ஒரு மரத்தை வெறுக்கும்போது - மனுஷ்ய புத்திரன்
நாம் ஒரு மரத்தை வெறுக்கும்போது
முதலில் ஒரு இலையிலிருந்து தொடங்க வேண்டும். நாம் வெறுக்கும்போது கருகும் ஒவ்வொரு இலைக்கும் நாம் விளக்கமளிக்க வேண்டும் ஒவ்வொரு விளக்கத்திற்குப் பிறகும் நம் வெறுப்பு நேர்த்தியாகிக் கொண்டே வரும். மரத்ததை வெறுக்கும்போது வசந்த காலங்களில் வெறுப்பதைத் தவிர்த்துவிட வேண்டும் மலர்களின் நிறங்கள் நம் வெறுப்பை உறுதியிழக்கச் செய்யும் அதன் வாசனை நம்மைப் பின்வாங்கத் தூண்டும். வெறுக்ககப்படும் ஒரு மரத்திலிருந்து அதன் பறவைகள் தப்பிச் செல்லவே விரும்பும் நாம் அதன் அலகுகளைத் திறந்து வெறுப்பபைப் புகட்ட வேண்டும் பிறகு அவை தம் வெறுப்பை வேறொரு மரத்திற்கு எடுத்துச் செல்லும். வெறுப்பினால் அழியும் ஒரு மரத்தின் புழுக்கள் நம் உடல்களில் தொற்றிக் கொள்ளும் நம் வெறுப்பின் தசைகளை அவை தின்று வாழட்டும். நாம் வெறுக்கும் மரத்தின் கிளைகளில் ஒரு மனிதனைத் தூக்கிலிட வேண்டும் இரவெல்லாம் ஒரு மாய அழுகுரலின் சாபம் அம்மரத்தைச் சூழ்ந்திருக்க வேண்டும். ஒரு மரத்தை எவ்வளவுதான் வெறுத்தபோதும் தரையில் அசைந்து கொண்டிருக்கும் அதன் நிழல்களை நம்மால் ஏன் தீண்ட முடியவில்லை. என்பதை நாம் சற்றே யோசிக்க வேண்டும். |
Comments on "ஒரு மரத்தை வெறுக்கும்போது - மனுஷ்ய புத்திரன்"