ததில் பிடித்தது, ஆனந்த விகடனில் 'துணையெழுத்து' தொடரில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருப்பது. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
நன்றி: விகடன், எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லாத சொல் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பிராகாரத்தில் நடந்து கொண்டிருந்தபோது, வயதான பெண்மணி ஒருவர் தன்னோடு வந்திருந்த கணவரைத் திட்டிக்கொண்டிருந்தது கேட்டது. ‘‘உங்ககூடப் பேசிப்பேசி என் உதடே தேய்ஞ்சு போச்சு.வயசாயிருச்சின்னா பேச்சைக் குறைச்சிரணும். உங்களுக்கு அது முடியாது. சாப்பாட்டிலே உப்பைக் குறைக்கச் சொன்னது மாதிரி, டாக்டர்தான் உங்களுக்கெல்லாம் பேச்சையும் குறைக்கச் சொல்லணும். நான் சொன்னா ஏறுமா?’’ ஒரு குழந்தையைப் போல முதியவர் தலையாட்டிக் கொண்டிருந்தார். பிராகாரத்தில் பேசிக்கொண்டிருந்த சில வயதானவர்கள் சட்டென நிசப்தமானார்கள். வயதானபோது தான் பேசும் ஆசை அதிகமாகிறது போலும். பூங்காவில், ரயில்நிலைய பெஞ்சில், கடற்கரையில் என எல்லா இடங்களிலும் முதியவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். பேசிக்கொள்வதற்காகவே ஒருவரையருவர் சந்திக்கிறார்கள். பேசிக்கொள்ள யாருமற்ற நேரங்களில் தனக்குத் தானே பேசிக்கொண்டிருக்கும் வயசாளிகளைக்கூட காண முடிகிறது. பேச்சின் மீது ஏன் இத்தனை பிடிப்பு? பேச்சைப் போல தீராத ருசியுடையது வேறு ஏதேனும் இருக்கிறதா என்ன? பேச்சுதான் நட்பை, உறவை, காதலை, பகையை, குரோதத்தை அகந்தையை, அறிவை என யாவையும் உருவாக்குகிறது. வற்றாத ஒரு ஜீவநதியைப் போல பேச்சு உலகமெல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒன்றரை வயதில் குழந்தை பேசக் கற்றுக்கொள்ளத் துவங்குகிறது. அர்த்தமற்ற சத்தங்களாக மொழி அதனுள் சுரக்கிறது. அந்த நாட்களில் குழந்தை வாய் ஓயாமல் எதையாவது சத்தமிட்டபடியே இருக்கும். கவனித்திருக்கிறீர்களா? ஒன்றரை வயதில் குழந்தை பேசத் துவங்குவது நமக்குத் தெரியும். எந்த வயதில் பேச்சைக் குறைத்துக் கொள்வது என்று ஏதேனும் வரையறையிருக்கிறதா என்ன? எழுதப்படாத ஒரு விதியைப் போல வயதானால் பேச்சைக் குறைந்துகொள்ள வேண்டும் என்று சகலரும் சொல்கிறார்கள். முதுமையானதும் தோற்றம் கனிவடைந்துவிடுகிறது. அதுபோல பேச்சும் கனிந்து ருசியாகி விடுமல்லவா.. பின் ஏன் பேச்சை குறைக்க வேண்டும்? ஆனால், உலகின் நியதி அதற்கு மாறாக உள்ளது. அது வேறு காரணங்களைச் சொல்கிறது. குழந்தையிலிருந்து எப்படி ஒவ்வொரு சுவையாக, ருசிக்கக் கற்றுக்கொள் கிறோமோ.. அதுபோல மூப்படையத் துவங்கும்போது ஒவ்வொரு சுவையிலிருந்தும் விடுபட வேண்டியிருக் கிறது. இனிப்பு உப்பிலிருந்து விடுபடு வதற்கே தினந்தினம் வயதானவர்கள் போராடிக் கொண் டிருக்கும்போது, பேச்சை விடுவ தென்பது எளிதானதா என்ன? பாஷை மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பு. தண்ணீர் எப்படி பனியாகவும், காற்றாகவும், தண்ணீராகவும் மூன்று நிலைகளில் இருக்கிறதோ அப்படியே பேச்சும் உறைந்தும், மௌனமாகியும்,சலசலத்து ஓடியும் மூன்று நிலையிலிருக்கிறது. எனது வாசகர்களில் ஒருவரான சிவசுவின் ஊரான பாபநாசத்துக்கு ஒரு முறை போயிருந்தேன். அவரது குடும்பமே ஆசிரியர்கள். எதையும் குடும்பமே கூடிப் பேசி விவாதித்துத்தான் முடிவுசெய்வார்கள். அது சமையல் செய்வதாகயிருந்தாலும் சரி, திருமண விஷயமாகயிருந்தாலும் சரி. நான் சந்திக்கும் நாட்களில் பேச்சு இலக்கியத்தில் துவங்கி சினிமா, நாட்டுநடப்பு என எங்கெங்கோ சுற்றி முடிவடையும்போது இரவு கடந்து விடிகாலை பிறந்து கொண்டிருக்கும். சிவசுவின் வீட்டில் ஒரு முரணை காண முடிந்தது. அவனது அம்மாவும் அப்பாவும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ள மாட்டார்கள். 'பேசி பத்து வருடத்துக்கும் மேலாகிவிட்டது' என்றார் சிவசு. ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்கிற இருவர் ஒருவருக் கொருவர் பேசிக் கொள்வதில்லை என்பது வியப்பாக இருந்தது. ஆனால், வீட்டில் இருந்தவர்கள் அதை மிகவும் எளிதாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களே. கடந்தகாலக் கதையை சிவசு நேற்று நடந்தது போல விவரித்தார். பத்து வருடத்தின் முன்புவரை அம்மாவைக் கேட்காமல் அப்பா ஒரு காரியம்கூட செய்யமாட்டார். கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார்கள். ஆறேழு குழந்தைகள். பெரியவர்கள் சாப்பாட்டுக்கே பிரச்னை. கஷ்டஜீவனம். அம்மா எப்படியோ வருமானத்துக்குள்வீட்டை கொண்டு செலுத்திக் கொண்டிருந்தாள். ஒருநாள் சாமிக்குக் காணிக்கையாக வைத்திருந்த பணத்தை யாரோ எடுத்து செலவழித்துவிட்டார்கள் என்று தாத்தா கத்தி கூப்பாடு போட்டார். யாரும் எடுக்கவில்லை என்றார்கள். விசாரணை நடந்தது. அம்மா அன்று வந்த புடவைக்காரனிடம் புதுப்புடவை வாங்கியிருக்கிறாள், புடவை பெட்டியிலிருந்து சாட்சியாக எடுக்கப்பட்டிருந்தது. அவளை விசாரிக்கச் சொல்லி தாத்தா கத்தினார். இத்தனை களேபரத்துக்கு இடையிலும் அம்மா அமைதியாக இருந்தாள். முடிவாக அப்பா அவளை பூஜையறைக்கு வரச்சொல்லி ஒரேயரு வார்த்தை கேட்டார். ‘நீ பணத்தை எடுத்துப் புடவை வாங்கினாயா?’ அம்மாவால் அதைத் தாங்க முடியவேயில்லை. சட்டென எரிந்து கொண்டிருந்த விளக்கில் கையை நீட்டி சத்தியம் செய்தபடி 'புடவை வாங்கினது நிஜம். ஆனால், காணிக்கைப் பணத்தைப் பற்றி எனக்குத் தெரியாது' என்றாள். அப்பா ஆத்திரமாகி அவளுக்கு ஒரு அறை கொடுத்தார். அம்மா அழவேயில்லை. கையை விளக்கில்காட்டிக் கொண்டேயிருந்ததால் சூடுபட்டு கொப்பளமாகியது. அன்றிரவு அந்தக் காணிக்கை பணத்தைத் தாத்தாவே குளியல் இடத்தில் கைமறந்து போட்டிருப்பதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். அம்மா கடன் சொல்லிப் பாட்டியின் திவசத்துக்காகத்தான் புடவை வாங்கியிருக்கிறாள் என்பதை அப்பாவே கண்டுபிடித்து அவளிடம் மன்னிப்புகேட்டார். ஆனால், 'மனுஷாள் மேல நம்பிக்கை போனபிறகு எதுக்குப் பேச்சு?' என அம்மா அப்பாவோடு மட்டும் பேச மறுத்துவிட்டாள். 'நாங்களும் அது சரிதான்னுவிட்டுட்டோம்' என்றான். பேச்சை கற்றுக்கொள்வதைப் போல மௌனத்தை எளிதில் கற்றுக்கொண்டுவிட முடியாது. பூக்கள் வாசனையால் தன்னை வெளிப்படுத்திக் கொள்வது போல சொற்கள் இல்லாமல் நம்மை வெளிப்படுத்திக் கொள்வதுதான் மௌனம். குளத்தில் மூழ்கிக்கிடக்கும் கற்களைப் போல சொற்கள் மனதில் அமிழ்ந்து கிடக்கின்றன. மௌனியாக இருந்தால் நீர்ப்பூச்சிகள் தண்ணீரில் நடந்து அலைவது போல உலகின் எல்லாக் காட்சிகளும் மனதின் மேல் தட்டில் ஊர்ந்து கடந்துவிடுகின்றன. மனம் சலனம் கொள்வதில்லை. அன்று சிவசுவின் வீட்டில் நான் மகாபாரதத்திலிருந்து இருவரைப் பற்றி சொன்னேன். மகாபாரதத்தில் விதுரன் வயதாகி துறவறம் மேற்கொள்கிறான். இமயமலையின் யாருமற்ற பிரதேசத்தில் நிர்வாணியாக மௌனமாகத் திரிந்தான். தன்னையறியாமல் நாவு அசைந்து பேச்சு பிறந்துவிடக்கூடும் என்பதற்காக நாவின் அடியில் கூழாங்கற்களை ஒதுக்கி வைத்திருந்தான். இதனால் நாவு அசையவே அசையாது. வாழ்நாள் முழுவதும் அரசகுடும்பத்துக்காக ஆயிரம் யோசனை சொன்ன விதுரனின் நாவுகூட என்றோ ஒரு நாளில் கூழாங்கற்களால் அடங்கிவிடுகிறது. ஆனால், பிறந்தது முதல் தேசத்துக்காகப் பாடுபட்டு, நித்ய பிரம்மசாரியாக தனிமையில் மௌனமாக வாழ்ந்த பிதாமகர் பீஷ்மரோ யுத்தத்தில் காயம்பட்டு அம்புபடுக்கையில் படுத்த பிறகுஎதை எதையோ பேசிக் கொண்டேயிருக்கிறார். தன்னைச் சந்திக்கும் கர்ணன், ஸ்ரீகிருஷ்ணன், யுதிஷ்ட்ரன் என யாவரின் கேள்விகளுக்கும் பதில் சொல்லியபடியே இருக்கிறார். பீஷ்மரே வாழ்நாளின் கடைசியில் பேச்சைத்தான் துணைக்கு கொள்கிறார். உலகம் இப்படித்தானிருக்கிறது என்றேன். சட்டென சிவசுவின் அம்மா ஒரு பழமொழியைச் சொன்னார் ‘உதடு தேய்வதை விடவும் உள்ளங்கால் தேயலாம்.’ அதற்கு என்ன அர்த்தம் எனக் கேட்டதும் ஒவ்வொரு வேலை யையும் 'அடுத்தவரை வேலை செய்யச் சொல்லி ஏவிக்கொண்டே இருந்துஉதடு தேய்வதைவிடவும், தானே ஓடியாடி வேலை செய்து உள்ளங்கால் தேய்வது நல்லது' என்றார். ஒளவை மட்டுமே பெண்கவியல்ல, எத்தனையோ பெண்கள் தங்கள் வாழ்நாளில் கண்டறிந்த உண்மையைத் தான் பழமொழியாக்கியிருக்கிறார்கள். ஊர் திரும்பும்போது சிவசுவிடம் அவனது அம்மா 'ஒரு யோகியை விடவும் பலமானவள்' என்று சொன்னேன். அவர் புரிந்தது போல தலையாட்டினார். ஒரு சொல் என்பது அஸ்திரத்தைவிடக் கடுமையானது என்று உணர்ந்திருக்கிறோமா? முறிந்த முள்ளைப் போல மனதில் புரையோடிக் கிடந்த சொற்கள் நினைவு வரத்துவங்கின. வீட்டை நெருங்கும்போது எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். சொல்லின் வலி சொல்லால் வெளிப்படுத்தப்பட முடியாதது. |
Comments on "படித்ததில் பிடித்தது - 'துணையெழுத்து' எஸ்.ராமகிருஷ்ணன் "