குடிவகை
குடிவகை - குடிவகை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் என்னுடைய அம்மம்மாவிடம் கேட்டால் அவர் நன்றாக விளங்கப் படுத்துவார். குடிவகை என்று சொல்லும்போதே அவருடைய முகத்தில் ஒரு சுழிப்பு வந்துபோகும். அவரிடம் அப்படி என்றால் என்ன அம்மம்மா என்று Shrek-2இல் வரும் Cat மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு கேட்டுப் பேச்சு வாங்கிக் கட்டியிருக்கிறோம். ஆனால், அந்த அம்மம்மாதான் அப்பம் சுடுவதற்கு முதல்நாள் கள்ளு வாங்கிக்கொண்டு வருவா.
இப்ப குடிவகை என்ற பேச்சு ஏன் வந்தது என்று கேட்கிறீர்களா? பொறுங்க. பொறுங்க. ஏன் இவ்வளவு அவசரப் படுகிறீங்க? ஆறுதலாச் சொல்லுறன். இந்தக் குளிரில நான் ஓடிரப் போறனா இல்ல நீங்கதான் ஓடிப்போகப் போறீங்களா? [சந்தடி சாக்கில பியேர்ஸ் ப்ரொஸ்னனை உள்ளுக்குள்ள நுழைச்சாச்சு! ] ஆ... குளிர் எண்டு சொன்னோடதான் ஒண்டு ஞாபகம் வருகுது. சனம் எல்லாம் ஏன் குளிருக்குத் தண்ணி அடிக்கோணும். குளிருக்கு சிகரெட் குடிக்கோணும் எண்டு சொல்லுதெண்டு எனக்கு இண்டைக்கு வரை விளங்கேல்ல. யாருக்காவது விளங்கினா சொல்லுங்க. அதுவும் ஆம்பிளைகள் மட்டும்தான் இதைச் சொல்லுவினம். இந்தக் குளிருக்கு சிகரெட் பிடிக்கோணும் எண்டு சொல்லுற ஆக்களுக்கு கியூபெக்கில பிரச்சினை வரப்போகுது எண்டு நினைக்கிறன். வரோணும். பொதுவிடங்களில சிகரெட் பிடிக்கக்கூடாது எண்டு சட்டம் கொண்டுவரலாமா எண்டு அரசாங்கம் யோசிக்குதாம். நல்ல விஷயம்! கியூபெக்கில சிகரெட்டின்ற கதை இப்படியெண்டா குடிவகையின்ற கதைதான் போன மூண்டு மாசமா மோசமாயிருக்கு. இங்க கியூபெக்கில சனத்துக்கு சும்மா நாளிலயே ஏதாவது விருந்து கொண்டாட்டமெண்டா வைன் வேணும். வைனில்லாம ஒரு கொண்டாட்டமோ, பார்ட்டியோ நடக்காது. பொட்-லக் பார்ட்டிகளுக்கு, சமைக்கப் பஞ்சிப்படுற ஆக்களும் ஒரு பத்துப்பதினைஞ்சு டொலருக்கு வைனை வாங்கியண்டு போய் ஒப்பேத்திரலாம். ஆனாப்பாருங்க, அதுக்கும் ஒரு ஆப்பு வைச்சிட்டாங்கள். கிறிஸ்மஸ் வருகுது எண்டு சனங்கள் இந்த வருஷம் எத்தனை போத்தில் முடிக்கிறது எண்டு சனமெல்லாம் சந்தோஷமா இருக்கேக்க இந்த SAQ ஆக்கள் வேலைநிறுத்தம் செய்யத் தொடங்கிற்றினம். பொதுசனத்தில கொஞ்சப்பேர், முன்ஜாக்கிரதையாப்போய் கொஞ்சப் போத்தில்களைக் கொண்டந்து அடுக்கிற்றுது. மற்றச் சனம் எல்லாம், அரசாங்கம் ஏதாவது செய்யும் - ஒண்டு சம்பளத்தைக் கூட்டமாட்டனெண்டு சொல்லும் அல்லது அரசாங்கம் கடுமையா இருந்தா SAQஆக்கள் வேலைநிறுத்தத்தை நிப்பாட்டுவினம் எண்டு நினைச்சிச்சினம். அரசாங்கம், சம்பளத்தைக் கூட்ட மாட்டனெண்டு சொல்லிப்போட்டுது. கிறிஸ்மஸ் கிட்டக்கிட்ட வருகுது. மொன்ரியலில நாலைஞ்சு கடைகளை மானேஜ்மெண்ட் ஆக்களே நடத்திச்சினம். சனமெல்லாம் கியூல நிண்டு வாங்கத் தொடங்கிற்றுது. டீவியில எல்லாம் காட்டினாங்கள். கிறிஸ்மஸ் வரப்போறதால அரசாங்கம் கீழ்ப்பணிஞ்சு வந்திரும் எண்டு நினைச்ச SAQ ஆக்களுக்கெல்லாம் பெரிய ஷொக். அப்பிடி ஒண்டும் நடக்கேல்ல. மற்ற எல்லாக் கடைகளப் போல SAQக்கும் கிறிஸ்மஸ்மூட்டம்தான் நல்ல வியாபாரம் நடக்கும். சும்மாவே பின்ன. ஒ·பிஸ் பார்ட்டி, வீட்டுல பார்ட்டி, ஸ்கூல் பார்ட்டி எண்டு எங்கயெல்லாம் பார்ட்டியோ அங்கயெல்லாம் வைன் ஆறா ஓடும். இதுதவிர, ஒ·பிஸ்வழிய நடக்கிற குலுக்கல்முறை பரிசுகளுக்கும் சனம் பதினைஞ்சு டொலர் இருவது டொலருக்கு ஒரு வைன் போத்திலை வாங்கிக்கொண்டுபோய் குடுத்திரும். பாக்கிறதுக்கு வடிவாயும் இருக்கும். பேர்சுக்கு ஏற்றமாதிரியும் இருக்கும் எண்டு எல்லாச்சனமும் போத்திலோடதான் வருங்கள். இப்பிடிக்கிடைச்ச போத்திலொண்டுதான் போன வருசம்.... - சரி அதை விடுங்க. அந்தக் கதை இங்க என்னத்துக்கு... சரி இப்ப என்ன சொல்லியண்டு இருந்தனான். ஓம்! SAQ ஸ்ட்ரைக் நிண்டபாடில்ல. அரசாங்கமும் பணிஞ்சமாதிரியில்ல. பேப்பர்லயெல்லாம் புலம்பத் தொடங்கிற்றினம். அதிலயும் பாருங்க. மொன்ரியல் Gazetteல சனிக்கிழமை சனிக்கிழமை வைன் பற்றி எழுதுற தாத்தா ஏதேதோ வைன்களைப் பற்றி எழுதித் தள்ளியண்டுதான் இருந்தேர். நிப்பாட்டேல்ல. அவரிட்ட யாரும் போய், எங்கேயப்பா இதையெல்லாம் வாங்கிறது எண்டு கேக்கேல்லப்போல! அதே Montreal Gazetteஇல SAQல வேலை செய்யுற ஒரு பெட்டை தெரியாத்தனமா ஒண்டைச் சொல்லப்போய் பிறகு சனமெல்லாம் ஆசிரியருக்கு கடிதம் எழுதிக் குடிக்க சேச்சே! குவிக்கத் தொடங்கிற்றுதுகள். அவ, போத்தில்ல வைன் நிரப்புற வேலை செய்யுறவவாம்! அவ, தான் மொத்தமா வைன் வாங்கி தனக்குத் தெரிஞ்ச ஆக்கள், சொந்தக் காரர் எண்டு வித்து அதில வர்ர காசில அடுத்த வருசம் ஐரோப்பாவுக்குப் போகலாம் எண்டு இருக்கிறன் எண்டு சொல்லிப்போட்டா. கனக்க ஒண்டுமில்ல ஒரு 300 போத்தில் வாங்க இருக்கிறன் எண்டு சொல்லிப்போட்டுது. காய்ஞ்சு கருவாடாகிக் கொண்டிருந்த சனத்துக்கு இது காணாதா? எல்லாரும் அந்தப் பெட்டைய வறுக்கெடுக்கத் தொடங்கிச்சினம். இது ஒரு பக்கம் நடந்தண்டு இருக்க இன்னொரு பக்கம் கிறிஸ்மஸ் கிட்ட வந்தண்டே இருந்துது. ஸ்ட்ரைக்கும் முடியுற பாடாத் தெரியேல்ல. வைனைத் தவிர வேற குடிவகை குடிக்கிற சனம், கொஞ்சம் அக்கம் பக்கத்து ஊர், நாடு எண்டு போகத் தொடங்கிச்சுது. என்ற சொந்தக் காரர் ஒரு ஆளுக்கு கார் ஓட்டுறதை விடப் பிடிக்காத விஷயம் வேற ஒண்டுமே இல்ல! அவரே, கிறிஸ்மஸ் லீவுக்கு டொரோண்டோவுக்கு போயிற்று வருவமா எண்டு கேக்கத் தொடங்கிற்றேர். சும்மா இருக்கிற நேரத்திலயே டொரோண்டோவுக்குப் போகப் பஞ்சிப் படுறவர் இந்தப் பனிகாலத்துல எதுக்கு டொரோண்டோக் கதை கதைக்கிறேன் எண்டு யோசிச்சபிறகெல்லோ விஷயம் பிடிப்பட்டுது. அவர் போகேல்ல எண்டாலும் Montreal Gazetteஇல எழுதுற Lisa Fittermanதொடக்கம் கன சனம் டோராண்டோ அல்லது கியூபெக்குக்குப் பக்கத்தில இருக்கிற Cornwall எண்டு போயிற்று அள்ளியண்டு வந்துதுகள். கிறிஸ்மஸ்ஸ¤ம் வந்து போயிற்றுது, ஆனா இந்த ஸ்ட்ரைக் இன்னும் நிண்ட பாடாத் தெரியேல்ல. அதோட ஸ்ட்ரைக்ல நிண்டவைக்கு கிறிஸ்மஸ் போனஸ¤ம் கிடைக்காமப் போயிற்றுது. ஸ்ட்ரைக்கில நிக்கிறவை இரண்டு கிழமைக்கு முதல் பெரிய யூனியனில சேர்ந்திருக்கீனம். அதோட ஸ்ட்ரைக்கில நிக்கிறவைல சரியாக் கஷ்டப் படுறவையின்ற குடும்பத்துக்கு இங்க இருக்கிற சில உதவி செய்யிற ஸ்தாபனங்கள் - Sun Youth எண்டு பெயர், உதவி செய்யீனமாம். அதுக்கு கண்டனம் சொல்லி நிறையக் கடிதங்கள் வந்து குவிஞ்சண்டு இருக்கு. இப்ப சொல்லுங்க குடிவகையைப் பற்றிக் கதைக்கிற நேரமா இது??? [குறிப்பு: என்னுடைய மனதில் இருக்கும் கேள்வியன்றை இங்கே வைக்கிறேன். நேரம்கிடைக்கும்போது கொஞ்சம் ஆராய்ச்சி செய்து எழுத உத்தேசம். யாருக்காவது விடை தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள். கியூபெக்கில் குடிவகை விற்கும் அதிகாரம் அரசாங்கத்திடம் இருக்கிறது. Depanneurs - அதாங்க சந்து முனைகளில் இருக்கும் கடைகள். Depanneurகளிலும் குடிவகை விற்க அனுமதிக்கப் பட்டிருக்கிறது. ஆனால், தரம் ஒரேமாதிரி இருக்காதாம். பியர் வகைகள் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் காஸ் ஸ்டேஷன் கடைகளிலும் கிடைக்கும். சரி குடிவகை முடிஞ்சுதா. இந்த லாட்டரி இருக்குதே, அதை இங்கே கியூபெக்கில் நடத்துவதும் அரசாங்கம்தான். என்னைப் பெருவியப்பில் ஆழ்த்தும் விஷயம் இது. குடியை விட, இதென்னத்துக்கு என்று கடுப்பாக்கும் விஷயம். லாட்டரி தொடர்பான சர்ச்சைகள் பிரச்சினைகள் ஒரு தொடர்விஷயம். அதுபோக மொன்ரியலில் இருக்கும் காசினோ'வும் அரசாங்கத்தால்தான் நடத்தப் படுகிறது. உருப்படுமா??? - இதெல்லாம் எப்படி எங்கே ஆரம்பித்தது. அரசாங்கத்தின் கைகளுக்குப் போனது ஏன் என்றெல்லாம் கொஞ்சம் படிக்க வேண்டும். Prohibition சமயத்தில் குடிவகை அரசாங்கத்தால் கையகப் படுத்தப் பட்டது என்று மட்டும் தெரிந்துவைத்திருக்கிறேன். பிறகு பாப்பம்.] ஓ! முக்கியமான விசயத்த மறந்திட்டன். இந்தப் பக்கம் வர்ர யாராவது கருணை வைச்சு வைனோ, ஏதாவது நல்ல குடிவகையோ கொண்டந்தா சொல்லுங்க. |
Comments on "குடிவகை"