Sunday, May 16, 2004

இயற்கை விக்/ செயற்கை விக் எது?

மான்ரியலில் கணிசமான அளவில் யூத இன மக்கள் வாழ்கிறார்கள். அதிலும், Orthodox Jew எனப்படும் ஆர்த்தடாக்ஸ் யூதர்கள் ஏறக்குறைய பதினோராயிரம் பேர் வசிக்கிறார்கள். ஆண்கள் மழை, பனி, வெயில் எல்லா நாட்களிலும் கறுப்பு கோர்ட், வெள்ளை ஷர்ட் அணிந்து தலைக்கு கறுப்புத் தொப்பியும் அணிந்திருப்பார்கள். சிறுவர்களும் பெரும்பாலும் கறுப்பு வெள்ளை உடைகளிலேயே இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதே போல, பெண்களும் நீண்ட ஸ்கர்ட்டும், உடலை நன்கு மறைக்கும் மேலாடைகளும் அணிந்திருப்பார்கள். வயதில் சிறிய பெண்களும் அப்படியே. என் வீட்டருகே யூதர்கள் நிறைய வசிப்பதால், அருகில் இருக்கும் பலசரக்குக் கடையிலும் யூதர்களுக்கு ஏற்ற உணவுப்பொருட்களே இருக்கும்.

ஆர்த்தடாக்ஸ் யூதப் பிரிவினைச்சேர்ந்த பெண்கள், திருமணத்திற்குப் அவர்களின் தலைமுடியை பிறத்தியார் பார்வைக்கு காட்டக்கூடாது. ஆகையால் பெரும்பாலான பெண்கள் திருமணம் ஆனதும் wig(கள்ளமயிர்தொப்பி - நன்றி OTL) அணிவார்கள். பல வயதான பெண்கள் Snood என்றழைக்கப்படும் ஸ்கார்·ப் போன்றதொன்றால் தலையை நன்கு மறைத்துக்கொள்வார்கள்.

'விக்' தயார்செய்வதற்காக இந்தியாவில் இருந்து தலைமுடி பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுவதை அறிந்திருப்பீர்கள். இந்தியாவில் தலைமுடி பெருமளவில் கிடைக்கக்காரணம் கோவில்களில் தலைமுடி காணிக்கை கொடுப்பதனால். மனிதர்களின் முடியினால் செய்யப்படும் 'விக்'ஏ மிகச் சிறந்ததும் நீடித்து உழைக்கக்கூடும் என்றும் சொல்கிறார்கள். செயற்கையான தலைமுடியில் செய்யப்படும் 'விக்'ஐ விட இயற்கையான முடியில் செய்யப்படும் 'விக்' பெரும்பாலும் விரும்பப்படுகிறது. நல்லதொரு 'விக்'இற்காக, பல்லாயிரக்கணக்கான டாலர்கள் செலவு செய்யவும் மக்கள் தயங்குவதில்லை.

'விக்' தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பிரச்சினை கொடுக்கக்கூடிய விஷயம் போன புதன் அன்று நடந்தது. Ultra Orthodox Jewக்களின் மதிப்பைப்பெற்ற ராபி ஒருவர் இந்திய தலைமுடியைப் பயன்படுத்தும் 'விக்'குகளைப் பயன்படுத்தவேண்டாம் என்று தடை செய்திருக்கிறார். இந்துமத சடங்களுகளின் வாயிலாக இந்தத் தலைமுடி கிடைக்கிறது என்றும் அம்மாதிரியான சடங்குகளை ஆர்த்தடாக்ஸ் யூத கோட்பாடுகள் ஏற்றுக்கொள்வதில்லை என்பதினால் இந்தத் தடை உத்தரவு. இஸ்ரேலிய இணையப் பக்கம் ஒன்றில் இச்செய்தி வெளியிடப்பட்ட சில மணிநேரத்தில் புரூக்ளின், மான்ரியல் எங்கும் சலசலப்புத் தொடங்கியது.

இயற்கை 'விக்' விற்குமிடங்களில், அவற்றை அகற்றிவிட்டு, செயற்கை விக்குகள் விற்கப்படுகிறது. பெரும்பாலான பெண்கள் snoodஇனால் தலையை மூடிக்கொள்கிறார்கள். Snood விற்பனையும் அதிகரித்துவருகிறது. இன்னமும் மான்ரியலில் Rabbiயாரும் எதுவும் இன்னமும் சொல்லவில்லை. அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் Ultra-orthodox யூத இனப்பெண்கள்.

Comments on "இயற்கை விக்/ செயற்கை விக் எது?"

 

post a comment