Monday, May 10, 2004

நீள நடக்கின்றேன் - 4

இதுதான் இப்போதைக்கு நான் ரயில் பத்திக்கதைக்கப்போற கடைசிப்பதிவு.

உங்களுக்கெல்லாம் சில பிரத்தியேக வாசனைகளை மணத்தோடன ஏதாவது பழைய ஞாபகம் வரத்தொடங்கீரும் என்ன? எனக்கும்தான். மல்லிகை வாசனை மணத்தோடன, புங்குடுதீவு ஞாபகம் வரும். ஜாதிமல்லி மணத்தோட சிதம்பரத்தில் முதன்முதலா வாங்கின முல்லைச்சரம் மணக்கும். மழைபெஞ்சு மண்வாசனை அடிக்கேக்க, அதுக்கு முதல் மணத்ததெல்லாம் ஒரு சுழட்டுச்சுழட்டி வரும். இப்பிடி நிறைய.

அதுமாதிரி பாட்டுக்கேக்கேக்க, 'கிழக்கே போகும் ரயில்' பாட்டுகளைக் கேட்டோடன, தன்றபாட்டுக்கு நான் வெள்ளவத்தைக்குப் போயிருவன். 77 பிரச்சினைக்குப் பிறகு, நாங்க தனிய இருக்கிறது அவ்வளவு நல்லமில்ல எண்டு சொல்லிட்டு ஒரு பெரியப்பா வீட்டில பின்பக்கம் வாடகைக்கு எடுத்துப் போனனாங்க. அங்க போய் கொஞ்ச வருஷம் கழிச்சுத்தான் நான், தம்பி எல்லாம் பள்ளிக்கூடம் போகத்தொடங்கினனாங்க. பள்ளிக்கூடம் சேர்ந்த புதுசில போய்வர வாகனம் இல்லாதபடியா, அப்பா பக்கத்து றோட்டில இருக்கிற அவரிண்ட ·பிரெண்டிட்ட என்னையும் கூட்டியண்டு போய் விடச்சொல்லி இருந்தவர். அப்பாவோட காலமை வெளிக்கிட்டுப்போய், பக்கத்து ரோட்டு, மெயின் ரோட்டோட வந்து சேர்ர சந்தியில நிக்கோணும். சில நேரம் கெதியா வெளிக்கிட்டமெண்டா, நான் அங்கனக்க இன்னும் கொஞ்சம் கூட நேரம் நிப்பன். அப்ப காதில வந்து விழுந்த பாட்டுகள்தான் - கிழக்கே போகும் ரயில் பாட்டுகள். அதுவும் எனக்கு பாட்டெல்லாம் பெருசா ஞாபகம் இருக்கேல்லை. பாஞ்சாலி பாஞ்சாலி எண்டு பரஞ்சோதி எண்டும் சொல்லுறதுதான் ஞாபகம் இருந்தது. பிறகு வேம்படியில் வார்டனிட்டயும் ப்ரின்ஸிபலிட்டயும் கெஞ்சிக்கூத்தாடி அனுமதி கேட்டுப் படம்போடேக்க, இந்தப் படமும் போட்டவை. அந்தப் பாட்டுப்போகேக்க, யூரேக்கா யூரேக்கா எண்டு குதிக்கா குறை. சனமெல்லாம், அமைதியா இருக்கிற இந்தப்பிள்ளைக்கு என்ன நடந்தது? சிவராத்திரியும் அதுவுமா ஏதாவது அடிச்சுக்கிடிச்சுப்போட்டுதோ எண்டு பார்த்தபடி.

பிறகு இந்தியா வந்து ஒரு சுபயோகதினத்தில தூரதர்ஷனில இந்தப் பாட்டுப்போடேக்க, என்ற நினைவலைகளை வீட்டில எடுத்து விட்டன். அண்டைல இருந்து, எப்ப இந்தப்பாட்டைக் கேட்டாலும், அப்பவே ரௌடி ரங்கம்மா ஆயிட்டா எண்டு பகிடி செஞ்சபடி.

பயப்படாதீங்க. பாட்டை எல்லாம் கேக்கோணும் எண்டு உங்களுக்குத் தொல்லை தரமாட்டன். 2002ல நான் விரும்பிப் படிச்ச சில சுட்டிகளைத் தாறன். Time Asia மகசினில வந்த சில கட்டுரைகள்.



ரயில் இன்னும் அலுக்கேல்ல எண்டு சொல்லுறவைக்கு: Railways

Comments on "நீள நடக்கின்றேன் - 4"

 

post a comment