Saturday, May 01, 2004

நீள நடக்கின்றேன் - 2

முந்தியெல்லாம் கொழும்பில இருந்து இரவு டிரெயின் ஏறினா காலமைக்கு யாழ்ப்பாணத்தில நிக்கலாம். அப்பிடித்தான் நாங்களும் நிறையத்தரம் கொழும்பில இருந்து இரவில வெளிக்கிடுறனாங்க. சில நேரம் எங்களோட அப்பா வருவேர். இல்லையெண்டா மாமா வருவேர். அப்ப எல்லாம் கோனர் சீற்றுக்குச் சரியான சண்டை போடுவம். எதிர் எதிரா இருக்கிற சீற்றில ஒரு சீற்றில தலாணி போட்டா மற்ற சீற்றில கால் வச்சண்டு நித்திரை கொள்ளுறனாங்கள். சீற்று விட்டுப்போயிரக்கூடாதெண்டுதான் இப்படி நித்திரை. பொழுது விடியத்தொடங்கேக்க டிரெயின் தமிழ்ப்பகுதியில போயண்டு இருக்கும். இதில என்ன விசயமெண்டா, எங்க ஊரில வேலியெல்லாம் கதியால் மரம் நட்டு, கிடுகு அல்லது பனையோலையால கட்டியிருக்கும். பாக்கிறதுக்கு எல்லா வேலியும் ஒரேமாதிரித்தான் இருக்கும். அப்ப வர்ர வேலிகளையெல்லாம் கண்டு, ஏதோ எங்கட வீடுதான் வந்திற்றுது எண்டு நினைச்சிருக்கிறன்.


படத்தின்மீது சுட்டவும்



கெலனியா, கம்பஹா, வியாங்கொடை, பொல்காவலை, குருனாகலெ, மாஹோ, அநுராதபுர, மதவாச்சி, வவுனியா, ஓமந்தை, புளியங்குளம், மாங்குளம், கிளிநொச்சி, பரந்தன், பளை, எழுதுமட்டுவாள், கொடிகாமம், மிருசுவில், சங்கத்தானை, சரசாலை, சாவகச்சேரி, கைதடி, நாவக்குளி, பொங்கங்குளம், யாழ்ப்பாணம் .

இதெல்லாம் என்னண்டு பாக்கிறீங்களா? இதெல்லாம் கொழும்பு - காங்கேசந்துறை ரயில்பாதையில் வரும் இடங்கள்.

யாழ்ப்பாணத்தில நாங்க இறங்கீருவம். அதுக்கங்கால - கொக்குவில், கோண்டாவில், மல்லாகம், காங்கேசந்துறை.

(உண்மை பேசும் நேரம்: மேல இருக்கிற பெயரெல்லாம் திரு.கந்தசாமி கொடுத்தருளியது. எனக்கு இதில கொஞ்சப்பெயர்கள்தான் ஞாபகம் இருக்கு. அதோட கொழும்புர் ரெயில்வே ஸ்டேஷன்ல சிங்கள உச்சரிப்போட யாழ்தேவி (அதுதான் கொழும்பில இருந்து காங்கேசந்துறை வரைக்கும் போற டிரெயினின்ற பேர்) நிக்கிற இடங்களின்ற பெயர் சொல்லுறது லேசா ஞாபகம் இருக்கு.)

மதவாச்சிக்கு அங்கால தமிழாக்கள் இருக்கிற இடங்கள். இலங்கையை எடுத்துக்கண்டியள் எண்டா, நாங்க இருக்கிற வடக்குப் பகுதி சரியான காய்ஞ்ச இடம். தென்மேற்குப் பருவக்காலத்திலதான் மழை பெஞ்சாப் பெய்யும். ஆனா, தெற்கால வருசத்தில ரெண்டு தரமும் நல்ல மழை பெய்யுமாம். கேரளாவுக்கு வர்ர மழை மேகங்கள் தெற்குப்பகுதில கொஞ்ச நேரம் நிண்டுட்டு போகும்போல. நல்ல செழிப்பா இருக்கும் எண்டு சொல்லுவினம். அதே மாதிரி வடக்குப்பகுதில ஆறு எண்டு ஒண்டும் இல்ல.


குறிப்பு: நண்பர்களே, நான் ஏதோ நிறைய முக்கியமான விஷயங்களை எழுதப்போகிறேன் என்று நினைக்காதீர்கள். எனக்கே என்ன எழுதப்போகிறேன் என்று தெரியாது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற ரயில் பயணம் எல்லாம் ஐந்தாறு வயதில் நடந்தது. ஏதோ மங்கலாக ஞாபகம் இருக்கிறது. அவ்வளவுதான்.

இப்படி எழுதும்போது எனக்குத் தெரிஞ்ச இலங்கை பற்றின விஷயங்களையும் சேர்த்துக்கொள்ள நினைக்கிறேன்.

என்ன ஒன்று, எனக்கு எவ்வளவு தெரியும் (அல்லது எவ்வ்வ்வ்வளவு தெரியாது) என்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள். இலங்கையில் பல வருடங்கள் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கும் ரமணி, சந்திரவதனா, சுரதா, வசீ, விஜயாலயன் எல்லோரும் என்னை விட எவ்வளவோ நிறையத் தெரிந்தவர்கள். நியாயமாகப் பார்த்தால் அவர்கள்தான் நிறைய எழுதவேண்டும். நான் ஏதோ என் மனத்திருப்திக்கு எழுதுகிறேன். இங்கே நான் எழுதுவது யாரையாவது பின் தொடர்ந்து நிறைய எழுதத்தூண்டுமானால் மகிழ்ச்சியடைவேன்.

Comments on "நீள நடக்கின்றேன் - 2"

 

post a comment