Monday, May 03, 2004

நீள நடக்கின்றேன் - 3

கொழும்பில அண்டைக்கும் இண்டைக்கும் நிறையத் தமிழ் ஆக்கள் இருக்கிற இடம் எதெண்டு பாத்தீங்களெண்டா அது வெள்ளவத்தை. இதை விட இன்னுஞ்சில இடங்கள் பெயர் தெரியும். பம்பலப்பிட்டிய - தம்பியின்ற பள்ளிக்கூடம் இங்கதான் இருந்தது. என்ற பள்ளிக்கூடம் இருந்த இடம் கொள்ளுப்பிட்டி. மிருகக்காட்சி சாலை இருந்த இடம் தெஹிவல. நிறையத்தூரம் போகோணும் எண்டது ஞாபகம் இருக்கு. இதை விட, அம்மாவின்ர ஒண்டவிட்ட அண்ணா கடை வைச்சிருந்த இடம் மருதானை. கடற்கரை கோல்·பேஸ்.



வெள்ளவத்தைல முதல்ல ரெயில்வே தண்டவாளத்துக்குப் பக்கத்தில இருக்கிற ஒரு ரோட்டில இருந்தனாங்க. தாத்தாவோட அந்தப்பக்கத்தால போய், ரயில் ஏதாவது போச்சுதெண்டா, கை காட்டீற்று, வீட்டில மிஞ்சின பாணின்ற கரைப்பக்கம் இரண்டையும் ஒரு சின்ன பையில போட்டணடு போவம். அந்தக் கரைப் பாணை என்னச்செய்யுறணாங்க எண்டு தெரியாது. ஆனா, ஒவ்வொருக்காவும் தாத்தா என்னையும் தம்பியையும் கரப்பாண் எவ்வளவு ருசி, தனக்குமட்டும் பல்லிருந்தா திண்டிருப்பன் எண்டு சொல்லி, நல்லது தெரியாம இருக்கிறம் எண்டு சொல்லுறதும், சில நேரத்தில "கரப்பான், கரப்பாண்" எண்டு சொல்லிப் பகிடி பண்ணிறதும் ஞாபகம் இருக்கு.



அதோ இந்த வீட்டில இருந்த நாட்களிலதான் அப்பா நிறைய நாளைக்கு வீட்டுக்கு வராம, நாங்கெல்லாம் பயந்து கிடந்ததும் நடந்தது. மூச்சுப்பேச்சு வெளியில கேக்கக்கூடாது எண்டு எங்களிட்ட சொல்லுப்பட்டது. நிறைய நாளைக்கு வீட்டுக்கு வராம இருந்தவர் அப்பா எண்டு சொன்னனான் எல்லா? அது மூண்டு நாளைக்குத்தானாம். பிறகு பிறகுதான் அது 77ஆம் ஆண்டு நடந்த கலவரம் எண்டு தெரியவந்தது. கொஞ்ச வருஷத்துக்கு முதல் அப்பா சொன்னது இது: அப்பா இலங்கைல வேலை செஞ்சது cold stores எண்டு சொல்லுற Elephant House. இங்க அப்பா புரொடக்ஷன் மானேஜரா இருந்தவர். 77ல அஸிஸ்டெண்ட் மானேஜர் எண்டு நினைக்கிறன். இவருக்குக் கீழ நிறைய லேபர் ஆக்கள் இருந்தவை. நிறையப்பேர் சிங்களவர். கலவரம் தொடங்கிற்றுது எண்டு தெரிஞ்சோடன, சிலபேர் கறுவினவங்கள் எண்டும், சிலர் அப்பாட்ட வந்து கவனமா இருக்கும்படியும் சொன்னவையாம். அப்பான்ற மானேஜர் அப்பாவை வெளியில போகவேண்டாம் எண்டு சொல்லிட்டேராம். தான் ஓ·பிஸில தங்கப்போறன் எண்டு வீட்டுக்கு யாரிட்டையோ சொல்லிவிட்டவராம். வெளியில என்ன நடக்குது, எங்கட பாடு என்னண்டு தெரியாம தான் கஸ்டப்பட்டது எண்டு சொன்னேர். அப்ப இருந்து வெளிநாடுகளில வேலை தேடத்தொடங்கினவராம்.

Comments on "நீள நடக்கின்றேன் - 3"

 

post a comment